Last Updated : 02 Aug, 2017 10:05 AM

 

Published : 02 Aug 2017 10:05 AM
Last Updated : 02 Aug 2017 10:05 AM

வளர்ச்சியா.. மதச்சார்பின்மையா? - ஒரு தர்ம சங்கடம்

ள்ளிக் காலத்தில் படித்த சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய தி டேல் ஆப் டூ சிட்டிஸ் நாவலின் ஆரம்ப வரிகள் சிலருக்கு நினைவு இருக்கலாம். ``இதுதான் மிகச் சிறந்த காலம்.. இதுதான் மிகவும் மோசமான காலம், இதுதான் அறிவாளிகளின் காலம்.. இதுதான் முட்டாள்களின் காலம், இதுதான் வசந்த காலத்தின் நம்பிக்கை.. இதுதான் குளிர் காலத்தின் அவநம்பிக்கை...'' அந்த ஆங்கில நாவலின் மிகவும் பேசப்பட்ட வரிகள் மட்டுமல்ல இவை... நம் நாட்டின் நிகழ் கால முரண்பாடுகளையும் சொல்கின்றன. கடந்த மாதத்தில் நடந்த இரண்டு சம்பவங்களின் மூலம் இவற்றை விளக்குகிறேன்.

ஜூன் 30-ம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மிகச் சிறந்த தருணத்தை நாம் கொண்டாடினோம். அன்றுதான் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் 17 வரிகளுக்கு மாற்றாக நீண்ட நாள் கனவான ஜிஎஸ்டி நிறைவேறியது. இந்தியா ஒரே பொதுவான சந்தையானது. பொது நலனுக்காக மாநில அரசுகள் வரி விதிப்பு தொடர்பான தங்கள் இறையாண்மையை தாமாகவே முன்வந்து விட்டுக் கொடுத்ததால் தொலைநோக்கு அரசியல் சட்டம் நிறைவேறிய தருணம் அது. தனது இறையாண்மை அடையாளங்களை மீட்க பிரிட்டன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியர்கள் மிகவும் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்திருப்பது முரண்பாடாக தோன்றும். அடாவடித்தனமாக நடந்து கொள்கிறது என விமர்சனம் செய்யப்பட்ட அரசு, மிகவும் பொறுமையுடன், கருத்துகளை கேட்டறிந்து, மாநிலங்களைச் சமாதானம் செய்து அரசியல் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்து, ஜிஎஸ்டி கவுன்சில் மூலம் கருத்தொற்றுமை ஏற்படுத்தி இருக்கிறது. ஜிஎஸ்டி மிகவும் சரியானது எனக் கூற முடியாது என்றாலும் இது ஒரு நல்ல ஆரம்பம்.

ஒரு வாரம் முன்பு நாம் மிகவும் மோசமான தருணத்தை சந்தித்தோம். ஓடும் ரயிலில் 16 வயது ஜுனைத் கொல்லப்பட்டதற்கு துக்கம் அனுஷ்டித்தோம். புதிய உடைகளை தைக்க டெல்லி வந்த அவன், வீடு திரும்பும் வழியில் ரயிலில் ஒரு கும்பல் தாக்கியதில், அந்த உடைகளை அணியாமலேயே இறந்துவிட்டான். மாட்டிறைச்சி சாப்பிடுபவன் என அந்தக் கும்பல் அவன் மீது குற்றம் சாட்டியிருக்கிறது. ``16 வயதுக் குழந்தை அவன். கொடூரமாகக் கொல்லும் அளவுக்கு அவனை எப்படி வெறுக்க முடிந்தது'', எனக் கேட்கிறார் அவன் தந்தை. நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆங்காங்கே ரத்த வெறி பிடித்த கும்பல் நடத்தும் தாக்குதல்களில் ஒன்றுதான் ஜுனைத்தின் படுகொலை. இவர்களைத் தடுக்கவும் முடியவில்லை, கட்டுப்படுத்தவும் முடியவில்லை. பசு பாதுகாப்பு என்ற பெயரிலும் மாட்டிறைச்சி சாப்பிட்டார்கள் எனக் கூறியும் இந்தப் படுகொலையை அவர்கள் நிகழ்த்தி வருகிறார்கள்.

