Published : 24 Aug 2017 10:33 AM
Last Updated : 24 Aug 2017 10:33 AM

நந்தன் நிலகேணியை இன்ஃபோசிஸ் இயக்குநர் குழுவில் நியமிக்க வேண்டும்: மியூச்சுவல் பண்ட் மேலாளர்கள் கோரிக்கை

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் நந்தன் நிலகேணியை நியமனம் செய்ய வேண்டும் என இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் 12 மேலாளர்கள் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி இருக்கின்றனர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மியூச்சுவல் பண்ட்கள் 8.96 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றன.

தற்போதைய சூழலில் நிறுவனத்தை சரியான பாதையில் வழி நடத்த இவரே சரியான நபராக இருப்பார். நந்தன் நிலகேணி மீண்டும் வருவதன் மூலம் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களின் நம்பிக்கை பெற்றவராக இருக்க முடியும். அதனால் நந்தன் நிலகேணியை பரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் 12 தலைவர்களும் இந்த கடிதத்தில் கையெழுத்திட் டிருக்கின்றனர்.

பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி ஆனந்த் ராதாகிருஷ்ணன், ஐடிஎப்சியின் பங்குச்சந்தை பிரிவு தலைவர் அனூப் பாஸ்கர், டிஎஸ்பி பிளாக்ராக் நிறுவனத்தின் அனூப் மகேஸ்வரி, ஹெச்டிஎப்சி மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் பிரசாந்த் ஜெயின், ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் சங்கரன் நரேன், ரிலையன்ஸ் நிப்பான் நிறுவனத்தின் சுனில் சிங்கானியா உள்ளிட்ட 12 முக்கியமான முதலீட்டு அதிகாரிகள் இக் கோரிக்கையை விடுத்திருக்கின்றனர்.

அடுத்த சிஇஓ?

இதற்கிடையே நந்தன் நிலகேணி தலைமைச் செயல் அதிகாரியாக மீண்டும் பொறுப்பேற்பார் என பிஸினஸ் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இவரது நியமனம் முடிவு செய்யப்படும் என்றும் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இவரது நியமனம் சரியானது என்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி வி.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தற்போதைய சூழலில் வாடிக்கையாளர்களின் தேவையை நிலகேணி புரிந்துகொள்ள முடியும். சர்வதேச அளவில் நிலகேணிக்கு மதிப்பு இருக்கிறது என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

நிலகேணி, கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார். 2009-ம் ஆண்டு ஆதார் திட்டத்துக்கு தலைமை ஏற்க சென்றுவிட்டார். 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் வரை இந்த பொறுப்பில் இருந்தார். இவர் குடும்பத்துக்கு 2.29 சதவீத இன்ஃபோசிஸ் பங்குகள் உள்ளன.

இவரது நியமனம் தொடர்பான செய்தி காரணமாக வர்த்தகத்தின் இடையே 3 சதவீதம் வரை இந்த பங்கு உயர்ந்தது. வர்த்தகத்தின் முடிவில் 1.99 சதவீதம் உயர்ந்து முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x