Published : 23 Aug 2019 12:09 PM
Last Updated : 23 Aug 2019 12:09 PM

70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார தேக்கநிலை: நிதி ஆயோக் துணைத் தலைவர் எச்சரிக்கை

புதுடெல்லி,

நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார தேக்கநிலை இருப்பதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

மிட்மைன் சம்மிட் 2019 என்ற தலைப்பில் ஹீரோ க்ரூப் நேற்று (வியாழக்கிழமை) நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆட்டோமொபைல் துறையில் சரிவு, தனியார் நிறுவனங்களில் ஆட் குறைப்பு என இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ள நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ராஜீவ் குமார் பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அவர் "கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவுகிறது. ஒட்டுமொத்த நிதித்துறையும் இதுபோன்றதொரு சுழலில் சிக்கியதில்லை. அரசாங்கம் இந்த சூழலில் தனியார் துறையின் தயக்கங்களைக் களைய ஏதாவது உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

பிரச்சினை நிதித்துறையில்தான் நிலவுகிறது என்பதை அரசாங்கம் சரியாகப் புரிந்திருக்கிறது என்றால் இதனை உடனே செய்ய வேண்டும்.
இப்போது நிலவும் பணப்புழக்க தேக்க நிலை கிட்டத்தட்ட நொடிந்த நிலையை நோக்கிச் செல்கிறது. அதனால் உடனடியாக இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

இங்கே யாருக்கும் யார் மீதும் நம்பிக்கையில்லாமல் போய்விட்டது. அரசாங்கத்தை விடுங்கள் தனியார் துறையே இப்போது யாருக்கும் கடனளிக்க முன்வருதில்லை. எல்லோரும் பணத்தை காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமல், ஐபிசி ஆகியனவற்றிற்குப் பின்னர் கடந்த 4 ஆண்டுகளாகவே ஒட்டுமொத்தமாக பொருளாதார நிலைமை மாறிவிட்டது. அதற்கு முன்னதாக 10,20,30 ஏன் 35 சதவீத பணமாவது ரொக்கமாக புழக்கத்தில் இருக்கும். இப்போது அது மிக மிக குறைந்துவிட்டது.
இதற்கு காரணமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் இரண்டு பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, இந்த சூழலில் வழக்கமான நடவடிக்கைகளையும் தாண்டி சில அசாதாரண நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக இந்த அரசாங்கம் தனியார் நிறுவனங்கள் மத்தியில் நிலவும் தயக்கத்தைப் போக்க உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்" என்றார்.

அவரின் இந்தக் கருத்து விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம் குறித்த நொமுரா (NOMURA) அறிக்கையில், நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 5.7 சதவீதமாகக் குறைய வாய்ப்பிருக்கிறது. இதற்குக் காரணம் நுகர்தல் குறைந்தமை, பலவீனமான முதலீடுகள் மற்றும் சர்வீஸ் செக்டாரின் மந்தநிலை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜூலை - செப்டம்பர் இடையேயான காலகட்டத்தில் பொருளாதாரம் சற்று மீண்டெழ வாய்ப்புள்ளது என்று நொமுரா அறிக்கை கூறியுள்ளது சற்றே ஆறுதல் அளிக்கும் விஷயம்.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x