Published : 22 Feb 2015 02:51 PM
Last Updated : 22 Feb 2015 02:51 PM

நடுவுல கொஞ்சம் நம்பிக்கை போதும்

பொதுவாக, நம்பிக்கையின்மை அல்லது குறைவான நம்பிக்கை (லோ கான்பிடன்ஸ்) பற்றி நம்மில் பலர் கவலைப்படுவதுண்டு. ஆனால், ஒரு நல்ல செய்தி என்னவென்றால் நம்பிக்கைக்குறைவு என்பது நாம் நினைக்கும் அளவிற்கு ஒரு பெரிய பிரச்சினை அல்ல என்கிறார் ஆசிரியர். “யானைக்கு தும்பிக்கை, மனிதனுக்கு நம்பிக்கை” என்றெல்லாம் இந்த உலகம் நம்பிக்கையைப்பற்றி ஓவர் பில்டப் செய்கின்றது என்று சொல்லும் ஆசிரியர், அதிக நம்பிக்கையால் நம் மனதிற்கு சிறிய சந்தோசம் கிடைக்குமே தவிர, மற்றபடி சொல்லும்படியான பயன்கள் எதுவுமில்லை என்கிறார்.

உண்மையில், குறைவான நம்பிக் கையே நமது தகுதிகளையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்வதற்கான ஆதாரமாக செயல்படுகின்றது. இந்த தகுதியும் திறமையுமே ஒருவரின் நம்பிக்கை வளர்வதற்கு உத்திரவாதமாக இருகின்றது. நம்பிக்கையானது உணரக்கூடியது மட்டுமே ஆனால் தகுதியும் திறமையுமே உணர்வை செயலாக மாற்றக்கூடியது.

நம்பிக்கை ஒன்றே போதுமா!

நூறு சதவீதம் ஒரு செயலில் நம்பிக்கை வைத்திருக்கிறோம், அந்த நம்பிக்கை மட்டுமே குறிப்பிட்ட அந்த செயலில் வெற்றிபெறுவதற்கு போது மானதா? கண்டிப்பாக இல்லை. ஒவ்வொரு செயலுக்கு மான முயற்சியும், உழைப்பும் இருந்தால் மட்டுமே அதில் வெற்றி பெற முடியும். வெறும் நம்பிக்கை யால் மட்டுமே பராக் ஒபாமா, வரலாற்றின் முதல் அமெரிக்க கருப்பின அதிபராகவில்லை;

புகழ்பெற்ற தொழிலதிபரான ரிச்சர்ட் பிரான்சன் நானூறு நிறுவனங்களைத் தொடங்கியது அவரின் நம்பிக்கையால் மட்டு மல்ல; அதுபோல, மைக்கேல் ஜோர்டன், முகம்மது அலி மற்றும் ரோஜர் ஃபெடரர் ஆகியோர் தங்களது விளையாட்டு களத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது அவர் களின் நம்பிக்கையின் பலனால் மட்டுமே அல்ல. இந்த வெற்றிக் கெல்லாம் காரணம் அவர்களின் திறமையும், கடின உழைப்புமே தவிர வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. உண்மையில், அவர்களிடம் இருந்த நம்பிக்கைகூட திறமை மற்றும் உழைப்பின் பிரதிபலிப்பே.

நம்பிக்கைக்குறைவிலும் நன்மையே!

நம்பிக்கைகுறைவின் வாயிலாகவே நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றது என்கிறார் ஆசிரியர். திறமை வாய்ந்த பலபேர் தங்களது நம்பிக்கையின் அளவைப் பொறுத்தவரை சராசரி மனிதர்களைவிட குறைந்த அளவிலேயே தங்களது செயல் களில் நம்பிக்கையைக் கொண் டிருக்கின்றனர். மேலும், அதீத நம்பிக்கையினை கொண்டுள்ள பலபேர், சராசரி மனிதர்களைவிட குறைந்த அளவிலேயே திறமை யைக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரியும் ஒருவருக்கு, உளவியல் தொடர் பாக உரையாற்ற அழைப்பு வரு கின்றது. நிறுவனத்தின் விதிமுறை களுக்கு உட்பட்டு அதனை அவர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால், உளவியல் தொடர்பான விஷயங்களில் அவருக்கு அவ்வளவாக புலமை கிடையாது, அதனால் தன்னால் இதனை சரியாக செய்யமுடியுமா என தயங்கிக்கொண்டிருக்கிறார். இங்குதான் அவருடைய லோ கான்பிடன்ஸ் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது. அந்த தயக்கமே, அவரை நல்ல உரையை தயார் செய்ய தூண்டுகிறது. பலநாட்களாக அதிகநேரம் நூலகத்திலேயே செலவிட்டு உளவியல் தொடர்பான தகவல்களை சேகரிக்கிறார்.

