

புதுடெல்லி: புலம்பெயர் தொழிலாளர் நலனுக்காக மாநிலங்களுக்கான 5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர் விநியோகம் 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் காரணமாக சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி, மும்பை, சூரத் உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்களை பெறுவதற்கான நடைமுறைகளை எண்ணெய் நிறுவனங்கள் எளிமைப்படுத்தி உள்ளன.
ஆதார், பான், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஓர் அடையாள அட்டையை காண்பித்து காஸ் விநியோக நிறுவனங்களிடம் இருந்து 5 கிலோ சிலிண்டரை எளிதாக பெற்றுக் கொள்ளலாம். முன்தொகை செலுத்த தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து 5 கிலோ சிலிண்டர் விநியோகத்தை அதிகரிக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இது குறித்து அந்த அமைச்சகத்தின் செயலாளர் நீரஜ் மிட்டல் வெளியிட்ட அறிக்கையில், ”புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மாநிலங்களுக்கு 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு 5 கிலோ சிலிண்டர்களின் விநியோகம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டு உள்ளது. காஸ் விநியோக நிறுவனங்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு இன்றி 5 கிலோ சிலிண்டர்களை வழங்க வேண்டும். இதை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” என கூறப்பட்டு உள்ளது.