Published : 10 Dec 2014 14:51 pm

Updated : 10 Dec 2014 14:51 pm

 

Published : 10 Dec 2014 02:51 PM
Last Updated : 10 Dec 2014 02:51 PM

குருதி ஆட்டம் 13

13

வட காட்டுப் பக்கமிருந்து கையில் சூரிக் கத்தியோடு, ஓடி வந்தான் தவசியாண்டி.

“யார்ரா... நீங்க?”

“ஏப்பா தவசியாண்டி! நாங்க வேற யாருமில்லை. பெருங்குடி ஆளுகதான் வந்திருக்கோம்.”

ஓடைக் கரையில் நின்று பெரியவர் நல்லாண்டி கத்தினார்.

நல்லாண்டி நின்ற இடத்துக்கும் குடிசைக்கும் ஓங்கி கத்தினால் மட்டும் காது கேட்கும் தூரம்.

தவசியாண்டி, குடிசைக்கும் வடக்கே வெகுதூரத்தில் ஓடி வந்து கொண்டிருந்தான். காதுகளில் நல்லாண்டியின் சத்தம் விழவில்லை.

நல்லாண்டியைத் தவிர்த்து, பெருங்குடி ஆட்கள் யாருக்கும் தவசியாண்டியை அடையாளம் தெரியவில்லை. செவ்வந்தியின் ஒற்றை அலறல் சத்தத்திலேயே அரண்டு போய் நின்றவர்கள், கையில் கத்தியோடு காட்டுவாக்கில் ஓடி வரும் தவசியாண்டியைக் கண்டதும் அவரவர் கைவாக்கில் நின்ற மரத்தடி, புதர்களுக்குள் பதுங்கினார்கள்.

ஒரு கனத்த மரத்தடியில் பதுங்கிய கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகத்துக்கு பாதி உயிர் போயிருச்சு. ‘வர்றவன்... கோட்டித்தனமா வர்றானே! காட்டுக் குள்ள வந்தது தப்பாப் போச்சே...’ வாய்க்குள் அரற்றினார்.

பதுங்க இடம் பிடிப்பதில் ‘லோட்டா’வுக்கும் முனியாண்டிக்கும் தள்ளுமுள்ளு. ‘லோட்டா’வைவிட பலசாலியான முனியாண்டி, “அங்கிட்டு போடா...” என, ‘லோட்டா’வின் தோளைப் பிடித்து நெட்டித் தள்ளிவிட்டார். செடி மறைப்புக்கு வெளியே வந்து விழுந்த ‘லோட்டா’, நெடுஞ்சாண்கிடையாக செடிகளுக்குள் பாய்ந்து, கையெடுத்துக் கும்பிட்டவாறு, “சித்தப்பூ... என்னை காப்பாத்துங்க சித்தப்பூ...!” என, முனியாண்டியின் கால்களைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.

‘லோட்டா’வின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து செடிகளுக்கு உள்ளே இழுத்துப் போட்டார் முனியாண்டி.

“டேய்...! எவன்டா என் காட்டுக்குள்ளே...?” முன்னிலும் ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டே ஓடி வந்த தவசியாண்டி, புதிதாக வேய்ந்த குடிசைக்குள் நுழைந்தான்.

எதிர் குடிசை வாசலில் செவ்வந்தி நின்றாள்.

கையில் இருந்த சூரிக் கத்தியைக் கீழே எறிந்தான். மூலையில் சார்த்தி வைத்திருந்த வேல்க் கம்பை கையில் எடுத்தான். குடிசையை விட்டு வெளியேறி, ஓடைக் கரை நோக்கி புயலாக வந்தான்.

பதுங்கிக் கிடந்தவர்களின் கண் களுக்கு, ரத்தப் பசி எடுத்த காட்டு மிருகம் போல் தெரிந்தான்.

‘லோட்டா’வைத் தவிர எல்லோரும் தவசியாண்டியின் வயதை ஒத்த ஆட்கள்தான். 20 வருட இடைவெளியில் தவசியாண்டியின் முகம் அருந்தலாய் ஞாபகம் இருந்தது. அந்த முகத்துக்கும் இந்த முகத்துக்கும் ஒட்டலே.

‘இன்னாரென தெரிந்துமா... ஆளைக் கொல்லுவான்? சொல்ல முடியாது. ஊரை வெறுத்து வெளியேறி வந்தவன் கோபம்... யாரு மேலேயோ! நம்ம கையிலே ஆயுதமும் இல்லே.கணக்குப் பிள்ளை பேச்சைக் கேட்டு, தேளு, பூரானை அடிக்கிற கம்போட காட்டுக்குள்ளே வந்தது... தப்பாப் போச்சே!’ முண்டியடித்து முனி யாண்டிக்குள் நுழைந்தான் ‘லோட்டா’. “அடேய்... லோட்டாப் பயலே! எங்கே வந்து நுழையிறே. தவசியாண்டியோட வேல்க் கம்புக் குத்துக்கு தலைப் பலி, நீதான்டா!” எட்டி மிதித்தார்.

“சித்தப்பூ...” கண்ணீர் ஓட, கையெடுத்துக் கும்பிட்டான்.

எழ மறுத்து, கப்பலின் முதல் வகுப்பு அறை வாசலில் கால் பரப்பி அமர்ந்திருந்தான் துரைசிங்கம்.

“ஏய் துரைசிங்கம்... என்ன இது பிடிவாதம்? எந்திரி.”

