Published : 26 Feb 2015 08:51 AM
Last Updated : 26 Feb 2015 08:51 AM

வைப்பு நிதிக்கான வரிச் சலுகை வரம்பை உயர்த்த வேண்டும்: வங்கித் துறை எதிர்பார்ப்பு

வைப்பு நிதி திட்டங்களுக்கு வரிச் சலுகை வரம்பை உயர்த்த வேண்டும் என்பது வங்கித் துறையின் எதிர்பார்ப்பாக உள்ளது. 2015-16 மத்திய பட்ஜெட்டில் வரிச் சேமிப்பு முதலீடுகளுக்கான லாக்-இன் காலத்தைக் குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும் வரி கணக்கிடப்படும் வட்டி வருமானத்தையும் உயர்த்த வேண்டும் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பங்கு சார்ந்த சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்போல வைப்பு நிதி திட்டங்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் என்றும், 80சி யின் சலுகைபடி மேற்கொள்ளப்படும் வரிச்சலுகை முதலீடுகளுக்கான லாக்-இன் காலத்தை ஐந்து வருடமாக இருப்பதை மூன்று வருடங்களாக குறைக்க வேண்டும் எனவும் எதிர்பார்த்துள்ளனர்.

80சியின் படி காப்பீடு பிரிமீயம், பங்குச் சார்ந்த காப்பீடு திட்டங்கள், ஊழியர் சேம நல நிதி, வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு திட்டங்கள், மற்றும் வீட்டுக் கடனுக்கான அசல், மற்றும் வட்டி (அதிகபட்சம் 1.5லட்சம்) போன்ற வகைகளில் 1.5 லட்சம் வரை வரிச்சலுகை பெறலாம். கடந்த ஆண்டு 80சி யின்கீழ் 1 லட்சமாக இருந்த வரிச்சலுகையை நிதியியல் சட்டம் 2014ன்படி 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.

ஆனால் வரிச்சலுகை வரம்பு உயர்த்தப்பட்டாலும் இந்த சட்டத் தின்படி 1 லட்சம் வரையிலான வைப்பு நிதிக்கு மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும் (ஐந்து வருட வரிச்சேமிப்பு வைப்பு நிதி). இது முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட வில்லை.

எனவே இந்த முதலீட்டு வரம்பை அதிகரிக்க வேண்டும் என்பது வங்கித்துறையின் கோரிக்கையாக இருக்கிறது.

80சி யின் படி அனுமதிக்கப்படும் வரிச்சலுகை பலன்களை அனு பவிக்க வேண்டுமெனில் வரிச் சலுகை கிடைக்கும் முதலீட்டின் அளவையும் அதிகரிக்க வேண்டும். அதாவது வரிச் சலுகையுடன் கூடிய வைப்பு நிதியின் அளவு 1.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

நிரந்தர கணக்கு எண் இல்லாத, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் படிவம் 15ஜி அல்லது 15ஹெச் மூலமாக வங்கி வழி இணைக்கப்படுகின்றனர். இந்த பிரிவினருக்கு அதிகபட்சமாக 20 சதவீதம்வரை வரிவிலக்கு அளிக்க வேண்டும். நிரந்தர கணக்கு எண் இல்லாத நிலையில் இதை அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் இந்த பிரிவினருக்கு ஏற்படும் அசொளகரியங்கள் நீங்கும் என வங்கி துறையினர் கருதுகின்றனர்.

தற்போது முதலீடுகளின் மீது முன்கூட்டியே பிடிக்கப்படும் வரியான டிடிஎஸ் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையில் பிடித்தம் செய்யப்படுகிறது. இதை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகைக்கு என்று மாற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்கு மூலதனத்தை அதிகரிக்கும்போது அதற்கும் வரிவிலக்கு பெறுவது போல இருக்க வேண்டும என வங்கித்துறையினர் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் வங்கித்துறையின் பங்குகள் சிறந்த வளர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த பட்ஜெட்டுக்கு பிறகு தனியார் வங்கிகளின் வளர்ச்சி வேகம் 24 சதவீதம் வரை உள்ளது. 2015-16 பட்ஜெட்டின் அறிவிப்புக்கு பிறகு வங்கித்துறையின் வளர்ச்சி அதே அளவுக்கு நீடிக்குமா என்பது தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x