Published : 23 Aug 2019 06:04 PM
Last Updated : 23 Aug 2019 06:06 PM
புதுடெல்லி, பிடிஐ
சர்வதேச நாடுகளுடன் ஒப்பிட்டு இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையில் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் சர்வதேசத் தரக் கட்டுப்பாட்டு நிறுவமான மூடிஸ் 2019-ம் ஆண்டுக்கான இந்திய பொருளாதார வளர்ச்சியை அல்லது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) தனது முந்தைய கணிப்பான 6.8% லிருந்து 6.2%ஆகக் குறைத்துள்ளது.
அதே போல் 2020ம் ஆண்டுக்கான ஜிடிபி விகிதத்தையும் மூடிஸ் 0.6% குறைத்து 6.7% என்று மதிப்பிட்டுள்ளது. 16 ஆசிய நாடுகளுக்கான வளர்ச்சி முன்கணிப்பை வெளியிட்டுள்ள மூடிஸ் பலவீனமான வர்த்தகம் மற்றும் முதலீடு ஜிடிபி வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும் என்று கூறியுள்ளது.
“புற அழுத்தங்களுக்கு பெரிய அளவில் இந்தியா பாதிக்கப்படாத போதிலும் இந்தியப் பொருளாதாரம் பலவிதமான காரணிகளினால் மந்தநிலையில் தான் உள்ளது. வேலைக்கு ஆட்களை எடுக்காத நிலை, கிராமப்புற வீடுகளின் நிதிக் கடினப்பாடுகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் இறுக்கமான நிலைமை உள்ளிட்ட காரணங்களினால் இந்தியப் பொருளாதாரம் மந்தகதியில் உள்ளது” என்று மூடிஸ் தெரிவிக்கிறது.
இந்தியப் பொருளாதாரத்தில் உள்ளூர் காரணிகளே அதிக தாக்கம் செலுத்துகின்றன என்று கூறும் மூடிஸ், வர்த்தகச் சூழல் மிதமானதும் கார்ப்பரேட்டுகளுக்கு மந்தகதியில் கடன் போக்குவரத்தும் நாட்டின் முதலீடு பலவீனமானதில் பங்களிப்பு செய்துள்ளது என்று கூறியுள்ளது.
“மிதமான வர்த்தகச் சூழல், கார்ப்பரேட்டுகளுக்கு மந்தகதியில் கடன் போக்குவரத்து ஆகியவை முதலீடு பலவீனத்துக்கு இந்தியாவில் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது” என்று மூடிஸ் கூறியுள்ளது.
ஆனால் இந்தியப் பொருளாதாரம் 2017-ல் 6.9% ஆகவும் 2018-ல் 7.4% ஆகவும் விரிவாக்கம் பெற்றது என்று கூறும் மூடிஸ் ஜனவரி-மார்ச் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5 ஆண்டுகால தாழ்வை எட்டி 5.8%ஆகக் குறைந்தது,
இந்நிலையில் ஆகஸ்ட் 30ம் தேடி ஏப்ரல்-ஜூன் முதல் காலாண்டு வளர்ச்சி நிலவரங்களை அரசு அறிவிக்கும்.
மேலும் பணவீக்கம் விகிதம் 3.7% ஆக இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கும் மூடிஸ், அடுத்த ஆண்டு 4.5% ஆக அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.