Last Updated : 10 Aug, 2017 10:38 AM

 

Published : 10 Aug 2017 10:38 AM
Last Updated : 10 Aug 2017 10:38 AM

ஜிஎஸ்டி-யால் உள்நாட்டு உற்பத்தி உயரும்: ஆதி கோத்ரெஜ் நம்பிக்கை

அடுத்த 6 மாதங்களில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கணிசமாக உயரும். இதற்கு தற்போது நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒற்றை வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி பெரிதும் உதவும் என்று முன்னணி தொழிலதிபரான ஆதி கோத்ரெஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதில் இன்னமும் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன என்று சுட்டிக் காட்டினார். இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் நாளடைவில் சரி செய்யப்படும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

ஜிஎஸ்டி அறிமுகத்தை மத்திய அரசு மிகச் சரியாகக் கையாண்டுள்ளது. இது அடுத்த ஆறு மாதங்களில் மிகச் சிறந்த வரி விதிப்பு முறையாக மாறும். இதனால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி உயரும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய அவர் , அதிக மக்கள் தொகை கொண்ட, பல்வேறு மொழி பேசும் மக்கள் கொண்ட இந்தியாவில் ஒரே விதமான அல்லது இரண்டு வகையான வரி விதிப்பு சாத்தியமில்லை. பல்வேறு படி நிலைகளில் வருமானம் ஈட்டுவோர் அனைவரையும் ஒரே நிலையில் வைத்துப் பார்ப்பது நியாயமல்ல என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியபோது குறிப்பிடப்பட்டிருந்த வரி விதிப்புகளைக் காட்டிலும் இப்போது மிகக் குறைந்த விகிதங்களே உள்ளன. தற்போது வேளாண்துறையில் அபரிமிதமான வாய்ப்புகள் உள்ளன. வேளாண் பொருள்களுக்கு மதிப்பு கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலமும் பொருளாதாரமும் வளர்ச்சியடையும். ஒவ்வொரு உணவு தானிய உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நமது வேளாண் உற்பத்தி அதிகரிக்கும். வேளாண் பொருள்களை பாதுகாப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிய வேண்டும். இப்போதைய சூழலில் வீணாவதைத் தடுப்பதும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றார்.

தொழில்துறையில் பெரும்பாலும் தானியங்கி (ரோபோ) நுட்பம் பயன்படுத்துவது அதிகரித்து வருவதால் வேலை வாய்ப்பு குறையும் அபாயம் குறித்து கேட்டதற்கு, இதனால் பெருமளவு வேலை வாய்ப்பு பறிபோகாது என்றும், ரோபோ நுட்பம் பொருளாதார வளர்ச்சிக்கே வழிவகுக்கும் என்றார்.

பொருள் உற்பத்தி அதிகரிப்பால் உற்பத்தி விலை குறையும். அதேபோல நுகர்வு அதிகரிப்பால் பொருளாதாரம் உயரும் என்றார். இதற்கு அதிக முதலீடு தேவை என்றும் சுட்டிக் காட்டினார். வளர்ச்சியை மையமாகக் கொண்டு செயல்படும்போது வேலை வாய்ப்பு தானாகவே உருவாகும். அதேசமயம் கல்வி, திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவைகள்தான் வேலை வாய்ப்புக்கான காரணிகளாகும். இப்போதைய சூழலில் உரிய வேலைக்கு தகுதி வாய்ந்தவர்கள் கிடைக்காத சூழல்தான் நிலவுகிறது. கிடைத்தவர்களைக் கொண்டு பணியிடங்களை நிரப்பும் போக்குதான் உள்ளது என்றும் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x