செய்திப்பிரிவு

Published : 19 Aug 2019 13:47 pm

Updated : : 19 Aug 2019 14:29 pm

 

அமெரிக்காவில் 2020-ல் பொருளாதார மந்தநிலை? - நிபுணர்கள் எச்சரிக்கை

us-economists-expect-recession-in-2020-or-2021-survey

நியூயார்க்

அமெரிக்காவில் 2020 அல்லது 2021-ம் ஆண்டுக்குள் பெரிய அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகளாவிய பொருளாதாரச் சூழலால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் சூழல் உள்ளது. அமெரிக்கா- சீனா வர்த்தகப் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. இதுபோலவே, ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாக காணப்படும் வர்த்தகச் சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பாவில் பெரிய அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை அண்மையில் உயர்ந்து வருகிறது.

ஆனால் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பில்லை என அதிபர் ட்ரம்ப் மற்றும் அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.


ஆனால், பொருளாதார சுணக்கத்தால் 2020-ம் ஆண்டு அல்லது 2021-ம் ஆண்டில் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் தேசிய வர்த்தக பொருளாதார அமைப்பு ஆய்வு செய்து தகவலை வெளியிட்டுள்ளது. கான்ஸ்டன்ஸ் ஹண்டர் கூறியதாவது:

‘‘அமெரிக்காவின் பொருளாதாரச் சூழல் குறித்து விரிவான ஆய்வு நடத்தியுள்ளோம். இதுதொடர்பாக நிபுணர்களிடமும் கருத்துக் கணிப்பு நடத்தினோம். 38 சதவீதம் பேர் அடுத்த ஆண்டும், 34 சதவீதம் 2021-ம் ஆண்டும் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதுகின்றனர்.

அதிகமானோர் அடுத்த ஆண்டு தான் பொருளாதார மந்தநிலை ஏற்படும் எனக் கூறியுள்ளனர். அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி குறைப்பு உள்ளிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி வெளிநாட்டுப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் முயற்சியை அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டுள்ளார். ஆனாலும் இதுபோன்ற முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை’’ எனக் கூறினார்.

2020-ல் பொருளாதார மந்தநிலைஅமெரிக்காUS economistsRecession in 2020
Popular Articles

You May Like

More From This Category

More From this Author