Last Updated : 02 Aug, 2017 10:01 AM

 

Published : 02 Aug 2017 10:01 AM
Last Updated : 02 Aug 2017 10:01 AM

ஆசிய அளவில் இரண்டாவது பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி: ப்ளும்பெர்க் அறிக்கை

ஆசிய அளவில் இரண்டாவது பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி உருவாகியுள்ளார். ப்ளூபெர்க் ஆசிய பணக்காரர் பட்டியல் அடிப்படையில் ஆசிய அளவில் இரண்டாவது பணக்காரரான லி-கா ஷிங்கை முந்தியுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 1,210 கோடி டாலர் (ரூ.77,000 கோடி) அதிகரித்துள்ளது என்றும் ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் குறைந்த வருமான பிரிவினருக்கு தொலைத் தொடர்பு வசதி கிடைக்கும் வகையில் குறைந்த விலைக்கு போன் அளிக்க முகேஷ் அம்பானி இலக்கு வைத்துள்ளார். அவரது முயற்சிக்கு, முதலீட்டாளர்களும் அணிதிரண்டுள்ளனர் என்றும் கூறியுள்ளது.

முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 3,480 கோடி டாலராக (ரூ.2.2லட்சம்கோடி) உள்ளது. 2016ம் ஆண்டில் இறுதியில் 29 பணக்காரர்கள் பட்டியலில் 19வது இடத்தில் இருந்தார். ஆனால் தற்போது இரண்டாவது இடத்தில் இருந்த லி-கா சிங்கை முந்தியுள்ளார்.

ரூ.1,500 என்கிற விலையில் குறைந்த விலை போனை கடந்த மாதத்தில் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார். இதற்கு பரவலாக வரவேற்பு இருந்தாலும், நிறுவனத்தின் கடன் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் தொலைத் தொடர்பு துறையில் ரூ. 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்துள்ளார்.

ஆனால் தொலைத் தொடர்பு துறையிலிருந்து இன்னும் லாபம் ஈட்டவில்லை. ஜியோ நிறுவனத்தின் கடன் குழுமத்தின் மொத்த கடனில் மூன்று மடங்காக உள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் 90 சதவீத வருமானம் பெட்ரோலியம், சில்லரை வர்த்தகம், மீடியா மற்றும் மின்சார துறையிலிருந்து கிடைக்கிறது.

ஜியோ தொலைத் தொடர்பு சேவையிலிருந்து நடப்பாண்டில் 100 கோடி டாலர் செயல்பாட்டு லாபம் கிடைக்கும். அடுத்த மூன்று ஆண்டுகளில் இது மூன்று மடங்காக அதிகரிக்கும் என்றும் என்று ஸ்டாண்டர்டு அன்ட் பூர் தர நிறுவனத்தின் சிங்கப்பூர் ஆய்வாளர் விஷால் குல்கர்னி கூறியுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x