Published : 04 Aug 2017 10:33 AM
Last Updated : 04 Aug 2017 10:33 AM

ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்க வாய்ப்பு: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகம்

ஜிஎஸ்டி-யில்முன்னேற்றம் இருக்கும் பட்சத்தில் வரி விகிதத்தை குறைக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். மக்களவையில் நடந்த விவாதத்தின் போது இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

ஜிஎஸ்டி நெட்வொர்கை (ஜிஎஸ்டிஎன்) மாற்ற வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்திருக்கிறது. ஜிஎஸ்டிஎன் அரசாங்க நிறுவனம் அல்ல. ஆனால் அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் பெரும்பான்மை பலம் அரசுக்கு இருக்கிறது. அதனால் அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு முக்கியமான முடிவும் எடுக்க முடியாது.அதே சமயத்தில் மத்திய தணிக்கை குழுவும் இந்த நிறுவனத்தை சோதனை செய்யலாம்.

அதேபோல பல வகையான வரி விகிதங்கள் இருக்கிறது என்னும் விமர்சனமும் வைக்கப்படுகிறது. இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை இருக்கும் நாட்டில், அதுவும் வறுமை கோட்டுக்கு கீழ் பலர் இருக்கும் சூழ்நிலையில் ஒரே வரி விகிதம் இந்தியாவில் சாத்தியம் இல்லை. காலணிக்கும் சொகுசு காருக்கும் ஒரே வகையான வரி விகிதம் நிர்ணயம் செய்ய முடியாது.

மாற்று திறனாளிகளுக்கான சக்கரத்துக்கு 5 % வரி விதிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை இதற்கு 0 சதவீதம் வரி விதிக்கப்பட்டால் உற்பத்தியாளர் உள்ளீட்டு வரி வரவினை பெறமுடியாது. சில கார் உற்பத்தி நிறுவனங்கள் ஹைபிரிட் கார்களின் விலையை ஏன் உயர்த்தி இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது. இந்த வகையான கார்களுக்கு வரி குறைக்கப்பட்டிருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதுதான் ஜிஎஸ்டியின் முக்கியமான குறிக்கோள். வெளிநாடுகளில் விலை குறைவான பொருளை இறக்குமதி செய்வதை அரசு விரும்பவில்லை என்றும் ஜேட்லி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x