Published : 17 Mar 2015 10:00 AM
Last Updated : 17 Mar 2015 10:00 AM

முதலீட்டுக்கு ஏற்ற நாடு இந்தியா: ஐஎம்எப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டைன் கருத்து

சர்வதேச அளவில் முதலீட்டுக்கு ஏற்ற நாடாக இந்தியா விளங்குகிறது என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எப்) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டைன் லெகார்டு தெரிவித்தார்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர் நேற்று டெல்லியில் உள்ள ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் உரை யாற்றினார். அப்போது சர்வதேச அளவில் பொருளாதார நிலை மந்தமாக இருந்தபோதிலும், முதலீட்டுக்கு ஏற்ற நாடாக இந்தியா திகழ்கிறது என்றார்.

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீத அளவுக்கு இருக்கும் என்று குறிப்பிட்ட அவர் 2019-ம் ஆண்டில் ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளின் ஒட்டுமொத்த ஜிடிபி-யை விட அதிகமாக இருக்கும் என்றார்.

சமீபத்தில் இந்திய அரசு அறிவித்த பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழல் ஆகியன பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் காரணமாகத் திகழ்கிறது என்று சுட்டிக் காட்டினார்.

ஜிடிபி கணக்கீடு 2011-12-ம் ஆண்டிலிருந்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2 சதவீதமாக உயரும் என்றார்.

சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார வளர்ச்சி சரிவைச் சந்தித்துள்ள நிலையில் இந்தியா மட்டுமே வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு வருகிறது என்றார். வரும் நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி சீனாவை விட அதிகமாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், 2030-ம் ஆண்டில் மிகவும் பிரபலமான நாடாக இந்தியா திகழும் என்றார்.

சர்வதேச அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டு 6 ஆண்டுகள் முடிந்த போதிலும் இன்னமும் பெரும்பாலான நாடுகளில் வளர்ச்சி விகிதம் குறைவாகவே உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவு, அமெரிக்க நிதி நிலை வலுவடைந்தது போன்ற காரணிகள் வளர்ச்சியை அதிகரிக்க உதவவில்லை என்று குறிப்பிட்டார்.

நடப்பாண்டில் சர்வதேச அளவிலான வளர்ச்சி 3.5 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் 3.7 சதவீதமாகவும் இருக்கும் என ஐஎம்எப் கணித்துள்ளது. நிதி நெருக்கடிக்குப் பிறகு ஐஎம்எப் கணித்த அளவை விட இது மிக மிகக் குறைவாகும் என்றார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதை சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எரிபொருளுக்கு அளிக்கும் மானியத்தைக் குறைத்து அதை ஏழை மக்கள் நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றார்.

இந்தியாவில் உள்ள மக்களில் 50 சதவீதம் பேர் 25 வயதுக்குக் குறைவானவர்கள். ஆண்டுதோறும் 1.20 கோடி பேர் வேலை வாய்ப்பு சந்தையை முற்றுகையிடுகின்றனர். 2030-ம் ஆண்டில் உலகில் மிக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழும் என்றார்.

சர்வதேச அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. வளர்ச்சியை மையமாகக் கொண்ட உறுதியான அரசியல் கொள்கைகள் மட்டுமின்றி ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

ஸ்திரமான, வளர்ச்சியை மையமாகக் கொண்ட வருவாய் மற்றும் செலவை சம அளவில் கணித்து அதற்கேற்ப கொள்கை வகுப்பது மிகவும் சிக்கலான விஷயம். ஆனால் சமீபத்தில் வெளியான மத்திய அரசு பட்ஜெட் இவை அனைத்தையும் ஒருங்கே கொண்டுள்ளது என்றார்.

பெண் குழந்தைகளை ஊக்குவிக்க பிரதமர் மோடி எடுத்து வரும் நடவடிக்கை பாலின ரீதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை மட்டுமல்ல, அதில் பொருளாதார ரீதியில் அர்த்தமும் உள்ளது. பல நாடுகளில் பொருளாதாரத்தையே மாற்றியமைப்பதில் பெண்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைப்பதற்காக மேற்கொள் ளப்பட்ட நடவடிக்கையை பாராட்டிய அவர், இதன் மூலம் ஒருங்கிணைந்த வளர்ச்சி சாத்தியமாகும் என்றார்.

இந்தியாவின் கட்டமைப்புத் துறை மேம்பாட்டுக்கு ஒரு லட்சம் கோடி டாலர் தேவைப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு, தனியார் பங்கேற்போடு திட்டப் பணிகளை நடத்துவதில் காணப்படும் பிரச்சினைகளை நீக்கினால் இத்துறையில் முதலீடு கள் அதிகரிக்கும் என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x