Published : 23 Aug 2017 10:25 AM
Last Updated : 23 Aug 2017 10:25 AM

இன்ஃபோசிஸ் பங்கு விலை குறித்து கவனித்து வருகிறோம்: ‘செபி’ தலைவர் அஜய் தியாகி கருத்து

இன்ஃபோசிஸ் பங்கின் விலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் (செபி) தலைவர் அஜய் தியாகி தெரிவித்திருக்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விஷால் சிக்கா வெளியேறினார். அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 10 சதவீதம் வரை இன்ஃபோசிஸ் பங்கு சரிந்தது. கடந்த திங்கள் கிழமை வர்த்தகத்திலும் 5 சதவீதம் வரை இந்த பங்கில் சரிவு இருந்தது. கடந்த சனிக்கிழமை ரூ.13,000 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்குவது குறித்து அறிவிப்பினை இன்ஃபோசிஸ் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் இன்ஃபோசிஸ் பங்கின் விலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என தியாகி குறிப்பிட்டார்.அனைத்து டிமாட் கணக்குகளிலும் ஆதார் எண்ணை இந்த ஆண்டு இறுதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் கூறினார்

விஷால் சிக்கா ராஜினாமா செய்ததால் வெள்ளி மற்றும் திங்கள் கிழமையில் இன்ஃபோசிஸ் பங்கு கடுமையாக சரிந்தது. நேற்றைய வர்த்தகத்திலும் சரிந்தாலும், 2 ரூபாய் உயர்ந்து 875.40 ரூபாயில் முடிந்தது.

இந்த சரிவு காரணமாக சந்தை மதிப்பு அடிப்படையில் முதல் 10 இடங்களில் இருந்து இன்ஃபோசிஸ் வெளியேறியது. ஓர் ஆண்டுக்கு முன்பு சந்தை மதிப்பு அடிப்படையில் 5-வது இடத்தில் இன்ஃபோசிஸ் இருந்தது. ரூ.34,000 கோடிக்கு மேல் சரிந்ததால் இன்ஃபோசிஸ் சந்தை மதிப்பு ரூ.2,01,476 லட்சம் கோடியாக இருக்கிறது. 5.08 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் ரிலையன்ஸ் முதல் இடத்திலும், இன்போசிஸ் 11-வது இடத்திலும் உள்ளன.

இன்று முதலீட்டாளர்களை சந்திக்கிறார் மூர்த்தி

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து விஷால் சிக்கா வெளியேறிவுடன், இயக்குநர் குழு நாராயண மூர்த்தி மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்தது. இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமான இன்ஃபோசிஸ் முதலீட்டாளர்களை மூர்த்தி சந்திக்கிறார். இந்த நிறுவனத்தில் நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு 57.72 சதவீதம் இருக்கிறது. குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வசம் 37.53 சதவீத பங்குகள் இருக்கின்றன. ஏற்கெனவே இன்ஃபோசிஸ் பங்குகள் சரிந்து வரும் சூழலில் இவரது சந்திப்பு நடைபெறுகிறது.

இந்த நிலையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணைத் தலைவர் ரவி வெங்கடேசன், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து இன்ஃபோசிஸ் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

இதற்கிடையே முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக பங்குகளை திரும்பி வாங்கும் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி வி.பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். ரூ.1,150 என்பது ஏற்க கூடிய தொகை என்றாலும், இந்த தொகையை ரூ.1,200 ஆக உயர்த்தும் பட்சத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x