Published : 30 Jan 2020 08:18 AM
Last Updated : 30 Jan 2020 08:18 AM

கழிவு பிளாஸ்டிக் மூலம் தார் சாலை: ரிலையன்ஸ் திட்டம்

மும்பை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வீணாகும் பிளாஸ்டிக்கை சாலை கட்டுமானத்துக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

மும்பையில் தாருடன் பிளாஸ்டிக்கை சேர்த்து சாலை அமைக்கப்பட்டது. தாருடன் சேர்க்கப்பட்ட பிளாஸ்டிக் சேர்மத்தை நாடு முழுவதும் பயன்படுத்துவது குறித்து ரிலையன்ஸ் ஆராய்ந்து வருகிறது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் (என்ஹெச்ஏஐ) இது தொடர்பாக ஆலோசனைகளை ரிலையன்ஸ் வழங்கியுள்ளது. சாலை திட்டப் பணிகளுக்கு குறிப்பிட்ட விகிதத்தில் வீணாகும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளது. இத்தகைய தொழில்நுட்பத்தை பின்பற்றுவதன் மூலம் சாலைகள் உறுதியாகவும் இருக்கும். வீணாகும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த முடியும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெட்ரோ கெமிக்கல்ஸ் பிரிவின் தலைமை செயல்பாட்டு அதிகாரி (சிஓஓ) விபுல் ஷா தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஒருசாலையில் தாருடன் வீணாகும்பிளாஸ்டிக் கலவை சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவில் இதை சேர்த்து பயன்படுத்தும்போது சாலையின் தரம் உயரும். நீண்ட காலம் உழைக்கும் என்றும் அவர் கூறினார்.

இப்புதிய தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாதது. அதேபோல சாலை கட்டுமானத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் நாளொன்றுக்கு 25,940 டன் பிளாஸ்டிக் கழிவு உற்பத்தியாகிறது. இந்த கழிவை அகற்றுவது மிகப் பெரிய சவாலாகவே உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே 200 கோடி பெட் பாட்டில்களை மறு சுழற்சிக்கு உட்படுத்திஉள்ளது. இந்த அளவை இரட்டிப்பாக்கவும் ரிலையன்ஸ் முயற்சி மேற்கொண்டுள்ளது. மேலும் இத்தகைய பிளாஸ்டிக்கிலிருந்து சூழல் காப்புடன் கூடிய இழைகளையும் ரிலையன்ஸ் தயாரிக்கிறது.

தாருடன் 8 சதவீதம் முதல் 10சதவீதம் பிளாஸ்டிக்கை சேர்ப்பதன் மூலம் சாலை அமைப்பு உறுதிப்படும். அத்துடன் சாலையில் நீர்புகா தன்மை கொண்டதாக இருக்கும். இத்தகைய தொழில்நுட்பம் மூலம் ஒரு கிலோமீட்டர் சாலை அமைக்க ஆகும் செலவில் ரூ. 1 லட்சம் வரைமீதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலவை தயாரிப்பது தொடர்பான விவரம்,உற்பத்தித் திறன் உள்ளிட்ட விவரம் எதையும் வெளியிடவில்லை.

ரிலையன்ஸ் நிறுவனம் 50 டன் வீணான பிளாஸ்டிக் மூலம் 40 கிலோமீட்டர் சாலையை அமைத்துள்ளது. இந்த சாலையானது நிறுவனத்தின் நகோத்தம் உற்பத்தி ஆலை வளாகத்தில் அமைந்துள்ளது.

மக்கள் உபயோகித்து வீசி எறிந்த வேஃபர்ஸ், பேக்கேஜிங் பொருள், பிளாஸ்டிக் பைகள், கழிவு போடப்படும் பைகள் உள்ளிட்டவற்றின் மூலம் கழிவு பிளாஸ்டிக் தயாரிக்கப்பட்டு அது தாருடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x