Last Updated : 18 Aug, 2017 10:39 AM

 

Published : 18 Aug 2017 10:39 AM
Last Updated : 18 Aug 2017 10:39 AM

வணிக நூலகம்: மாறுபட்ட கோணத்தில் பயணம் செய்தல்...

பு

த்தாக்கம் பற்றி நூல் ஆசிரியர்கள் எழுதிய நூல்கள் மிகவும் பிரபலம். மாறாக, இந்த கட்டுரையில் அனைத்து கருத்துகளையும் கூறுவது நடைமுறை சாத்தியம் அல்ல. ஆனால், விருப்பம் உள்ளவர்கள் புத்தகத்தை படிக்கும்பொழுது பலவகையான புரிந்துணர்வுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். வியாபார உத்திகளைப் பற்றியும் நிறுவனப் பணிகளைப் பற்றியும் பல வகையான கருத்துகளை புத்தகம் முழுதும் நூலாசிரியர்கள் மிக தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். புதிய சந்தைகளை கைப்பற்றவும், புதிய தலைமையை உருவாக்கவும் மாறுபட்ட கோணத்திலும், வேறுபட்ட சிந்தனையிலும் பயணம் செய்வது அவசியம் என்பதை அடிக்கடி எடுத்துக்காட்டுகளோடு கூறியிருக்கிறார்.

பொருட்களின் தனிச் சிறப்புமிக்க அம்சங்களையும், வாடிக்கையாளர் குணாதிசயங்களையும் நடைமுறை போக்குகளையும், சந்தைத் தரவுகளையும், போட்டிகள் மூலம் விற்பனையை ஊக்கப்படுத்துவது மட்டுமே விற்பனையாளர்களும், மேலாளர்களும் உற்றுநோக்கும் காரணிகளாக அமைகின்றன. மாறாக, ஒரு வாடிக்கையாளர் ஒரு பொருளை வாங்கும்பொழுது எந்த வகையான பணிகளை அவர் எதிர்பார்க்கிறார் எந்த வகையான சேவைகளை அவர் ஏற்றுக் கொள்கிறார் என்பதை பற்றி அறிந்து இருப்பது அவசியமாகிறது. இது போன்ற செய்திகளை தெரிந்து கொள்பவர்கள் வாடிக்கையாளர்களை வசப்படுத்தலாம், விற்பனையில் சாதனை படைக்கலாம்.

நிகோடின் தேவைக்காக ஒருவர் புகை பிடிக்கலாம். தன்னை அமைதிப் படுத்திக்கொள்ளவும், ஓய்வு எடுத்துக்கொள்ளவும் புகைப்பான்களை வாங்குகிறார். வெளியே செல்லும் பொழுது மற்றவர்களிடம் கதை பேசுவதற்காகவும் செய்கிறார். முகநூலுக்கும், புகைப்பிடித்தலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை என்பதே நூலாசிரியரின் கருத்து. எப்படி என்றால் முகநூலை ஒருவர் பயன்படுத்தும் பொழும் புகைப்பிடிப்பதற்கான காரணிகள் அனைத்தையும் இங்கேயும் பயன்படுத்துகிறார். எனவே ஒருவர் ஏன் அந்த பொருளை வாங்குகிறார் என்பதை அறிந்து கொண்டால் விற்பனை மேம்பட உதவும். இந்த நூலிலேயே மிக முக்கியமான மதிப்பு மிக்க பகுதியாக வேலை தேடுதலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதைப் பற்றி குறிப்பிடும் பொழுது ஐந்து வித்தியாசமான முறைகளைப் பற்றி விவரித்து கூறுகிறார்கள்.

1. அருகாமை

2. எதுவும் அற்றவைகளுடன் போட்டியிடுதல்

3. தெரியாத பிரச்சினைகளையும் தீர்த்தல்

4. வாடிக்கையாளர்கள் தவிர்க்கும் காரணிகள்

5. அரிதான பயன்கள்

அருகாமை

ஒரு பணியை மேற்கொள்ளும் பொழுது தன்னுடைய பிரச்சினைகளையும் அடுத்தவர்களின் பிரச்சினைகளையும் அளவிட்டு அவைகளை நேர்த்தியாக செயல்முறைக்குள் கொண்டுவருவது என்பது மிகவும் கடினமான பணி. அது போன்ற நேரங்களில் மற்றவர்களின் அருகாமை கையிலிருக்கும் பிரச்சினைகளையும் மனதில் உள்ள குழப்பங்களையும் நீக்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். பெரும்பாலும் வேலை தேடுபவர்கள் தங்களையும் மற்றவர்களையும் இணைத்துக் கொள்ளும் அருகாமை என்ற அற்புதமான காரணியை தவற விட்டுவிடுகிறார்கள். கூட்டை விட்டு வெளியில் வந்து மற்றவர்களோடு அருகாமையை ஏற்படுத்தி பணியாற்றும் பொழுது புதிய வகையில் பணி செய்வதுடன் திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

எதுவும் அற்றவைகளுடன் போட்டி

பொருட்களை வாங்காதவர்களை தவிர்ப்பது வாடிக்கையான செயலாக இருக்கலாம். ஆனால், அவர்களிடமிருந்து பெறப்படும் உள்ளுணர்வும் அறிவுபூர்வமான தாக்கமும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும். பொருட்களை வாங்குபவர்களிடமிருந்து ஏன் வாங்குகிறார்கள் என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில்களைவிட பொருட்களை வாங்காதவர்களிடம் ஏன் வாங்கவில்லை என்ற கேள்விக்கு கிடைக்கும் விடைகள் வித்தியாசமானவை. அவை புதிய விற்பனைகளை ஏற்படுத்த ஏதுவாக அமையும். சில நேரங்களில் தற்போது கொடுத்துவரும் சேவைகளும் பொருட்களும் எந்த அளவிற்கு வசதி குறைவாக இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளும் பொழுது அவைகளை நிவர்த்திக்க எதுவும் அற்றவைகளுடன் போட்டியிட்டால் வெற்றி நிச்சயம். எதுவும் அற்றவை என்ற சொல் கேட்கும் கேள்வியும் இணைக்கும் நிகழ்வுகளும் எதுவும் பயன்தராது என்ற நிலையில் சொல்லப்படுவதே தவிர சூனியத்தை குறிப்பது அல்ல.

