Published : 27 Dec 2014 10:47 AM
Last Updated : 27 Dec 2014 10:47 AM

மாஸ் மீடியா போகாமலே பாஸ் ஆகலாம்

பிசினஸை பெருக்க, பிராண்டை வளர்க்க தேவை மாஸ் மீடியாவும், விளம்பரத்தில் ஒரு மாஸ் ஹீரோவும் என்றே பல தொழிலதிபர்கள் நினைக்கின்றனர். இரண்டிற்கும் கோடிக்கணக்கில் கொட்டித் தொலைத்து வீதி வழியே வியாபாரம் வருகிறதா என்று வழி மேல் விழி பிதுங்க காத்திருக்கின்றனர். அப்படி செலவழிக்க முடியாதவர் என்ன செய்வார்? மாஸ் போகும் அளவிற்கு காசு இல்லாதவர் எங்கு போவார்?

மாஸ் மீடியா மூலமே பிராண்டை வளர்க்க முடியும் என்றில்லை என்கி றார்கள் ‘எரிக் ஜோகிம்ஸ்தேலர்’ மற்றும் ‘டேவிட் ஏக்கர்’. ஹார்வர்ட் பிசினஸ் ரெவ்யூவில் ‘Building Brands Without Mass Media’ என்ற கட்டுரை யில் சின்ன சைஸ் தொழிலதிபர் முதல் மிடில் கிளாஸ் பிசினஸ்மேன் வரை விரலுக்கேற்ற விளம்பர வீக்கம் வளர்க்கும் வித்தையை வரையறுத் துத் வழங்கியிருக்கிறார்கள்.

இவர்கள் தருவது விற்பனை மேம்பட ஐடியாக்கள் அல்ல, விற்பனை மேம்பாட்டிற்கான அணுகுமுறையை. மாஸ் மீடியா போகாமல் மாஸை மயக்க பிராண்டுகள் கடைபிடிக்க வேண்டிய வழி முறையை. அழகாய் அவர்கள் அளித்த அறிவுரைகளை அடுத்து அளிக்கிறேன்.

பிரமோஷன் உத்தி உங்களுடைய பொறுப்பு

விற்பனை மேம்பாட்டு உத்தி வகுப்பது, அதன் செயலாக்கம் போன்ற வற்றை மீடியா பிரிவிடமோ, விளம்பர ஏஜென்சியுடமோ தருவதே பரவலவாக பல கம்பெனிகளில் நடக்கிறது. கம்பெனி நிர்வாகம்தான் மேம்பாட்டு உத்தியை வடிவமைக்கவேண்டும். பிராண்டைப் பற்றி அதிகம் தெரிந்தவர்களுக்குத்தான் அதன் மேம்பாட்டு உத்திகளை அழகாய் வடிவமைக்கத் தெரியும்; முடியும்.

குழந்தை பெற்று அதை வளர்க்கும் வேலையை ஆயாவிடம் தந்துவிட்டு ஹாயாக இருக்க முடியுமா? இருந்தால் நன்றாகத்தான் இருக்குமா? விளம்பர ஏஜென்சிக்குத் தெரிந்தது மாஸ் மீடியா மட்டுமே. அதில் தானே அவர்களால் பணம் பண்ண முடியும்? அதைத் தானே அவர்கள் பரிந்துரைப்பார்கள்? அதே போல் கம்பெனிகளில் உள்ள மீடியா டிபார்ட்மெண்ட் அவர்கள் பெயருக்கேற்ப மீடியாவை மட்டுமே கட்டிக்கொண்டு அழுவார்கள்? இவர்கள் பிரமோஷன் உத்தி அமைத்தால் மாஸ் மீடியா, மாஸ் ஹீரோ என்று மாபெரும் செலவில்தான் முடியும்!

