Last Updated : 05 May, 2015 09:53 AM

 

Published : 05 May 2015 09:53 AM
Last Updated : 05 May 2015 09:53 AM

சென்செக்ஸ் ஒரே நாளில் 479 புள்ளிகள் ஏற்றம்: ஆட்டோமொபைல் துறை பங்குகள் விலை உயர்வு

இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று ஏற்றமான வர்த்தகத்தைக் கண்டன. இந்த மாதத்தில் ஒரே நாளில் அதிக புள்ளிகள் ஏற்றத்தைச் சந்தித்த வர்த்தக தினமாக நேற்று அமைந்தது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 479 புள்ளிகள் ஏற்றத்தைக் கண்டு 27490 புள்ளிகளில் முடிந்துள்ளது.

தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 150 புள்ளிகள் ஏற்றம் கண்டு 8331 புள்ளிகளில் முடிந்துள்ளது. கடந்த மூன்று வாரங்களில் சந்தை சுமார் 7 புள்ளிகள் சரிவடைந்திருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சந்தை கிட்டத்தட்ட 2 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.

நேற்றைய வர்த்தகத்தில் மிட்கேப் பங்குகள் 1.3 சதவீதமும், ஸ்மால்கேப் பங்குகள் 2 சதவீத ஏற்றத்தையும் சந்தித்தன. 1956 பங்குகள் விலை உயர்ந்தது. 835 பங்குகள் விலை சரிந்தும் வர்த்தகம் ஆனது. ஐடி, பார்மா, ஆட்டோமொபைல், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், பவர் மற்றும் ரியாலிட்டி துறை பங்குகள் ஏற்றத்தைக் கண்டன.

ஆட்டோமொபைல் துறை பங்குகள் நேற்று 284 புள்ளிகள் ஏற்றம் கண்டது. நடப்பாண்டு துவக்கம் ஆட்டோமொபைல் துறைக்கு சாதகமாக உள்ளது என்று பங்குச் சந்தை முகவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மாருதி சுஸூகி நிறுவனத்தின் 30 சதவீதம் விற்பனை வளர்ச்சி இந்த நம்பிக்கையை அளித்துள்ளது. பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் அசோக் லேலாண்ட் நிறுவனங்களின் ஏப்ரல் விற்பனை வளர்ச்சி காரணமாக ஆட்டோமொபைல் துறை ஏற்றம் கண்டது.

ஆதித்யா பிர்லா நிறுவனம் தனது சில்லரை வர்த்தகப் பிரிவில் மதுரா பேஷன்ஸ் மற்றும் ஆதித்யா பிர்லா நுவா நிறுவனத்தை பாந்தலூன் நிறுவனத்தோடு இணைக்க உள்ளது.

இதன் காரணமாக ஆதித்யா பிர்லா நுவா நிறுவனப் பங்குகள் நேற்று 12 சதவீதம் வரை ஏற்றம் கண்டது. ஓஎன்ஜிசி பங்குகள் நேற்று 8 சதவீதம்வரை ஏற்றம் கண்டது. மேலும் பஜாஜ் ஆட்டோ 7.15%, சிப்லா 5.93%, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 5.02%, ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் 4.46% பங்குகள் ஏற்றத்தைக் கண்டன.

நேற்றைய வர்த்தகத்தில் டெக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், லார்சன் டூப்ரோ நிறுவனப் பங்குகள் இறக்கத்தைக் கண்டன.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 63.42 என்கிற நிலையில் இருந்தது. சர்வதேச சந்தைகளில் ஏற்றமான வர்த்தக நிலைமை இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x