தெரியாத பிரச்சினை தீர்த்தல்

வாடிக்கையாளர்களில் சில பேர் பொருட்களை வாங்கியிருப்பார்கள் ஆனால் அவர்கள் அதை சரிவர பயன்படுத்த தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். பொருட்களை விற்றவுடன் வேலை முடிந்தது என்று எண்ணாமல், வாடிக்கையாளரின் தவிப்புகளுக்குக் காரணம் என்ன என்பதை கண்டு சரிசெய்தால் அதன் மூலம் விற்பனை பெருகும், வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியையும் சேர்த்து அள்ளலாம்.சில வேளைகளில் வாடிக்கையாளர்களோ சக பணியாளர்களோ எவ்வாறு செய்து முடிப்பது என்று திகைத்து போகும் பொழுது அந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவும் யாரும் விடுபட்டுப் போக முடியாது. புதியதை கண்டதாலும், புதிய செயல்களை செய்ததாலும் உடன் இருப்பவர்கள் அடையும் மகிழ்ச்சி புதிய உறவுகளை கூடுதலாக கொண்டு வரும். இது போன்ற வேலையை செய்பவர்களுக்கு திருப்தியும் மகிழ்ச்சியும் திரும்ப திரும்ப வரும். அதுபோன்று இல்லாதவர்களுக்கு பணியில் தொய்வும் திருப்தி இல்லாமையும் வருவதற்கு சாத்தியம் அதிகம்.

வாடிக்கையாளர் தவிர்க்கும் காரணி

சக பணியாளர்களோ வாடிக்கையாளர்களோ தவிர்க்கும் செயல்களை ஏன் என்ற கேள்வியோடு அணுகி அதற்கு விடை கிடைத்துவிட்டால் அதுபோன்ற செயல்கள் வெற்றிக்கு வழி காட்டும். உதாரணமாக ஒரு மருத்துவரை சந்திப்பதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்து இருப்பது தலைவலி வந்தவருக்கு தலைவலி விட்டுப்போகும் அளவிற்கு காலத்தை விழுங்கலாம். மிகக் கொடிய நோய்களுக்கும், தவிர்க்க முடியாத வியாதிகளுக்கும் மருத்துவரை அணுகியே தீர வேண்டும் என்பது கட்டாயம். சில இடங்களில் மருந்துக்கடைகளில் மருந்து ஆளுநர்கள் இருப்பார்கள் இது எல்லா கடைகளுக்கும் பொருந்தாது. நூலில் கூறியுள்ளவாறு CVS PHARMACY STORES என்பவை ஏற்படுத்துவதற்கான காரணம் இது போன்று ஆரம்ப நிலையிலும் விரைவில் குணமாக கூடிய வலிகளும் நோய்களும் எளிதான மருந்துகளால் குணமாகும் படி இருக்கின்றது என்பது வித்தியாசமான அணுகுமுறையின் வெளிப்பாடு. அதுபோன்ற மாறுபட்ட பணிகளை அது தொடர்பான வேறுபட்ட பணிகளையும் மேற்கொள்பவர்கள் திருப்தியையும் மகிழ்ச்சியையும் தவிர வேறு எதையும் அடைய முடியாது. சுருங்க கூறின் தேவை இருக்கும் இடத்தில் புதிய வழிகளைக் கண்டறிந்து பயன்பாட்டில் கொண்டுவரும் பொழுது பணியும் இனிக்கும், பலமும் கூடும். புதுமை ஓங்கும்.

அரிதான பயன்கள்

பதப்பிரயோகம் சரியானதாக இருக்கலாம். ஆனால், அதில் உள்ள பொருள் எந்த ஒரு வாடிக்கையாளரும் அல்லது பொருட்களை உபயோகிப்பவரும் புதுமையான வழியில் பொருட்களையும் சேவைகளையும் பார்க்கவும், பாவிக்கவும் வழியிருக்குமானால் அதைக் கண்டறிவது சிறப்பு. நாம் எதிர்பார் க்காத எண்ணிப்பார்க்க முடியாத வழிகளில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை காண்பவர்கள் புதுமையை புகுத்துகிறார்கள்.

அதிர்ஷ்டம் மட்டுமே வெற்றிக்கு வழிக்காட்டும் என்ற எண்ணத்தை மாற்றி எந்த செயல்களைச் செய்தாலும் அவைகளைப் புதுமையாகவும், வித்தியாசமானதாகவும், வேறுபட்டதாகவும், தேவையானதாகவும் செய்யும் பொழுது வெற்றியும் மகிழ்ச்சியும் நிரந்தரமாகத் தங்கிவிடும். எளிதான முறையில் மொழியாக்கம் செய்வது இந்த நூலைப் பொருத்தவரை மிகப்பெரிய சவால். மூலத்தைப்படிப்பவர்கள் முழுமையை புரிந்து புத்தாக்கத்திற்கு வழி கோலுவார்கள்.

தொடர்புக்கு: rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x