Published : 05 Apr 2015 12:45 PM
Last Updated : 05 Apr 2015 12:45 PM

மைக்ரோசாப்ட் 40-ம் ஆண்டு விழா: பணியாளர்களுக்கு பில்கேட்ஸ் கடிதம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கி நேற்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1975-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி மைக்ரோ சாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது. 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து மைக்ரோசாப்ட் பணியாளர்களுக்கு பில்கேட்ஸ் கடிதம் எழுதி இருக்கிறார்.

1975-ம் ஆண்டு 19 வயதான பில்கேட்ஸும் 22 வயதான பால் ஆலனும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கினார்கள். 1980-ம் ஆண்டுகளில் மென்பொருள் துறையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக மைக்ரோசாப்ட் இருந்தது. 1986-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் பங்கு வெளியீடு நடந்தது. அப்போது பல பணக்காரர்களை இந்த நிறுவனம் உருவாக்கியது.

தற்போது உலகின் மதிப்பு மிக்க நிறுவனமாக விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 1.25 லட்சம் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். கடந்த சில வருடங்களாக போட்டி நிறுவனங்களில் இருந்து சவால்களை சந்தித்து வந்தாலும், தவிர்க்க முடியாத நிறுவனமாக இருக்கிறது. இப்போது இந்தியாவில் பிறந்த சத்யா நாதெள்ளா இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார்.

பில்கேட்ஸ் தனது பணியாளர் களுக்கு எழுதிய கடிதத்தில், இன்று நமக்கு முக்கியமான நாள் ஆகும். ஆரம்ப கட்டத்தில் நானும் பால் ஆலனும் இந்த நிறுவனத்தை தொடங்கும் போது, ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒவ்வொரு வீட்டிலும் நமது மைக்ரோசாப்ட் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். அப்போது எங்களது திட்டத்தை பலரும் முடியாது, எல்லைகளை கடந்து யோசிக்கிறோம் என்று விமர்சனம் செய்தார்கள். இப்போது நினைத்து பார்த்தால் வியப்பாக இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிகழ்த்திய புரட்சியில் அனைவரும் பெருமைப்பட வேண்டும்.

கடந்த காலத்தை விட எதிர்காலத்தை பற்றியே இப்போது மிகவும் நான் சிந்திக்கிறேன். கடந்த காலங்களில் நிகழ்ந்த மாற்றங்களை விட அடுத்த பத்து வருடங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் இந்தத் துறையில் நடக்கும். இப்போது கம்ப்யூட்டர்கள் அனைத்து இடங்களிலும் வியாபித்துள்ளது, வருங்காலத்தில் ரோபோக்களை நாம் எதிர்பார்க்கலாம். மேலும் பல புதிய புதிய மாற்றங்கள் உருவாகி மக்களை மேம்படுத்தும்.

தற்போதைய தலைவர் சத்யா நாதெள்ளாவின் தலைமையில் மைக்ரோசாப்ட் சிறப்பான இடத்தில் இருக்கிறது.

கடந்த 40 வருடங்களாக எண்ணிலடங்கா சாதனைகளை நாம் செய்திருக்கிறோம். ஆனால் அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது மிக முக்கியம். இந்த நிறுவனத்தை சிறப்பான நிறுவனமாக மாற்றிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள்’ என்று தன்னுடைய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x