செய்திப்பிரிவு

Published : 12 Sep 2019 20:15 pm

Updated : : 12 Sep 2019 20:16 pm

 

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது எப்படி? - மன்மோகன் சிங் விரிவான விளக்கம்

manmohan-singh-explains-the-economic-fall-out-after-demonetisation-and-gst

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு பொருளாதார நிபுணரும் கூட. நரேந்திர மோடி அரசு ‘தலைப்புச் செய்தி மேலாண்மைப் பழக்கத்திலிருந்து வெளியே வர வேண்டும்’, நாட்டின் பொருளாதாரச் சவால்களைச் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தி இந்து பிசினஸ்லைன் இதழுக்கு அவர் அளித்த நெடிய பேட்டியில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையும், ஜிஎஸ்டியை அவசரம் அவசரமாக அமல்படுத்தியதும் பொருளாதாரத்தில் இப்போதைய தாக்கங்களை வடிவமைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

அந்த நீண்ட பேட்டியில் அவர் பணமதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டியும் எப்படி பொருளாதாரத்தைப் பாதித்தது என்று விளக்கியதாவது:

பணப்புழக்க நெருக்கடியினால் தற்போதைய நெருக்கடி உருவாகியுள்ளது. கட்டமைப்பு சாரா இன்பார்மல் பொருளாதாரம் பெரும்பாலும் பணப்புழகத்தினாலேயே நடைபெறுகிறது. இந்தியா இந்தப் பொருளாதாரத்தை சார்ந்ததுதான். இந்தப் பிரிவில் பெரும்பகுதி நியாயமான பொருளாதார நடவடிக்கைகள் உள்ள பிரிவு, வரிவரம்புக்குக் கீழே உள்ள பிரிவு, ஆகவே இவற்றை ஏதோ ‘கருப்பு’ப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இவற்றைப் பார்க்கக் கூடாது. உதாரணமாக விவசாயம் ஜிடிபியில் 15% பங்களிப்புக் கொண்டது. இது பெரும்பாலும் ரொக்கத்தில் தான் நடைபெறும் துறையாகும். பெரும்பாலும் வரிவிலக்கு உடையவை. இந்நிலையில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் விவசாயப் பொருளாதாரம் கடும் பாதிப்படைந்தது.

செண்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் இகானமி என்ற அமைப்பு ஜனவரி- ஏப்ரல் 2017- காலக்கட்டத்தில் கட்டமைப்பு சாரா பிரிவில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் தாக்கத்தினால் 1.5 மில்லியன் பேர் வேலை இழந்துள்ளனர் என்று கூறியுள்ளது. இதனால் எதிர்க்குடிப்பெயர்வு ஏற்பட்டு நகரங்களில் வேலையின்றி கிராமங்களை நோக்கிச் செல்லத் தொடங்கினர். இதனையடுத்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி கோரி தேவைப்பாடு அதிகரித்தது. அப்போதைய நிதியமைச்சர் மறைந்த அருண் ஜேட்லி பட்ஜெட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு சாதனையான நிதி ஒதுக்கப்பட்டதாகத் தெரிவித்தது, கிராமப்புற பொருளாதாரத்தின் துயர நிலையை ஒப்புக் கொள்வதாகத்தான் பொருள்.

மற்ற வேலைவாய்ப்புகள் பறிபோகும் போது கிராமப்புற மக்கள் இந்த மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தை எதிர்நோக்குவார்கள், அப்படிப்பட்ட டிமாண்ட்டினால் உந்தப்படும் துறையாகும் இது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஓராண்டுக்குப் பிறகு கார்ப்பரேட் முதலீடுகள் ஜிடிபியில் 7%லிருந்து 2.7% ஆகக் குறைந்தது என்று சமீபத்தில் கேள்விப்பட்டோம். 2010-11 காலக்கட்டங்களில் கார்ப்பரேட் முதலீடு ஜிடிபில் 15% ஆக இருந்ததுண்டு. இதன் மூலம் தெரிவது என்னவெனில் ஒழுங்குமுறைக்குட்பட்ட ஆர்கனைஸ்டு தொழிற்துறையையும் பணமதிப்பு நீக்கம் பாதித்துள்ளது என்பதையே. சிறு, குறு நடுத்தர தொழிற்துறை பெரிய அளவில் அடிவாங்கியது.

நமது மோசமான பயம் இப்போது உண்மையாகிவிட்டது. பணமதிப்பு நீக்கத்தினால் வளர்ச்சிக்கு ஏற்பட்டுள்ள சேதம் நீண்ட காலத்திற்கானது ஆழமானது என்பதை இப்போது உணர்கிறோம். பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பின்னதிர்வுகளை நாம் உணர்ந்து கொண்டிருக்கும் போதே ஜிஎஸ்டியை அத்தனை அவசரம் அவசரமாக அமல்படுத்தினர். இதுவும் பொருளாதாரத்திற்கு பெரிய அடியைக் கொடுத்தது. ஜிஎஸ்டி என்பது ஒரு அமைப்பார்ந்த சீர்த்திருத்தம் யுபிஏ ஆட்சியின் போது இதனை அறிமுகப்படுத்த கடினமாக முயற்சி செய்தோம். ஆகவே ஜிஎஸ்டி சீர்த்திருத்தத்தை நாங்கள் ஆதரிக்கவே செய்கிறோம். ஆனால் அது மோசமாக அமலாக்கம் செய்யப்பட்டது. இதனால் என்ன ஆனது? ஜிஎஸ்டி கெடுபிடிகளால் பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களிடமிருந்து வாங்குவதை நிறுத்தியது. காரணம் ஜிஎஸ்டி ரசீதுகள் கொடுக்க முடியக்கூடிய நிறுவனங்களிலிருந்துதான் பெரிய நிறுவனங்கள் கொள்முதல் செய்யும். இதனால் சிறுகுறு நடுத்தர தொழிலகங்கள் பெரிய அடி வாங்கத் தொடங்கின. மேலும் ஜிஎஸ்டியில் தகுதி பெறாத சிறிய இந்திய நிறுவனங்களிலிருந்து கொள்முதலை பெரிய நிறுவனங்கள் நிறுத்தியதோடு இறக்குமதிக்குச் சென்று விட்டனர் சிலர். நாட்டின் ஒட்டுமொத்த சப்ளை சங்கிலிகள் பெரிய அளவில் உடைந்தது. இப்போது நமக்குத் தெரிகிறது சீனப் பொருட்கள் நம் சந்தையை நிரப்பத் தொடங்கியது.

மேலும் வரி அதிகாரிகள் வரி செலுத்துவோரை கடுமையாக துன்புறுத்துவதான செய்திகளையும் நாம் பார்க்கிறோம். ஆகவே பணமதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டியும் சேர்ந்து நம் பலவீனமான தொழிலாளர்களின் வேலையிழப்புடன் பெரிய வேலையிழப்புகள் ஏற்பட்டது.

இவ்வாறு அந்த நீண்ட பேட்டியில் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

-தி இந்து பிசினஸ்லைன்

Manmohan Singh Explains the economic fall-out after Demonetisation and GSTபணமதிப்பிழப்பு ஜிஎஸ்டி ஆகியவற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது எப்படி? - மன்மோகன் சிங் விரிவான விளக்கம்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author