Published : 06 Sep 2019 04:56 PM
Last Updated : 06 Sep 2019 04:56 PM

ஜிஎஸ்டி வரி; மாநில நிதியமைச்சர்களுடனும் பேசுங்கள்: வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

புதுடெல்லி

கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து மாநில நிதியமைச்சர்களுடன் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும் என நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
ஆட்டேமொபைல் துறை நெருக்கடியை தீர்ப்பதற்காக, வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை ஏற்க முடியாது கேரளா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உலகளாவிய பொருளாதாரச் சூழலால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் சூழல் உள்ளது. அமெரிக்கா- சீனா வர்த்தகப் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது.
இதுபோலவே, ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாக காணப்படும் வர்த்தகச் சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார சுணக்கத்தால் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை குறைக்கவும், ஆலைகளுக்கு விடுமுறையை அறிவித்து வருகின்றன. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழல் உருவாகி வருகிறது.

இதையடுத்து ஆட்டேமொபைல் துறைக்கு பல்வேறு சலுகைளை அளிக்க மத்திய அரசு முன் வந்துள்ளது. இதன் ஒருபகுதியாக வாகனங்கள் விற்பனைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை குறைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்க ஆண்டு மாநாட்டில் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:
‘‘வாகனங்களுக்கு தற்போது 18 முதல் 28 சதவீதம் வரை வெவ்வேறு வகையில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியை குறைக்க வேண்டும் என வாகன உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜிஎஸ்டி வரியை பொறுத்தவரையில் முதலில் அதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி வழங்க வேண்டும். எனவே இதுபற்றி மாநில நிதியமைச்சர்களுடன் கலந்து பேசி இறுதி முடிவு எடுப்போம். வாகன உற்பத்தியாளர்கள் இந்த விவகாரம் குறித்து மாநில நிதியமைச்சர்களுடனும் பேச வேண்டும். இதன் மூலம் ஜிஎஸ்டி பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x