Last Updated : 11 Dec, 2014 12:04 PM

 

Published : 11 Dec 2014 12:04 PM
Last Updated : 11 Dec 2014 12:04 PM

காப்பீட்டுத் துறையில் 49% அந்நிய நேரடி முதலீடு: மாநிலங்களவை தேர்வுக் குழு ஒப்புதல்

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 49 சதவீத அளவுக்கு உயர்த்துவதற்கான வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளன. அரசின் இந்த யோசனைக்கு மாநிலங்களவை தேர்வுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஒருங்கிணைந்த வரம்பு (கம்போசிட் கேப்) வைக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக் கையையும் அரசு ஏற்றுக் கொண்டது. இதனால் மசோதா நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேறும் என்று தெரிகிறது.

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு மற்றும் அந்நிய நிறுவன முதலீடு ஆகிய இரண் டையும் சேர்த்து 49 சதவீதம் என்ற ஒருங்கிணைந்த வரம்பு இருக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்த கருத்து ஏற்கப்பட்டதாக மாநிலங்களவை தேர்வுக் குழு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

தற்போது காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 26 சதவீதமாக உள்ளது. இந்த வரம்பு உயர்த்தப்படுவதன் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிய முதலீட்டு வரம்பு உயர்த் தப்பட்டுள்ளதால் காப்பீட்டுத் துறையில் ரூ. 25 ஆயிரம் கோடி வரை முதலீடு வரும் என கணிக் கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை தேர்வுக் குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதால் அனேகமாக அடுத்த வாரம் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2008-ம் ஆண்டு திருத்தப்பட்ட காப்பீட்டு மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது ஆளும் பாஜக அரசுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக இருக்கும். ஏனெனில் மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடையாது.

2008-ம் ஆண்டிலிருந்து இந்த மசோதாவைக் கொண்டு வர பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான அரசால் இதை நிறைவேற்ற முடியவில்லை. காப்பீட்டுத் துறையில் அந்நிய நிறுவனங்களை அதிக அளவில் ஈடுபடுத்துவதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனால் இந்த மசோதா தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

மாநிலங்களவை தேர்வுக் குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி. ராஜீவ், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஒ பிரையன், சமாஜவாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கே.சி. தியாகி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலங்களவை 15 பேரடங்கிய குழுவை நியமித்தது. இக்குழு வினர் காப்பீட்டுத் துறையில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து ஆராயுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால் கடந்த 6 ஆண்டுகளாக இம்மசோதா நிறைவேறாமல் இருந்தது.

மாநிலங்களவை குழுவின் தலைவர் சந்தன் மித்ரா தலைமையிலான குழு, காப்பீட்டுத் துறையைச் சேர்ந்த ஒருவரை மேல் முறையீட்டு ஆணையத்தில் சேர்க்கலாம் என பரிந்துரைத்தது. இத்தகைய மாற்றம் செய்வதற்கு ஏற்ப சட்ட விதிகளில் மாற்றம் செய்யுமாறு தேர்வுக் குழு செபி-யிடம் பரிந்துரைத்துள்ளது.

தவறு செய்யும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட பரிந்துரை களையும் குழு அளித்துள்ளது. 2011-ம் ஆண்டு நாடாளு மன்றத்தின் நிதித்துறை நிலைக் குழு தலைவராக இருந்த பாஜக-வின் யஷ்வந்த் சின்ஹா, அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கவில்லை. அரசின் இலக்கை எட்டுவதற்கு இது உதவாது என்றும் சர்வதேச அளவில் இந்திய காப்பீட்டுத் துறையை வலுவிழக்கச் செய்துவிடும் என்று குறிப்பிட்டு இதை ஏற்கவில்லை.

இப்போது அவரின் மகன் ஜெயந்த் சின்ஹா மத்திய நிதித்துறை இணையமைச்சராக உள்ளார். காங்கிரஸ் ஆதரவோடு இந்த மசோதாவை பாஜக நிறைவேற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவக் காப்பீட்டுத் துறையில் முதலீட்டு வரம்பை குறைப்பதற்கு இக்குழு நிபந்த னையின்றி ஒப்புதல் அளித்தது. இருப்பினும் ஆயுள் காப்பீடு மற்றும் பொதுக் காப்பீட்டில் முந்தைய நிலை தொடர வேண்டும் என அறிவுறுத்தியது.

மருத்துவக் காப்பீட்டு ரூ. 100 கோடி என முதலீட்டு வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அரசு எடுக் கும் அடுத்த கட்ட பரிந்துரை அடிப்படையில் இந்த மசோதாவை நிறைவேற்றலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசுதாரர் என்பதற்கான விளக்கத்தை சட்ட அமைச்சகமும், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமும் (ஐஆர்டிஏ) இணைந்து மேற்கொள்ளலாம் என குழு பரிந்துரைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x