வளர்ச்சி - மதச்சார்பின்மை முரண்

முரண்பட்ட இந்த 2 நிகழ்வுகளால் நம் மனம் என்ன முடிவுக்கு வர முடியும்? பிரஞ்சுப் புரட்சியின்போது இதே மனநிலைதான் சார்லஸ் டிக்கன்ஸுக்கு ஏற்பட்டது. கொடுங்கோல் அரசு வீழ்ந்ததால் வசந்த கால நம்பிக்கை ஏற்பட்டது. அதே நேரம் அழிவும் மரணமும் மிகுந்த அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்தியாவில் நாமும் தற்போது, வளர்ச்சிக்கும் மதச்சார்பின்மைக்கும் இடையில் சிக்கி மனக் குழப்பத்துடன் போராடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இதுவா, அதுவா என நாம் ஏன் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் - வளர்ச்சி, மதச்சார்பின்மை இரண்டுமே ஏன் நமக்கு ஒரே நேரத்தில் கிடைக்கக் கூடாது? துரதிருஷ்டவசமாக காங்கிரஸ் நமக்கு மதச்சார்பின்மையை மட்டுமே அளித்தது. வளர்ச்சியை அளிக்கவில்லை. மோடியின் பாஜக அரசோ வளர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் மதச்சார்பின்மையைத் தரவில்லை. ஒரு அரசியல் கட்சி இரண்டையுமே கொடுத்தால் நமக்கு எந்தத் தர்ம சங்கடமும் இருக்காது.

காங்கிரஸ், ஆண்டாண்டு காலமாக நமக்கு இரண்டையுமே தருவதாக வாக்களித்தது. தவறான சோஷலிசக் கொள்கையால் வளச்சியைத் தர முடியவில்லை. ஆனால் பொருளாதாரச் சீர்திருத்தங்களால், 1991-க்குப் பிறகு நல்ல வளர்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக 2003 முதல் 2011 வரை நல்ல வளர்ச்சி இருந்தது. ஆனால் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இல்லை. இலவசங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டன. அதனால் 2011-ம் ஆண்டுக்குப் பிறகு, நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 9 % இருந்து 4.5 % மாகக் குறைந்தது. பல லட்சம் வேலை இழப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக, வேலை வாய்ப்புகளை உருவாக்கி,இந்திய வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வேன் என உறுதி அளித்த, மோடியை மக்கள் தேர்வு செய்தார்கள். யாருக்கு ஓட்டுப் போடுவது என முடிவு செய்யாமல் இருந்த பலரும், மதச்சார்பின்மைக்கு ஆபத்து வரும் எனத் தெரிந்தும் பாஜகவுக்கு ஓட்டுப் போட்டார்கள். ஜனநாயகத்தின் மற்ற தூண்கள் வலுவானவை என அவர்கள் நினைத்தார்கள்.