பிராண்ட் ஐடெண்டிட்டி படியே பிரமோஷன்

எம்.ஆர். ராதா ஒரு படத்தில் கூறுவார்: ‘இப்படித் தான் வாழனும்னு நினைக்கறவங்க ஒரு வகை. எப்படி வேணா வாழலாம்ன்னு வாழறவங்க இரண் டாவது வகை’. எப்படி வேண்டுமானாலும் பிரமோட் செய்யலாம் என்று எப்பாடு பட்டு முயன்றாலும் அது எப்பேற்பட்ட பிராண்டாய் இருந்தாலும் எக்குத்தப்பாய் தான் முடியும்.

பொசிஷனிங், பர்சனாலிட்டி சரியாய் வகுக்கப்பட்டு பிராண்ட் ஐடெண்டிடி படி தான் விற்பனை மேம்பாட்டு உத்திகள் அமைக்கவேண்டும். தித்திப்பும் உப்பும் சரிபாதியாய் கலந்து அதற்கேற்ப ‘50-50’ என்று பெயரி டப்பட்ட பிஸ்கெட்கள் இசை நிகழ்ச்சி அல்லது சினிமா ஷோவை ஸ்பான்சர் செய்வதில்லை. அந்த பிராண்ட் ஸ்பான்சர் செய்தது கிரிக்கெட் மாட்சில் ‘தர்ட் அம்பயர் முடிவு’ காட்டும் போர்டை. பிட்ச் அம்பயர் ‘நீ பார்த்து சொல்லுப்பா’ என்று தர்ட் அம்பயரிடம் முடிவை விட்டுவிடும் போது அந்த போர்டை அனைவரும் பார்க்க அதில் ‘இதை ஸ்பான்சர் செய்வது 50-50’ என்றிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

தர்ட் அம்பயர் முடிவு சிவப்பா இல்லை பச்சையா, அதாவது 50-50 என்ற நிலையை 50-50 என்ற பிராண்ட் ஸ்பான்சர் செய்வது அதன் ஐடெண்டிடி படி தானே! அதனால் தான் அந்த பிரமோஷன் பட்டென்று கண்ணில் பட்டு பிராண்ட் சட்டென்று மனதில் ஒட்டிக்கொண்டது!

சரியான பிரமோஷனால் பிராண்ட் பளிச்சிடும்

மார்க்கெட்டர் பிரமோஷன் செய்வதே வாடிக்கையாளர்களுக்கு பிராண்ட் பளிச்சென்று தெரியவேண்டும் என்றுதான். தெளிவான பிரமோஷனை சரியாக செய்தால் பிராண்ட் தானாகவே பளிச்சென்று தெரியும். அதிகம் செலவழிக்கவும் வேண்டாம்.

பளிச்சென்று பிராண்டு கண்ணில் படவேண்டும் என்று மட்டுமே பிரமோஷன் செய்யக்கூடாது. சென்னையில் பல வீட்டு வாசல் கதவுகளில் ‘நோ பார்க்கிங்’ என்று பிராண்ட் பெயரோடு போர்ட் தொங்குவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் வீட்டு கேட்டிலேயே கூட ஒரு போர்டு இருக்கலாம். அது எந்த பிராண்டுடையது என்று தெரியுமா?

தெரியவில்லையா? பேஷ். உங்கள் வீட்டு வாசலிலுள்ள பிராண்டே தெரியவில்லை என்றால் இது போன்ற பிரமோஷனை நீங்கள் செய்தால் வாடிக்கையாளர்களுக்கு எப்படி உங்கள் பிராண்ட் தெரியும்? பிராண்டிற்கு சம்பந்தமே இல்லாத பிரமோஷன் செய்தால் பளிச்சென்று தெரியாமல் இப்படித்தான் புளிச்சுப் போகும். சரியான பிரமோஷன் செய்யும் போது தான் பிராண்ட் பிரகாசமாய் தெரியும்.

வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும் சன்ஸ்க்ரீம் பிரிவு பிராண்டை ரோட்டில் போஸ்டர், ஹோர்டிங், ஃப்ளெக்ஸ் போர்ட் என்று வைப்பதற்குப் பதிலாக மேற்கூறையில்லாத பஸ் ஸடாப்புகளில் கூறை அமைத்து நிழல் தரும் வகையில் அமைத்து அந்த பஸ் ஸ்டாப்பில் ‘இது போல் உங்கள் சருமத்தை எங்கள் பிராண்ட் பாதுகாக்கும்’ என்று எழுதி வைத்தால் அந்த செய்தி மக்களுக்கு பளிச்செனத் தெரிந்து பிரகாசிக்கும் அல்லவா!

வாடிக்கையாளரை பிரமோஷனில் பங்கேற்க வையுங்கள்

படித்தால் சிலருக்குப் புரியும். சொல்லிக் கொடுத்தால் மற்றவர்க ளுக்குப் புரியும். செய்து பார்த்தால் எல்லாருக்கும் புரியும். பிரமோஷனில் வாடிக்கையாளரும் பங்கேற்கும்படி வடிவமைத்தால் வாடிக்கையாளருக்கு இனிய பிராண்ட் அனுபவம் கிடைக்கிறது. பிராண்டோடு உறவு மலரச் செய்கிறது. ‘செவன் அப்’ குளிர்பானம் தன் பெயருக்கேற்ப ‘ஏழு பேர் ஏழு பால் ஏழு ஓவர்’ என்ற கிரிக்கெட் போட்டி நடத்தி வாடிக்கையாளர்களை பங்கு பெறச்செய்வது இவ்வகையே.

வாடிக்கையாளர் மூலம் வாடிக்கையாளர்களைப் பெறுங்கள்

மாஸ் மீடியா மூலம் புதிய வாடிக்கையாளர்களை பெற அதிகம் செலவழிக்க வேண்டி வரும். இருக்கும் வாடிக்கையாளர்களைக் கொண்டு புதிய வாடிக்கையாளர்களை பெறுவது சீப் அண்ட் பெஸ்ட் முறை. பல காலமாகவே பிரபலமாகத் திகழும் ’ரீடர்ஸ் டைஜஸ்ட்’ என்ற ஆங்கிலப் பத்திரிக்கை விளம்பரம் செய்வதில்லை. மாறாக, தன் வாடிக்கையாளர்களிடம் பத்து நண்பர்கள் பெயரை, விலாசத்தை கேட்டுப் பெறுகிறது.

அவர்களுக்கு ‘உங்கள் நண்பரான இன்னார் இப்பத்திரிக்கை உங்களுக்கு பயனளிக்கும் என்று ரெஃபர் செய்திருக்கிறார். குறைந்த விலையில் ரீடர்ஸ் டைஜஸ்ட் பெற இதோ ஸ்பெஷல் ஆஃபர்’ என்று கடிதம் அனுப்புகிறது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை குறைந்த செலவில் பெற்று கொடி கட்டிப் பறக்கிறது!

பணம் இருக்கிறது என்று மாஸ் மீடியாவை மட்டுமே நம்பாமல் பெரிய கம்பெனிகள் கூட இது போன்ற குறைந்த செலவில் நிறைந்த பிரமோஷன் உத்திகளை திறமையுடன் வடிவமைத்து வெற்றியடையலாம். வெற்றியடைந்திருக்கின்றன. பொருள் இல்லார்க்கு இவ்வுலகில் இடமில்லாமல் போகட்டும். மார்க்கெட்டிங் உலகில் அவர்களுக்கு பேஷாய் இடமுண்டு. கொஞ்சம் பிரயத்தனப்பட்டு, மூளையை கசக்கி, புதுமையாய் சிந்தித்தால் போதும். மாஸ் மீடியா போகாமலே பாஸ் ஆகலாம். வெறும் கையிலேயே முழம் போடலாம். நோகாமல் கூட நோன்பு கும்பிடலாம். மார்க்கெட்டிங் உலகில் உங்கள் பிராண்ட் பளிச்சிடும். பிரகாசிக்கும். பரிமளிக்கும். பணம் பண்ணும்!

satheeshkrishnamurthy@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x