Published : 24 Feb 2015 06:26 PM
Last Updated : 24 Feb 2015 06:26 PM

வரி வருவாயில் மாநிலங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு: நிதிக் குழு பரிந்துரையை ஏற்றது மத்திய அரசு

மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு அளிக்கும் அளவை 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தலாம் என்ற நிதிக் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது.

14-வது நிதிக்குழு அளித்துள்ள பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதால், மாநில அரசுகளுக்கு கிடைக்கும் வரி வருவாய் அளவு 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.5.26 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2014-15-ம் நிதி ஆண்டில் மாநில அரசுகளுக்கு கிடைத்த வரி வருவாய் பங்கு அளவு ரூ.3.48 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஒய்.வி.ரெட்டி தலைமையிலான நிதிக் குழுவின் இந்தப் பரிந்துரையின்படி, மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதன் மூலம் அவை சுயமாக செயல்பட வழியேற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில முதல்வர்களுக்கு பிரதமர் கடிதம்:

14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்றும், அதன்படி மாநிலங்களின் வளங்களுக்கான அதிகாரப் பகிர்வு உயருவதாகவும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும், தமது அரசு மாநிலங்களுக்கு அதிக நிதி அளிக்கவும், மாநிலங்கள் தங்களின் வளர்ச்சிக்கான திட்டத்தைத் வகுக்கத் தேவையான சுதந்திரத்தை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தின் விவரம்:

"எமது அரசு பதவி ஏற்ற நாளிலிருந்தே நமது கூட்டாட்சி அரசியலை வலுபடுத்தவும் கூட்டாட்சி ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது உங்களுக்கு நன்றாகவே தெரிந்த ஒன்றாகும்.

நம் நாட்டு மக்கள் அரசாங்கங்கள் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள். அதேசமயம், அவர்கள் காத்திருக்க விரும்பவில்லை. எனவேதான், ஆரம்பத்தில் இருந்து நாங்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை செயல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். நம் நாட்டின் பன்முகத்தன்மையை பார்க்கும்போது உண்மையான செயல்பாடுள்ள கூட்டாட்சி ஆளுமைதான் இந்த வளர்ச்சிக்கான ஒரே வழி என்பதை எமது அரசு நன்கு புரிந்துகொண்டுள்ளது.

வளமான மாநிலங்கள்தான் வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். நான் முதல் அமைச்சராக இருந்தபோதுகூட, நாட்டின் வளர்ச்சி மாநிலங்களின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டே அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளேன். அதனால்தான் இந்த அரசு மாநிலங்களுக்கு அனைத்து வகையிலும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளது. அத்துடன், மாநிலங்களும் தங்களுக்கு தேவையான திட்டங்களை இயற்றி செயல்படுத்த வேண்டும். நிதியை செலவிட முன்னெச்சரிக்கையும் கட்டுப்பாடும் இருக்கும் அதே சமயத்தில், அவர்களுக்கு தேவையான நிதியும் சுதந்திரமாக செயல் பட அதிகாரமும் அளிக்கப்பட வேண்டும் என்று நம்புகிறோம்.

இது இல்லாமல் மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அதோடு, ஒதுக்கப்பட்டுள்ள சமூகங்களும் பின்தங்கிய பகுதிகளும் நாட்டின் வளர்ச்சியோடு ஒன்று சேர முடியாது.

இதனை மனதில் கொண்டு, திட்டக்குழுவுக்கு பதிலாக நிதி ஆயோக் கொண்டுவந்துள்ளோம். வளர்ச்சி என்ற தேசிய நோக்கத்தை விரைவில் செயல்படுத்த ஒரு பொது கருத்துக்களும் இருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்யும் ஒரே நோக்கத்தோடு இந்த அமைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தகைய நோக்கமும், திடமான நடவடிக்கையும் நம் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் வளர்ச்சியை அடைய உதவும்.

14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் ஏற்பு

இதற்காகதான் 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் மத்திய அரசுக்கு நிதி நெருக்கடியை அளிக்கும் என்றாலும் நாங்கள் அதனை முழுமனதோடு ஒப்புக்கொண்டுள்ளோம். வளங்களுக்கான மாநிலங்களின் அதிகார பகிர்வை 10 சதவிதம் அதிகரிக்குமாறு 14-வது நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இது முந்தைய நிதி ஆணையத்தின் பரிந்துரையைவிட சற்று அதிகம். மாநிலங்களுக்கு இருக்கும் அதிகார பகிர்வு 2014-15ஐ-விட 2015-16ல் அதிகமாக இருக்கும். இதனால் மத்திய அரசுக்கு குறைவான நிதிதான் கிடைக்கும். இருப்பினும் மக்களின் தேவைக்கேற்ப திட்டங்களை நீங்கள் வடிவமைக்கவும் செயல்படுத்தவும் இது உதவும் என்பதால் இந்த 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ளோம்.

