Published : 20 Jul 2017 10:07 AM
Last Updated : 20 Jul 2017 10:07 AM

விஜய் மல்லையா மோசடி வழக்கு: லண்டன் விரைந்தது அமலாக்கத்துறை

விஜய் மல்லையா மீதான மோசடி வழக்கின் ஆதாரங்களை அளிப்பதற்காக அமலாக்கத்துறை லண்டன் சென்றது. அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று லண்டன் சென்றடைந்தனர். விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கையின் பகுதியாக ஆதாரங்களை நீதிமன்றத்தில் அளிக்க இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இணை இயக்குநர் அளவிலான அதிகாரி மற்றும் சட்ட ஆலோசகர் கொண்ட இரண்டு நபர் குழு திங்கள் கிழமை லண்டன் புறப்பட்டுள்ளது. இரண்டு நாள் பயணமான சென்றுள்ள அதிகாரிகள் லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கின்றனர்.

லண்டன் நீதிமன்றத்தில் நடைபெறும் விஜய் மல்லையாவின் நாடு கடத்தல் வழக்கிற்கு தேவையான 5,500 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை மற்றும் இதர ஆவணங்களை அளித்துள்ளனர். மேலும் அமலாக்கத்துறை அதிகாரி மற்றும் சட்ட வல்லுநரும் விசாரணைக்கு தேவையான சட்ட உதவிகளையும் வழங்குவர்.

மல்லையா மீதான குற்றப்பத்திரிகையில் பண மோசடி தொடர்பான அனைத்து விவரங்களும் உள்ளன. ஐடிபிஐ வங்கியில் வாங்கிய ரூ.900 கோடி கடனை இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தனக்கு சொந்தமான போலி நிறுவனங்கள் பெயரில் மாற்றியது குறித்த விவரங்கள் உள்ளன. ஐடிபிஐ தொடந்த வழக்கில் மத்திய புலனாய்வு துறையுடன் இணைந்து அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை மேற்கொண்டது.

இதற்கிடையே விஜய் மல்லையாவின் வெளிநாட்டு கணக்குகளில் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் விஜய் மல்லையாவுக்கு இங்கிலாந்து மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள கணக்குகளை கண்டறிந்து அமலாக்கத்துறை அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. மேலும் இந்த சொத்துகள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள அந்தந்த நாடுகளுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதவும் நீதிமன்றம் கடந்த வாரத்தில் அனுமதி அளித்திருந்தது. இதனையடுத்து பிரான்ஸ், மொரீஷியஸ், சிங்கப்பூர், அமெரிக்க, அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரக ஆகிய ஆ று நாடுகளுக்கு அமலாக்கத்துறை கடிதங்களை அனுப்ப உள்ளது.

இந்த நாடுகளில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக 13 போலி நிறுவனங்கள் உள்ளன. இவை எந்த தொழிலையும் மேற்கொள்ளவில்லை. வங்கி கடனை மாற்றிக் கொள்வதற்காக மட்டுமே இந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x