ஏமாற்றத்தில் மக்கள்

வாக்குறுதிபடி மோடியால் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தம்தான். அவருக்கு இன்னும் 2 ஆண்டுகள்தான் இருக்கின்றன. அதற்குள் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை என்றால், இன்னொரு தலைமுறையும் வீணாகிப் போய்விடும். இதற்கிடையில், சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதல்கள் நமது நாகரீகத்தின் அடிப்படையான அகிம்சையைக் காயப்படுத்தி வருகிறது. இதனால் வளர்ச்சியை எதிர்பார்த்து வாக்களித்த மக்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். வேலை, வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டிய மோடி அரசு, சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பை வளர்க்கத் துணை போகிறது. மதச்சார்பின்மைக் கொள்கைகளை வளர்ச்சியோடு ஒப்பிட்டு பார்க்க முடியாது. குஜராத் கலவரத்தையும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் அவசியத்தையும் சமமாக ஒப்பிட்டுப் பார்க்க அதீத கற்பனை அவசியம் என ஸ்க்ரோல்.இன் இணையதளத்தில் எழுதுகிறார் அஜாஸ் அஷ்ரப். ஆனால், மோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கத் தொடங்கிவிட்டார் என்ற எண்ணத்தில்தான் 2019-ம் ஆண்டு தேர்தலை வாக்காளர்கள் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஒரு செயல் நல்லதா, இல்லையா என்பதை வழிமுறைகளும் முடிவும்தான் தீர்மானிக்கும் எனக் கோட்பாடுகள் கூறுகின்றன. ஒரு நல்ல செயல் அதிகம் பேருக்கு அதிக நன்மைகளை ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்களும், அரசியல் சட்டத்தை உருவாக்குபவர்களும் அறிவார்கள். மகாபாரதத்தில் வரும் அரசவை ஆலோசகர் விதுரன் அவர்களில் ஒருவர். ``ஒரு நல்ல அரசன், ஒரு கிராமத்துக்காக ஒரு ஆளை பலி கொடுப்பார், ஒரு நாட்டுக்காக ஒரு கிராமத்தையே பலி கொடுப்பார்'' எனக் கூறுவார் விதுரன். நல்ல பலனை ஏற்படுத்த நினைக்கும் ஆட்சியாளர்கள் எப்போதுமே, வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புக்கும் துணை நிற்பார்கள்.

இதற்கு எதிரான கொள்கையைக் கொண்டவர்கள் தத்துவ அறிஞர் காண்ட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர். ஒரு செயலின் விளைவை மட்டும் பார்க்காமல், அதற்கான வழிமுறைகள் சரியானதுதானா எனப் பார்த்து அதன் அடிப்படையில் முடிவு செய்வார்கள். அவர்களைப் பொருத்தவரை விளைவு அல்ல, நோக்கமும் வழிமுறைகளும்தான் முக்கியம். கொல்வது என்பது எந்தச் சூழலிலும் தவறான ஒன்றுதான். எனவே, காண்ட், மகாத்மா காந்தி கொள்கையைப் பின்பற்றும் எவரும் நாட்டின் வளர்ச்சியை விட, மதச்சார்பின்மையைத்தான் தேர்வு செய்வார்கள்.

உண்மையில் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் வெளியில் இருந்து இல்லை. உள்ளேயே தான் இருக்கிறது. இந்திய முஸ்லிம்கள் தான் உலகிலேயே மிகவும் அமைதியானவர்கள். ஆனால், ஜுனைத் படுகொலை போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்தால், அவை முஸ்லிம்களைத் தீவிரவாதப் பாதையை நோக்கிப் பயணிக்க வைத்துவிடும். இந்தியாவின் எதிர்காலத்தை பாதிக்கும் அச்சுறுத்தல் இதுவாகத்தான் இருக்கும். இதுபோன்ற சம்பவங்களை பிரதமர் மோடி கண்டிக்காமல் இருப்பதும் கட்டுப்படுத்தாமல் இருப்பதும், தீவிரவாதிகளுக்குச் சாதகமாகி விடும்.

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் கண்டிப்பாக ஒரு தர்ம சங்கடத்தை சந்திப்பார்கள். ``விளைவு முக்கியமல்ல.. அதை நோக்கிய வழிமுறைகள்தான் முக்கியம்.. லட்சக்கணக்கான மக்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்பதை விட, ஒரு உயிரின் மதிப்புதான் முக்கியம்'' எனப் பேசுவது எளிது. ஜனநாயகத்தில், ஒவ்வொருவரும் நாட்டு நடப்பை அறிந்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஒரு நாள், மதச்சார்பற்ற ஒரு கட்சி வேலை வாய்ப்பையும், வளர்ச்சியையும் அளிக்க முடிந்தால், அப்போது நமது குழப்பம் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும்.

தொடர்புக்கு: gurcharandas@gmail.com

தமிழில்.எஸ்.ரவீந்திரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x