தனது பரிந்துரைகளில், 14-வது நிதி ஆணையம் வருவாய் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கிடும் முறையில் அடிப்படை மாற்றங்களை செய்துள்ளது. இதன்படி மாநிலங்களின் வருவாய் செலவினங்கள் திட்டத்திற்கான மத்திய அரசின் உதவி மாநிலங்களின் வருவாய் சுமையின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இதன் மூலம் அதிகார பகிர்வு ஏற்படுகிறது.

42 சதவீதம் அதிகார பகிர்வு

14-வது நிதி ஆணையத்தின் அறிக்கை பத்தி 7.43 இதனை விவரிக்கிறது. பெரும்பாலான வளங்கள் - வரி அதிகார பகிர்வோடே இணைந்து இருக்கவேண்டும் என்பதே மாநிலங்களின் நோக்கமாகவும் உள்ளது. மத்திய அரசால் பொறுப்பேற்று நடத்தப்படும் திட்டங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட வேண்டும் என்று பத்தி 8.6, 8.7–ல் 14-வது நிதி ஆணையம் கூறியுள்ளது.

அதனால், மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகளுக்கு திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீடு அளிக்கப்படும் என்பதிலிருந்து அதிக்கார பகிர்வு கிடைக்கும் என்ற நிலைமை உருவாகியுள்ளது. எனவே, வகுக்கப்படக்கூடிய வளங்களின் 42 சதவீதம் அதிகார பகிர்வு இருக்கும்.

அதனால், 14-வது நிதி ஆணையம் கூறியுள்ளது போல் மாநிலத்தின் அனைத்து வருவாய் செலவினங்களும் அந்த மாநிலங்களுக்கு அளிக்கப்படும், வளங்களைக் கொண்டு பூர்த்திசெய்யப்பட வேண்டும்.

இந்த அதிகாரப் பகிர்வு பெரும் அளவு இருக்கும்போதிலும் வறுமையை போக்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், கல்வி, சுகாதாரம், கிராமப்புற வளர்ச்சி, விவசாயம் போன்ற நாட்டிற்கு அவசியமாக தேவைப்படும் சில முக்கிய துறைகளில் ஓரளவுக்கு மத்திய அரசின் உதவியை தொடர நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

14-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளை ஒப்புக்கொண்டதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். "அனைவருக்கும் பொருந்தும் ஒரு அளவு" என்ற அனுகுமுறையை மாநிலங்களிடம் தினிப்பதை விட்டு நாம் விலகி உள்ளோம். மாநிலங்கள் இந்த கொள்கைக்கு எதிராக பல ஆண்டுகள் குரல் எழுப்பி வந்துள்ளன.

இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நாட்டின் திட்டமிடும் முறையை எமது அரசு பரவலாக்க முடிவு செய்துள்ளது. இதன்படி மாநிலங்கள் தேவையான அளவு சுதந்திரமாக திட்டமிடவும் வளர்ச்சியடையவும் அதிக அளவு நிதியை பெறுவதும் பரவலாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 10% இந்த வகையில் மாநிலங்கள் செலவிட சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது வளங்கள் அனைத்தும் உங்களிடம் உள்ளன. மத்திய அரசு ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட பழைய திட்டங்களின் செயல்பாடுகளை மீண்டும் ஒருமுறை நான் ஆய்வு செய்ய நினைக்கிறேன். மாநிலங்கள் தேவைகளுக்கு ஏற்ப இந்த திட்டங்களையும் செயல்பாடுகளையும் தொடர்ந்து செயல்படுத்தவும் அல்லது மாற்றி அமைக்கவும் முழு உரிமை அளிக்கப்படுகிறது. இவை அனைத்திலும் மத்திய அரசு குறிப்பாக நித்தி அயோக் மாநிலங்களின் வளர்ச்சிக்கு தேவையான உத்திகளை செயல்படுத்த யோசனைகள், மதிநுட்பம், தொழில்நுட்பம் என அனைத்து வகையிலும் ஆதரவு அளிக்கும்.

ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அதிகார பரவலுக்கான எனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இது அமையும். நாட்டின் முன்னுரிமை திட்டங்களை செயல்படுத்தவும் ஆலோசனை செய்யவும் மாநிலங்களை ஈடுபடுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். மத்திய அரசும் மாநில அரசுகளும் செலவிடும் ஒவ்வொரு ரூபாயும் அதிக அளவு பலன் அளிக்கும் வகையில் இது செய்யப்பட்டுள்ளது. நித்தி அயோக்கின் செயல்பாட்டுக் குழுவில் அனைத்து மாநில அரசுகளின் முதலமைச்சர்கள் சம அளவு பங்கெடுத்துக் கொள்ளும் நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஒத்துழைப்புடனான கூட்டாச்சி முறையின் மூலம் விரைவான வளர்ச்சியை எட்டுவதே நமது நோக்கமாகும்.