அரியநாச்சி சொல்வதைக் காதி லேயே வாங்காமல், பித்துப் பிடித்தவன் போல் இருந்தான்.

கண்கள் இரண்டும், அகல விரித்திருந்த கால்களுக்கு இடையே நிலை குத்தி இருந்தன.

சிவந்திருந்த வானம், சாம்பல் பூத்து, இருளத் தொடங்கி இருந்தது. பயணி கள் பலர், கடல் காற்றோடு அந்தி மயக்கத்தை அனுபவிக்க, தனித்தும் சேர்ந்தும் கப்பலின் மேல் தளத்தில் நடமாடத் தொடங்கினார்கள். காலனிய நாடுகளின் கருந்தோல் மனிதர்களைக் கண்டாலே அருவருக்கும் வெள்ளைத் தோல் அதிகாரிகளே, பயணிகளில் அதிகம் பேர் இருந்தனர்.

கப்பலில் பயணிக்கும் கீழைத் தேசத்தவரின் திரேக நெடி, பிரித்தானி யர்களை முகம் சுழிக்க வைத்தது. ‘ஜாக்’ கொடியை இறக்கிவிட்டு, சமீபத்தில் விடுதலையான அடிமை தேசத்தவர்களும் கோட்டு, சூட்டை மாட்டிக் கொண்டு, வெள்ளையர்களுக் குச் சமமாக கப்பலிலும் விமானங்களிலும் ஏறிவிடுகிறார்கள். எல்லாம் சுதந்திரம் கொடுத்து தொலைத்ததின் விளைவு.

இந்தியக் கரை கிடக்கும் மேற்குத் திசை நோக்கி, சன்னமான அதிர்வோடு, கடல் கீறிப் போய்க் கொண்டிருந்தது கப்பல். கப்பலின் மேல் தளத்து விளக்குகள் அனைத்தும் அடுத்தடுத்து ஒளிர்ந்தன.

துரைசிங்கத்தின் முரண்டும் பிடிவாத மும் அரியநாச்சியை அச்சுறுத்தியது.

பயண ஒழுங்கை மீறும் குற்றத்துக் காக, கப்பல் நிர்வாகிகள் எப்படி வேண்டுமானாலும் தண்டிக்கலாம். இவை எதையும் அறியாத துரைசிங்கம், கால் பரப்பி அமர்ந்து சண்டித்தனம் பண்ணிக் கொண்டிருந்தான். அரிய நாச்சி, நெஞ்சில் நெருப்பைச் சுமந்து நின்றாள்.

“துரைசிங்கம்... இந்தக் கப்பல்லே நாம் மட்டும் இல்லே. நம்மளைப் பிடிக் காத எத்தனையோ பேர் இருக்காங்க. நிலைமை புரியாம அடம் பிடிச்சா, எல் லாம் கெட்டுப் போயிடும். 20 வருஷ விரதம் வீணாப் போயிடும். நாடு திரும்பி, முடிக்க வேண்டிய காரியங்கள் நமக்கு நிறைய இருக்கு. எதுவானாலும் நம்ம கமராவு(கப்பல் அறை)க்குப் போயி பேசுவோம்.”

தலை நிமிராமல், கண்களை மட்டும் உயர்த்தி, அரியநாச்சியைப் பார்த்தான். குனிந்து, துரைசிங்கத்தின் தோள்களைத் தொட்டாள்.

தலை நிமிர்த்தி திருப்பி, முதல் வகுப்பு அறைக் கதவைப் பார்த்தான். மூக்கு விடைத்து, நீர் கோத்த விழிகளின் இமைகள் ஆடின. உதடுகளுக்குள் பற்கள் நறநறத்தன.

“எந்திரி.”

கையூன்றி எழுந்தான்.

“வா...” தோள் தொட்டு முன் நகர்த்தினாள். தளர்ந்து நடந்தான். மனதில் உள்ளதை வெளியே சொல்ல முடியாமல், வாய்ப் பேச்சு இழந்து போன ஒரு வல்லவனின் தள்ளாட்டத்தைக் காண, அரியநாச்சிக்கு சகிக்கவில்லை.

‘ஏதோ... ஒண்ணு இருக்குது. அது என்ன?’ன்னு தெரியலையே!’ மனசு குமைந்தவாறு நடந்தாள்.

அங்கங்கு நின்ற வெள்ளையர்கள், மழிக்கப்படாத தாடியுடனும் கழுத்து வரை தொங்கும் சிகையுடனும் இருந்த துரைசிங்கத்தையும் மலேசிய உடை தரித்த தமிழ்ப் பெண் அரியநாச்சியையும் காட்சிப் பொருட்களாகப் பார்த்தார்கள்.

கப்பலின் உள் மைய அறைகளுக்குச் செல்லும் இரும்பு ஏணி வழியாக, முதலில் துரைசிங்கம் இறங்கினான். அடுத்து, அரியநாச்சி இறங்கினாள். இரண்டு படிகள் இறங்கியவள், தற்செய லாக முதல் வகுப்பு அறைக் கதவுப் பக்கம் திரும்பினாள். கதவு திறந்தது. அடுத்த படி இறங்காமல், இரண்டாம் படியிலேயே நின்றவாறு பார்த்தாள்.

திறந்த கதவு வழியே, டி.எஸ்.பி. ஸ்காட் வெளியே வந்தான்.

- குருதி பெருகும்...
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:irulappasamy21@gmail.com

குருதி ஆட்டம்தொடர்வேல ராமமூர்த்திபுதன் சமூகம்

You May Like

More From This Category

More From this Author