Published : 16 Aug 2017 10:14 AM
Last Updated : 16 Aug 2017 10:14 AM

பங்கு விலக்கல் நடவடிக்கையில் திட்டமிட்டபடி 20 அரசு நிறுவனங்களை விற்கும் பணி நடைபெறுகிறது: நிதி ஆயோக் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா தகவல்

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை மூடும் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படுவதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் அர்விந்த் பனகாரியா தெரிவித்தார்.

நஷ்டத்தில் இயங்கும் 20 நிறுவனங்களை மூடிவிடலாம் என்ற நிதி ஆயோக்கின் பரிந்துரையை அரசு ஏற்று செயல்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கைகள் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

அதேசமயம் நஷ்டத்தில் செயல்பட்டாலும் அவற்றை லாபப் பாதைக்கு திருப்ப முடியும், அத்தகைய நிறுவனங்களை தனியார் மயமாக்கலாம் என நிதி ஆயோக் பரிந்துரைத்திருந்தது. அத்தகைய 17 நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக பனகாரியா சுட்டிக் காட்டினார்.

இதுபோன்ற நடவடிக்கைகளில் சற்று தேக்க நிலை காணப்படுவது இயற்கையே என்று குறிப்பிட்ட அவர், அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்த உரிய ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல தனியார்மயமாக்க ஏற்ற நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வகையில் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவை அனைத்தும் மெதுவாக நடைபெறுகின்றன என்று பனகாரியா கூறினார்.

நடப்பு நிதி ஆண்டில் அரசு நிறுவனங்களின் பங்குகளை விலக்கிக் கொள்வது மற்றும் விற்பனை செய்வதன் மூலம் ரூ. 72,500 கோடியைத் திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இதில் அரசு பங்குகளை குறைந்த அளவு விலக்கிக் கொள்வதன் மூலம் ரூ. 46,500 கோடியும், உரிய தனியார் நிறுவனங்களை அடையாளம் கண்டு அவற்றுடன் உத்திசார் அடிப்படையில் பங்குகளை விலக்கிக் கொள்வதன் மூலம் ரூ. 15 ஆயிரம் கோடியும், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் பொதுப்பங்கு வெளியீடு மூலம் ரூ. 11 ஆயிரம் கோடி திரட்டவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

தொழிலாளர் சட்டத்தில் மாற்றம் செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அரசு தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவது குறித்து யோசித்து வருவதாகக் கூறினார்.

மத்திய தொழிலாளர் அமைச்சகம் நான்கு வகையான தொழிலாளர் வரையறைகளை (சம்பளம், தொழில் உறவு, சமூக பாதுகாப்பு மற்றும் நலன், பாதுகாப்பு மற்றும் பணி புரிவதற்கு ஏற்ற சூழல்) ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தி ஏற்கெனவே உள்ள 40 விதிமுறைகளை மாற்ற முடிவு செய்துள்ளது.

பாரதிய மஸ்தூர் சங்க (பிஎம்எஸ்) தலைவர்களுடனான விவாதம் குறித்த கேள்விக்கு அவர்களுடன் ஒரு மணி நேரம் விவாதித்ததாக பனகாரியா கூறினார். அவர்களது அனைத்து கோரிக்கைகளையும் ஒப்புக் கொள்ள முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த தேச நலனுக்கு எது உகந்ததோ அதை அரசு நிச்சயம் செயல்படுத்தும் என்றார்.

நடப்பு நிதி ஆண்டில் நமது பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீத அளவுக்கு இருக்கும் என்று குறிப்பிட்ட அவர் நான்காம் காலாண்டில் இது 8 சதவீத அளவை எட்டும் என்று குறிப்பிட்டார்.

நிதி ஆண்டை ஜனவரி முதல் டிசம்பர் வரை என மாற்றம் செய்வது குறித்து கருத்து தெரிவித்த அவர், இதற்கு எத்தகைய விலையைத் தரப் போகிறோம் என்பதை ஆராய வேண்டும் என்றார்.

நிதி ஆண்டை, காலண்டர் ஆண்டுடன் இணைக்கும் முயற்சியில் நமது வளர்ச்சி அட்டவணை தகவல் தொகுப்பையும் ஒரு சேர இணைக்க வேண்டும். மேலும் ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலத்தில் பயிர் உற்பத்தி பருவத்தையும் இணைக்க வேண்டும். ஏனெனில் இந்தியாவில் பெரும்பாலானோர் விவசாயிகள் என்றும் பனகாரியா குறிப்பிட்டார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x