Published : 16 May 2015 10:36 AM
Last Updated : 16 May 2015 10:36 AM

தொழில் ரகசியம்: கூடி வாழ்ந்தால் கோடிகள் குவியும்!

குருவி கட்டும் கூட்டுக்குள் குண்டு வைக்கக் கூடாது என்று பாடியும் கூட்டுக் குடும்பங்கள் வேட்டு வைத்து தகர்க்கப்பட்டு நியூக்ளியர் குடும்பங்கள் பெருகி வருகின்றன. `கிரேஸி மோகன்’ கூறுவது போல், கணவன் மனைவி சேர்ந்திருந்தாலே கூட்டுக் குடும்பம் என்று சந்தோஷப்பட வேண்டியது நிலைமை இன்று!

தொழில் ரகசியம் பகுதியில் குடும்பப் பிரச்சினை பற்றிப் பஞ்சாயத்து எதற்கு?

ஏனெனில் இந்த நாட்டுத் தொழில் களில் 80 சதவீதத்திற்கும் மேல் குடும் பங்களால் நிர்வகிக்கப்படுகிகின்றன. பலசரக்கு கடை முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை குடும்பங்கள் நிர்வாகம் செய்கின்றன.

குடும்பம் பிரிந்தால் உறவுகள் பிரியும். அது வீட்டுப் பிரச்சனை. அவ்வளவே. அதே குடும்பம் ஒரு கம்பெனியை நிர்வகிக்கும்போது வீட்டோடு தொழிலையும் பாதிக்கிறது. கம்பெனியில் பணிபுரிபவர் பிரச்சினை யாகிறது. நாட்டின் பிரச்சினையாகிறது.

பிரியும் உறவுகள்

பெரும்பாலும் குடும்பத் தொழில் கள் மூன்றாவது தலைமுறை தாண்டு வதற்குள் மூச்சு முட்டி, மோதல் ஆரம்பித்து அண்ணன் தம்பிகள் அடித்துக்கொண்டு, அக்கா தங்கைகள் சண்டையிட்டுக்கொண்டு திரிகிறார்கள். இதை நான் சொல்லவில்லை. உலக ஆய்வுகள் கூறுகின்றன.

‘பிர்லா’ குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை கர்லா கட்டையால் சண்டையிட்டுக் கொண்டது. பஜாஜ் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை பேஜாராகி பஜாரில் இறங்கி சண்டையிட்டது. அம்பானி குடும்பம் ஒரு படி மேலே சென்று இரண்டாவது தலைமுறையிலேயே இடித்துக்கொண்டு நின்றது.

சிறக்கும் நிறுவனங்கள்

அதற்காக எல்லா குடும்பங்களும் இப்படி சட்டையைப் பிடித்து, கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டு, வீச்சரிவாளை வீசி, கோர்ட்டிற்கு செல்லும் ரகமில்லை. குடும்ப தொழிலாய் பிறந்து, ஒன்றாக இருந்து, பலர் கண்பட தழைக்கும் கம்பெனிகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஜெர்மனியைச் சேர்ந்த `மெர்க்’ 1668ல் குடும்ப கம்பெனியாய் பிறந்து இன்று வரை ஜர்க் இல்லாமல் ஸ்மூத்தாய் பயணிக்கிறது. 1868ல் துவங்கிய `டாடா’ இன்றும் டாப்பாகத்தான் இருக்கிறது. 1897ல் ஆரம்பித்த `கோத்ரெஜ்’ அவர்கள் பீரோவைப் போல் இன்றும் உறுதியாக இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த ‘முருகப்பா குழுமம்’ நூறு வருடங்களாக முன்னணியில் நின்று முன்னேறி வருகிறது.

சேர்ந்திருக்க பல வழிகள்

குடும்பங்கள் சேர்ந்திருப்பது எப்படி என்று தெரிந்துகொள்ள பல புத்தகங்கள் உண்டு. குடும்பத் தொழில் சேர்ந்திருந்து தழைக்கும் விதங்களை ஆராய்ந்து எழுதியிருக்கிறார் ‘கவில் ராமச்சந்திரன்’. ’The ten commandments of Family Business’ என்ற புத்தகத்தில் குடும்ப தொழில்களுக்கு அறிவுரை பல கூறியிருக்கிறார்.