இறுதியில், மிகச்சிறந்த ஒரு உரையை தயார்செய்து, உரையாற்றி பாராட்டுகளைப் பெறு கின்றார். ஒருவேளை, “அதெல் லாம் ஜுஜுபி மேட்டர்” என்ற ஓவர் கான்பிடன்ஸ் அவரிடம் இருந் திருந்தால், ஒரு சிறந்த உரையை கொடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. நம்மிடம் உள்ள நம்பிக்கைகுறைவு, வெற்றியை நோக்கிய நம்முடைய பயணத்தில் ஒருபோதும் தடையை ஏற்படுத் தாது, மாறாக சீரான உந்து தலையே நமக்கு அளிக்கின்றது என்கிறார் ஆசிரியர்.

பார்வை ஒன்றே போதுமே!

நாம் நம்மைப்பற்றி என்ன நினைக்கின்றோம் என்பதைவிட, நம்மீதான மற்றவர்களின் பார்வை எப்படி இருக்கின்றது என்பது மிகவும் முக்கியம் என்கிறார் ஆசிரியர். “மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தால் எனக்கென்ன” என்றெல்லாம் சும்மா விட்டுவிடமுடியாது என்று கூறும் ஆசிரியர், சுய பார்வையின் மூலம் நம்முடைய கான்பிடன்ஸ் லெவலை மட்டுமே நம்மால் கண்காணிக்க முடியுமென்றும், மற்றவர்களின் பார்வையே நம் முடைய செயல்களுக்கான மதிப் பீட்டினை தருகின்றது என்கிறார்.

அதேபோல, நாம் எந்த அளவிற்கு நம்பிக்கைத்திறனை கொண்டுள் ளோம் என்பது மற்றவர்களுக்கு முக்கியமல்ல, நம்முடைய பண்பு களும் செயல்களுமே அவர்களின் விமர்சனத்திற்கு உட்படுத்தப்படு கின்றது என்று எச்சரிக்கிறார். பாசிட்டிவ் செயல்களுக்கான பாராட்டுதலும், அதேசமயம் நெகட்டிவ் செயல்களுக்கான விமர்சனமும் நமக்கு வெளி யிலிருந்தே கிடைக்கின்றன. இவையே, அதிகப்படியான நல்ல செயல்களை செய்வதற்கும் அதேசமயம் நம்முடைய தவறு களைத் திருத்திக்கொள்வதற்கும் தூண்டுகோலாக அமைந்து நம்மை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச்செல்கின்றன என்பது ஆசிரியரின் வாதமாக இருக்கின்றது.

பிறவி திறமை!

என்னதான் முயற்சியாலும், கடின உழைப்பாலும் வெற்றி களைப் பெற்றாலும், பிறவி திறமை என்ற ஒன்றை நாம் எளிதில் புறந்தள்ளிவிடமுடியாது என்கிறார் ஆசிரியர். அதற்கான உதாரணங்களாக, வெற்றி யாளர்கள் சிலரின் சாதனைகளைக் கொடுத்துள்ளார். மோசார்ட் என்ற இசைக்கலைஞர், அரைமணி நேரத்திற்குள்ளாகவே இசையின் வடிவங்களை மனப்பாடம் செய்யும் திறமையை தனது நான்கு வயதிலேயே பெற்றிருந்தார்.

மேலும், தனது ஆறாவது வயதிலிருந்து கம்போசிங் செய்ய ஆரம்பித்தவர், எட்டாவது வயதில் ஒரு முழு சிம்பொனியை உருவாக்கினார்; மிகச்சிறந்த ஓவியரான பிக்காசோ, குழந்தை பருவத்திலேயே முட்டையின் மஞ்சள் கருவினைப் பயன்படுத்தி தனது சகோதரியின் ஓவியத்தை வரைந்துள்ளார், அதுமட்டுமல்லாமல் நாட்டின் மதிப்புமிக்க ஓவியனாக அவர் உருவானபோது அவருடைய வயது பதினான்குதான்; நாடியா எலனா கொமனட்சி என்ற ருமேனியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை, 1976 ஆம் ஆண்டு, கனடாவில் நடந்த கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் “பெர்பெக்ட் ஸ்கோர் ஆப் டென்” என்னும் இலக்கை அடைந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேலும், அப்போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களையும் வென்றார். இவ்விலக்கை அடையும் போது இவருக்கு வயது பதினான்கே. இந்த உதாரணங்கள், வெற்றிக்கான திறமைகள் பிறவி யிலேயே அவர்களுக்கு விதைக்கப்பட்டிருப்பதையே காட்டுவதாக ஆசிரியர் தெரிவிக் கின்றார்.