எமது முடிவுகளும் வளங்களும் சரியான இடத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றன என்று நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நமது வளங்கள் வறுமையை ஒழிப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, மின்சார வசதி, மருத்துவமனைகள், பள்ளிகள், சாலைகள், குடிநீர், வீட்டுவசதி ஆகியவற்றை உறுதி செய்யும் நோக்கில் செயல்படுத்தப்படுகின்றன. இது நமது நாட்டில் இதற்கு முன் எப்போதும் நடைப்பெறவில்லை.

கனிம வளமுள்ள மாநிலங்களுக்கு...

மேலும், பல மாநிலங்களுக்கு பயனளிக்கும் வகையில் கணிமங்கள் மீதான ஆதாய வருவாய் விகிதத்தை சமீபத்தில் மாற்றி அமைத்துள்ளோம். தற்போது நிலக்கரி கணிமங்கள் மீது நடைபெறும் ஏலம் வெளிப்படைத் தன்மையை கொண்டுள்ளது. இதன் மூலம் கனிமங்களும் நிலக்கரி வளங்களும் உள்ள மாநிலங்களுக்கு அதிகபடியாக ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இந்தியாவின் கிழக்கு பகுதிகள் அதிகப்படியான கணிம வளங்களை கொண்டிருந்த போதும் குறைவான வளர்ச்சியே அடைந்துள்ளன. மற்ற மாநிலங்களுடன் இவை சம அளவை எட்ட இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

வளங்கள் இருக்கின்றனவா இல்லையா என்பது தற்போது பிரச்சனை இல்லை. நமது கொள்கைகளையும் திறமையையும் செயல்படுத்துவதை இது நோக்கமாக கொண்டது. பணம் மத்திய அளவிலோ அல்லது மாநில அளவிலோ கூட இருக்கலாம். அது நாட்டிற்காக எவ்வாறு எதற்காக செலவிடப்படுகிறது என்பதுதான் முக்கியம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். நமது கவனம், ஏழைகள், விவசாயிகள், சாதாரண மனிதன், பெண்கள், இளையோர் மீது இருக்க வேண்டும். இவர்களின் முழுத்திறனையும் பயன்படுத்தி நமது நோக்கத்தை எட்டுவதையே சவாலாக இருக்க வேண்டும்.

நமது நாட்டின் வளர்ச்சி திட்டத்தின் இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். இந்தியாவைக் குறித்து மிகப் பெரிய நம்பிக்கை உள்ளதையும் இந்தியாவில் முதலீடு செய்ய பலர் ஆர்வம் கொண்டுள்ளதையும் நான் பல நாடுகளில் மேற்க்கொண்ட சமீபத்திய சுற்றுப் பயணங்களிலிருந்து தெரிந்துக்கொண்டேன். இந்தியாவின் வளர்ச்சியில் தாங்களும் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். இது மத்திய அரசிற்கான வாய்ப்பு அல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான வாய்ப்பாகும்.

நமது நாட்டின் அபரிவிதமான வளர்ச்சியை எட்டுவதே நமது நோக்கமாகும். நாடும் உங்கள் மாநிலமும் எதிர் கொள்ளும் சவால்களை சந்திப்பதற்கு ஏற்ற வகையில் உங்களின் ஒத்துழைப்பும் ஈடுபாடும் இருக்க வேண்டும். இதற்காக நேரத்தையும் சக்தியையும் வளங்களையும் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த கடிதத்தை நான் எழுதுகிறேன்.

ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்தின் முன்னுரிமை திட்டங்களையும் வளங்களையும் இதற்காக செயல்படுத்தற்கு திட்டமிட முன்வர வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். திட்டங்களையும் அதன் செயல்பாடுகளையும் முறையான மதிப்பீடு செய்து நாம் செயல்படுத்த வேண்டும். இந்த முயற்சியில் நானும் உங்களுடன் இனணந்து பணியாற்றுவேன். பணிகளை தரமானதாகவும் விரைவாகவும் செயல்படுத்துவதற்கான வரையறைகளை நாம் இணைந்து உருவாக்க வேண்டும்.

இதை நோக்கிய பாதையில் நாம் இணைந்து செயல்படுவோம். இது குறித்த ஆலோசனைகளை பெறுவதற்கு எந்த நேரத்திலும் நான் தயாராக இருக்கிறேன்" என்று அந்தக் கடிததில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x