நடுவர் நியமனம்

பேசித் தீர்க்க முடியாத பிரச்சினை ஏதுமில்லை. குடும்பத் தொழிலை நிர்வகிப்பவர்கள் ரெகுலராக உட்கார்ந்து பேசினாலே பிரச்சினைகள் பிறக்காது. பிரச்சினைகளைப் பிரித்து மேய்ந்து அலசி முடிவெடுக்காமல் விடுவதில்லை என்று வைராக்கியத்துடன் பேசுங்கள். பேச்சை முறைப்படுத்த முடிந்தால் சாலமன் பாப்பையா போல் ஒரு நடுவரை, நிர்வாக ஆலோசகராக வைத்துக்கொண்டாலும் தப்பில்லை.

தழைக்கும் குடும்பத் தொழில்

தமிழகமெங்கும் கடை திறந்து விரிந்து வெற்றி பெற்றிருக்கும் மதுரையைச் சேர்ந்த ‘தங்கமயில் ஜுவல்லரி’ கட்டுக்கோப்பான ஒரு குடும்பத் தொழிலாகவே இன்றும் திகழ்கிறது. இதற்கு முக்கியக் காரணம் கம்பெனியை துவங்கிய சகோதரர்களும் அடுத்த தலைமுறையும் தங்கள் குடும்பங்களோடு சேர்ந்து மாதமொரு முறை மனம் விட்டு அனைத்து விஷயங்களையும் முறையாகப் பேசுகிறார்கள். பேசுவதோடு நில்லாமல் என்னென்ன பேசப்பட்டது, என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்ற மீட்டிங் மினிட்ஸ் எழுத்து பூர்வமாக அனைவருக்கும் தரப்படுகிறது.

ஒளிவுமறைவு இல்லாத பேச்சு பரிவர்த்தனையே தங்கள் வெற்றிக்கு அடிப்படை என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். அதோடு குடும்பத்தின் பிணைப்புதான் தங்கள் தொழிலின் அஸ்திவாரம் என்பதை உணர்ந்து செயல்படுகிறார்கள். அதானாலேயே குடும்பத்தோடு தங்கள் தொழிலையும் தழைக்க வைக்க முடிகிறது அவர்களால்.

பிரச்சினைகள் வரும். பிரச்சினைகள் இல்லாத குடும்பங்கள் உண்டா? சேர்ந்து அமர்ந்து பேசும்போது பிரச்சினைகள் தீர வழி கிடைக்கும். மனம் தெளிவாகும். எண்ணங்களில் மட்டுமல்ல, உறவு களிலும் தெளிவு பிறக்கும்.

தொழில் ரீதியிலான அணுகுமுறை

குடும்பத் தொழில்கள் நசிய இன்னு மொரு காரணம் தொழில்முறை (புரொபஷனலிஸம்) இல்லாத நிர் வாகம். பிள்ளைகள் பெற்றுவிட்டோம் என்பதற்காக அனைவருக்கும் பிசினஸில் ஏதாவது ஒரு பொறுப்பை கொடுக்கவேண்டும் என்ற தலை யெழுத்து இல்லை. கட்டித் தொலைத்த பாவத்திற்காக மனைவியின் தம்பிக்கு வேலை கொடுக்கவேண்டும் என்ற அவசியமில்லை.

இப்படி கொடுத்து தொலைப்பதால்தான் தொல்லைகள் ஆரம்பிக்கின்றன. இதற்குத்தான் நிர்வாகங்களுக்கு புரொபஷனலிஸம் தேவைப்படுகிறது. வெளி ஆட்களுக்கு வேலை கொடுப்பதுதான் புரொபஷன லிஸம் என்றில்லை. விருப்பு வெறுப் பில்லாமல் கம்பெனி நிர்வாகத்திற்கு யார் பொருத்தமானவரோ அவரை நியமித்து, நிர்வாகத்திற்கு எது தேவையோ அதை செய்வது தான் புரொபஷனலிஸம்.

குறுக்கீடு கூடாது!

பொறுப்பை ஒருவருக்கு கொடுத்த பின் அவர் உங்கள் மகனே ஆனாலும் அவர் வேலையில் குறுக்கிடாதீர்கள். அவருக்குக் கீழ் உள்ளவர்களை அழைத்து விசாரிப்பது, அவர்களுக்கு உத்தரவுகள் போடுவது என்று செய்தால் நிர்வாகம் எடுப்பார் கைப்பிள்ளையாகி தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்றாகி கேட்க நாதியில்லாத நாசத்தில் போய் நிற்கும்.