அனுபவ பாடம்!

தினம் தினம் நாம் பார்க்கும், பேசும், செய்யும் விஷயங்களில் இருந்து நமக்கு நிறைய அனுபவம் கிடைக்கின்றது. இருந்தாலும், நம்முடைய பெரும்பாலான அடிப்படை குணாதிசயங்கள் குழந்தைப்பருவ அனுபவங்களில் இருந்தே நமக்கு கிடைக்கின்றன. இது உளவியலில் உள்ள ஒருசில மறுக்கமுடியாத கூற்றுக்களில் ஒன்றாக கருதப்படுவதாக சொல்கின்றார் ஆசிரியர். இந்த அனுபவ பாடம், முதலில் அம்மாவிடம் ஆரம்பித்து நாளடைவில் நம்மிடம் பழகும் மற்றவர்களின் நடை உடை பாவனை என அனைத்தையும் கற்கின்றது.

இதுவே, நம்முடைய வாழ்க்கைக்கான வொர்கிங் மாடலாக நம்முடைய மனதில் பதிந்துவிடுகின்றது என்கிறார் ஆசிரியர். இந்த வொர்கிங் மாடலின் அடிப்படையிலேயே பின்னாளில் நம்முடைய பேச்சு, செயல் மற்றும் பழக்கவழக்கங்கள் அமைகின்றன. வெளிப்படையாக இதனை நம்மால் அறிய முடியாவிட்டாலும், இதன் மைய கருவானது நம்முடைய குழந்தைப்பருவ அனுபவத்தின் வெளிப்பாடே. இதையே, பெருவாரியான உளவியலாளர்களின் ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன.

உங்கள் வசப்படுத்துங்கள்!

மற்றவர்களை நம்பால் ஈர்க்கும் திறமையும் வெற்றிக்கான ஒரு காரணியாகவே விளங்குகின்றது, அது தனிப்பட்ட வாழ்க்கைக்கானாலும் சரி அல்லது தொழிலுக்கானாலும் சரி. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிறீர்களா? முதலில், தேவையில்லாமல் மற்றவர்களின்மீது விமர்சனங் களை அள்ளி வீசாதீர்கள், இது முட்டாள்கள் மட்டுமே செய்யக் கூடிய ஒரு செயல் என்கிறார் ஆசிரியர்.

அடுத்ததாக மற்றவர் களைப்பற்றி புகார் சொல்வதை அறவே தவிர்த்திடுங்கள், இது அவர்களை கோபமடையச்செய் வதோடு நம்முடைய இமேஜிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்து, அடுத்தவர்களின்மீதான உங்கள் அக்கறையை வளர்த்துக்கொண்டு அவர்களின் விருப்பத்தைப் பொருத்து அவர்களுக்கு தேவையான நேரத்தில் உதவுவது.

மேலும், சிரிப்புடன் கூடிய பாராட்டுகளை தெரிவிப்பது உங்கள் மீதான மதிப்பினை மற்றவர்கள் மத்தியில் உயர்த்திக்காட்டும் செயலாகும். ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய பெயர் ஒரு பொக்கிஷமான விஷயம். ஆக, முடிந்தவரை மற்றவர்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொண்டு அழையுங்கள். அடுத்தபடியாக மிக முக்கியமான ஒன்று, அடுத்தவர்கள் பேசுவதற்கு வாய்ப்பளித்து, அதை கேட்க பழகிக்கொள்ளவேண்டும். அடுத்து, வீண் விவாதங்களை தவிர்த்து மற்றவர்களின் கருத்திற்கு மதிப்பளியுங்கள். இவற்றையெல்லாம் செய்துபாருங்கள் நாளடைவில் அவர்கள் உங்கள் வசம்.

வெற்றி ஒன்றையே மனதில் நிறுத்தி, நம்பிக்கையின் அளவைப்பற்றி கவலைப்படாமல், இருக்கின்ற நம்பிக்கையோடு தகுதி, திறமை மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்து செயல்பாட்டால் அளவற்ற வெற்றிகளைப் பெறமுடியும் என்பதே இந்த புத்தகம் நமக்கு சொல்லித்தரும் செய்தி.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x