Published : 24 Aug 2015 09:49 AM
Last Updated : 24 Aug 2015 09:49 AM

501 கிளைகளுடன் பந்தன் வங்கி தொடக்கம்: தொழில்முனைவோர்கள் அதிகரிக்க வாய்ப்பு என அருண் ஜேட்லி பேச்சு

11 வருடங்களுக்கு பிறகு முதல் தனியார் வங்கியான பந்தன் வங்கியை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தொடங்கி வைத்தார். 11 வருடங்களுக்கு முன்பு கோடக் மஹிந்திரா வங்கியும், யெஸ் வங்கியும் தொடங்கப்பட்டது. அதன் பிறகு தனியார் வங்கிக்கு இப்போதுதான் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

பந்தன் வங்கி தொடக்க விழா, கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இதில், வங்கியைத் தொடங்கி வைத்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது:

பந்தன் வங்கி மூலம் மேற்கு வங்காளத்தில் பல தொழில் முனைவோர்கள் உருவாவார்கள். வேலைவாய்ப்புகளும் பெருகும். சிறிய தொழில்முனைவோர்கள் நாட்டில் 11 முதல் 12 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கு கிறார்கள். பெரிய நிறுவனங்கள் உருவாக்கும் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். பந்தன் வங்கி போன்ற நிறுவனங்கள் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் சிறிய நிறுவனங்கள் வேகமாக வளரும்.

நாட்டின் கிழக்கு பகுதியில் நிறைய தொழில்முனைவோர்களை உருவாக்குவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியும். சிறு நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. பொதுவாக சிறு தொழில் முனைவோர்கள் வாங்கிய கடனை சரியாக திருப்பிச் செலுத்தி விடுகின்றனர். வாராக்கடன் பிரச்சினை இந்த துறையில் அதிகம் வருவ தில்லை. பந்தன் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனமாக இருந்த போது 7.5 லட்சம் சிறு தொழில்முனைவோர்களுக்கு கடன் கொடுத்திருக்கிறது. அவர் களின் வாராக்கடன் 1 சதவீதம் மட்டுமே.

சில வருடங்களுக்கு முன்பு கொல்கத்தா நகரம் சிவப்பு நிறத்தில் இருந்தது. அப்போது புதிய தொழில்முனைவோர்கள் உருவாகவில்லை. ஏற்கெனவே இருந்த தொழில்முனைவோர் களும் நகரத்தை விட்டு வெளி யேறினர். இடதுசாரிகளின் ஆட்சி முடிந்து இப்போது திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இப்போது நகரம் நீல வண்ணத்தில் இருக்கிறது. இப்போது தொழில் முனைவோர்கள் உருவாவார்கள். தவிர இங்கிருந்து வெளியேறிய தொழில் நிறுவனங்களும் வங்கத் துக்கு திரும்பி வரும்.

இந்தியாவின் கிழக்கு பகுதி வளர்ச்சியடையாமல் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அடையாது. இந்தியாவின் வளர்ச்சிக்கு கிழக்கு பகுதியும் முக்கியம். மத்திய மாநில அரசுகள் கூட்டாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பந்தன் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சந்திரசேகர் கோஷ் கூறும்போது, “நாங்கள் வங்கியாக மாறி இருக்கிறோம். எங்களுடைய முதல் நோக்கம் வாடிக்கையாளர்கள்தான். அனைத்து வாடிக்கையாளர் களையும் சமமாக நடத்துவோம்” என்றார்.

தொடக்க விழாவில், மேற்கு வங்காள நிதியமைச்சர் அமித் மித்ரா, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஹெச்.ஆர்.கான். பங்களாதேஷ் மத்திய வங்கியின் கவர்னர் அதியுர் ரகுமான், எல்ஐசி தலைவர் எஸ்.கே.ராய், ஐடிசி தலைவர் ஒய்.சி.தேவேஷ்வர், நாட்டின் முன்னணி வங்கியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பந்தன் வங்கி தொடங்க கடந்த ஏப்ரலில் கொள்கை அளவில் ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்தது. இறுதி அனுமதி கடந்த ஜூன் மாதம் கிடைத்தது. பந்தன் வங்கியுடன் ஐடிஎப்சி நிறுவனமும் வங்கி தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்தது. ஐடிஎப்சி வங்கி அக்டோபர் 1-ம் தேதி தன்னுடைய செயல்பாட்டினை தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x