குடும்பத் தலைவர்கள் பலர் உயில் எழுதுவதில்லை. ஏதோ உயில் எழுதிவிட்டால் அன்றிரவே நடு வீட்டில் தலைமாட்டில் விளக்கெறிய படுக்க வேண்டியிருக்குமோ என்ற பயம். குடும்பத் தொழிலிலும் இதே நிலைதான். Succession planning என்று ஒன்று இருப்பதே நம்மவர்களுக்கு தெரியாது.

ஏதோ சாகாவரம் பெற்று சாஸ்வதமாய் நிர்வாகம் செய்யும் மார்கண்டேய மேனேஜர் போல் இருந்து விட்டு கடைசியில் போட்டோவில் மாலை தொங்க சிரிக்கும் காலம் வரும் போது அடுத்த தலைமுறை நான், நீ என்று அடித்துக்கொண்டு வீதியில் நிற்கும். தொழில் தேய்ந்து காய்ந்து கருகும்.

வழிவிடுங்கள்

இருக்கும்போதே அடுத்த தலைமுறைக்கு வழி விட்டு அவர்களை வழிநடத்திச் சென்றால் இந்தப் பிரச்சினை வராது. அடுத்த தலைமுறையில் யார் எந்த பொறுப்புக்கு சிறந்தவர் என்று கண்டறிந்து அவரை அந்த பொறுப்புக்கு தகுதியுடையவராக வளர்ப்பது குடும்பமும் தொழிலும் சேர்ந்து தழைக்க உதவும்.

நேரடி பயிற்சி அவசியம்

தொழிலதிபர்கள் பலர் தங்கள் பிள்ளை படிப்பு முடிந்து பரிட்சை எழுதிய கையோடு பரிட்சை பேப்பரை மடித்துக் கொடுத்து விட்டு நேராக ஆபிஸ் வந்து தொழிலை கவனிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் வெளி கம்பெனிகளில் சில காலம் பணி புரிந்து அனுபவம் பெற்று சொந்த தொழிலுக்கு வருவதே சிறந்தது என்பது வல்லுனர் களின் கருத்து.

நல்ல கம்பெனியில் வேலை செய்தால் அதன் சூழலையும், படிப்பினைகளையும் கற்று அதை சொந்த தொழிலில் செயல்படுத்த முடியும். முதலாளியாய் இல்லாமல் சாதாரண ஊழியனாய் இருக்கும்போது கிடைக்கும் படிப்பினைகளுக்கு ஈடு இணை இல்லை. சொந்த கம்பெனியில் ஊழியனாய் இருக்க முடியுமா? இருக்க விடுவார்களா?

நிர்வாகக் கல்லூரிகள்

குடும்ப தொழில்களை நிர்வகிக்கும் முறைகளை நிர்வாக கல்லூரிகள் பாடமாகவே கற்றுக்கொடுக்கின்றன. முடிந்தால் சேர்ந்து படியுங்கள். ஃபெயில் ஆகிவிட்டால் ‘ஸ்டாண்ட் அப் ஆன் தி பெஞ்ச்’ என்பார்களோ என்று பயப்படா தீர்கள். குடும்ப தொழில் புரிபவர்கள் தான் உங்கள் வகுப்பில் இருப்பார்கள். அவர்கள் கஷ்டங்களை தெரிந்துகொண் டால் சற்று ஆறுதலாகக் கூட இருக்கும்!

நீங்கள் சிரித்தால் உலகம் சேர்ந்து சிரிக்கும். நீங்கள் அழுதால் உலகம் இன்னும் பலமாய் சிரிக்கும்! குடும்ப சண்டையையே வேலையை விட்டு வேடிக்கை பார்க்கும் சமுதாயம் குடும்பத் தொழில் சண்டையிட்டால் சும்மா இருக்குமா? லீவ் போட்டு உட்கார்ந்து பார்க்கும். டீவி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும். குடும்ப மானம் கொத்தாய் போகும். குடும்பத் தொழில் குட்டிச்சுவராய் ஆகும்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. கூடி நிர்வகித்தால் கோடி கோடியாய் புரளும் என்பது உண்மை!

satheeshkrishnamurthy@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x