Published : 15 Apr 2015 11:28 AM
Last Updated : 15 Apr 2015 11:28 AM

தொழிலாளர்கள் தட்டுப்பாட்டில் ஜெய்ப்பூர் நகை தொழில்

250 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது ராஜஸ்தான் ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி தொழில். அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த இந்த ஜெய்ப்பூர் நகைகள் உற்பத்தி தொழில் நலிவடைந்து வருகிறது. இந்த தொழிலில் ஈடுபடக்கூடிய தொழி லாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் தொழில் நலி வடைந்து வருவதாக உள்ளூர் நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

ஜெய்ப்பூரின் ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி தொழில் இந்திய அளவில் முக்கிய இடத்தை வகிக்கிறது. ஏற்றுமதியில் ஆண்டுக்காண்டு வரலாறு படைத்து வருகிறது. ஆண்டுக்கு ரூ. 2,200 கோடி முதல் ரூ.2,400 கோடி வரை ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்த நகைகளை உற்பத்தி செய்யும் திறமையான தொழிலா ளர்கள் தற்போது 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் பேர் மட்டுமே இந்தத் தொழிலில் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு வரை இந்தத் தொழிலில் சுமார் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்ததாக இந்த துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.

2009 மற்றும் 2010 காலகட்டத்துக்கு பிறகு இந்த தொழில் நெருக்கடிகளை சந்திக்க தொடங்கியது. தேவைக்கேற்ற ஆர்டர்கள் இல்லாததால் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர். இந்த தேக்கத்துக்குப் பிறகு நகை உற்பத்தி தொழில் மீண்டு வந்தாலும் தொழிலாளர்கள் தொழிலுக்கு திரும்பவில்லை. அவர்கள் வேறு துறைகளில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டனர் என்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார் உள்ளூர் நகை வியாபாரியான ஜிதேந்திரா சிங் ஹோடா.

இதுகுறித்து பேசிய மற்றொரு நகை வியாபாரியான பிரமோத் ஷா, திறமையான பணியாளர்களைத் தேடுவது இப்போது பெரும் பிரச்சினையாக மாறிவிட்டது. இது தொழிலை மிகக் கடுமையாக பாதித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

பயிற்சி நிறுவனங்கள் மூலம் இந்த தொழிலுக்கான பணியாளர் களைக் கொண்டுவருவது தொடர்பாக பேசியபோது இந்த தொழில் பாரம்பரியம் மற்றும் குடும்ப தொழிலாக நடந்து வருகிறது என்றனர். பொருளாதார வளர்ச்சியில் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் பல்வேறு தொழில் வாய்ப்புகளையும் தேடிச் செல்கின்றனர். இவர்களுக்கு இந்த பாரம்பரிய தொழில் தேவையில்லை என்கின்றனர்.

இதில் அவர்களது எதிர்கால வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக கருதுகின்றனர் என்று கூறுகிறார் இந்த தொழிலில் ஈடுபட்டுவரும் இக்ரம்.

மேலும், இந்த தொழிலில் மாதத்துக்கு 12,000 முதல் 15,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. இது எங்கள் குடும்ப தேவைகளுக்கு போதுமானதாக இல்லை என்பதால் என் குழந்தைகளை வேறு தொழிலில் ஈடுபடுத்த ஆர்வம் செலுத்த சொல்லுகிறேன் என்றார் இக்ரம்.

இந்த தொழிலாளர் பற்றாக் குறையை போக்க இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி மற்றும் ராஜஸ்தான் மாநில திறன் மேம்பாட்டு கார்ப்பரேசனும் இணைந்து ஒப்பந்தம் மேற் கொண்டுள்ளன. இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த தொழில் சார்ந்து திறமையான தொழில்முனைவர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி ஆபரண நகைகள் துறையில் டிசைன் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான முன்னோடி நிறுவனமாக உள்ளது. கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதியை ஊக்குவித்து வருகிறது.

இந்த ஒப்பந்தத்தில் வேலைவாய்பு சார்ந்த திறன் மேம்படுத்தும் பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 2015-16 ஆண்டில் 3,600 நபர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரியின் செயலாளர் விஜய் சோர்டியா

ஜெய்ப்பூர் நகரம் ஜெம்ஸ் கட்டிங் மற்றும் பாலீஸ் செய்வதிலும், கைவினை வேலைகளிலும் நூற்றாண்டுகள் கண்ட நகரம். மேலும் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த தொழிலில் தனிச்சிறப்பன இடத்தில் உள்ளது.

வைரம் மற்றும் இதர கல் நகைகள் உற்பத்தியில் முக்கிய உற்பத்தியாளர்களும் ஜெய்ப்பூரில் உள்ளனர். உலக அளவில் கலர் ஜெம்ஸ் துறையில் முக்கிய நகரமாக விளங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x