Last Updated : 16 Jun, 2017 10:34 AM

 

Published : 16 Jun 2017 10:34 AM
Last Updated : 16 Jun 2017 10:34 AM

வணிக நூலகம்: தடைகளைத் தகர்த்து வா

வணிகத் தொடர்புடைய தீர்வு களுக்கு புதிய விடைகளும் புத்தாக்கப் படைப்புகளும் வெற்றியைத் தரும். இதைத்தான் வட்டத்தை விட்டு வெளியே வா என்றும், குறுகிய வட்டத்திற்குள் எண்ணங்களை ஓட விடக்கூடாது என்றும் கூறுகிறார்கள். இதைப் பற்றி எழுதும்போதோ பேசும்போதோ அதனுடைய முக்கியத்துவத்தை பெரும்பாலும் தொலைத்து விட்டு வேறு எதையோ தேடிக்கொண்டு இருப்பதை போன்ற உணர்வுகள் உண்டாகின்றன. புதிதாக எண்ணவும், வட்டத்தை விட்டு வெளியே வரவும் நாம் தயராக இல்லை. ஏனென்றால் உள் உணர்வு காரணமாக நாம் காண்பவைகளை பிரித்து அடுக்கி வைத்துக்கொள்ளவும் பெட்டிகளாக சேர்த்துக்கொள்ளவும் கூடுகளோடும், எல்லைகளோடும் வரையறைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். வட்டத்திற்கு வெளியே வந்து புதியவற்றை சிந்தனை செய்வது மேற்கூறிய வழிகளுக்கு ஒத்துவராத ஒன்று. ஆனால் ஒவ்வொரு படியாக ஏறினால் எந்த நிலையையும் ஏறிமுடிக்கலாம். ஒரே நேரத்தில் பத்தடியை தாண்டுவது பெரும்பாலும் இயலாத காரியம். அதனால்தான் பத்து அடிகள் தாண்டுவதை எண்ணியே புத்தாக்கத்தை தத்து கொடுத்து விடுகிறோம்.

நூலாசிரியர்கள் கூறியதை போல மனிதர்கள் தங்களுடைய திறமைகளின் குறைபாடுகளையும், எண்ணங்களின் குறைந்த அளவீடுகளையும் எண்ணிப் பார்த்து எதிர்காலத்திற்குப் புத்தாக்கம் புரிவதற்கு ஐந்து காரணிகளை அள்ளித் தெளிக்கிறார்கள். மாறும் உலகில் வேகமான மாற்றங்களுக்கு ஈடு கொடுப்பவர்கள் புதிய சிந்தனைகளை உருவாக்குகிறார்கள் அல்லது தத்து எடுத்துக்கொள்கிறார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது மிக உண்மை என்று BIC நிறுவனம் எடுத்துக் காட்டியுள்ளது. கால மாறுதல்களுக்கும் வேறுபட்ட எண்ண ஓட்டங்களுக்கும் மாறுபட்ட எண்ணச் சிதறல்களுக்கும் பழமை பத்தியமாக இருக்கும். விருந்து வேண்டுபவர்கள் புத்தாக்கத்தைத் தேர்ந்து எடுத்தால் ஒழிய நிலைத்து நின்று நிறுவனங்களை வெற்றி படிகட்டுகளில் ஏற்றிச் செல்ல முடியாது.

BIC என்ற இந்த நிறுவனம் பந்துமுனை பேனாக்களை மை தொட்டு எழுதும் பேனாக்களுக்கு மாற்றாக வடிவமைத்தது, வட்டத்தை விட்டு வெளியே வந்த காரணத்தினால்தான். உபயோகித்த பின் தூக்கி எறியும் பொருட்களை உற்பத்தி செய்வதில் தலைநிமிர்ந்து தன்னிகரற்று இந்த நிறுவனம் இன்றும் முதலிடத்தில் இருக்கிறது. பந்து முனைப் பேனாக்களை மட்டுமே உற்பத்தி செய்து கொண்டிருந்திருந்தால் தொழிலை விட்டு என்றோ வெளியேறி இருக்க வேண்டும். மாறாக இன்றும் நிலைத்து நின்று 240 மில்லியன் யூரோக்களுக்கு மேல் விற்றுக் கொள்முதலை நிலைநிறுத்திக் கொண்டிருந்தால் அதற்கு பெயர்தான் வட்டத்திற்கு வெளியே வருவது வானமே எல்லை என்ற சிந்தனை என்று கூறினால் மிகையாகாது. பேனாக்களை ஒன்று இரண்டாக விற்கும் பொழுது அந்த சாதுரியம் புரிபடவில்லை. மொத்தமாக பெட்டிகளில் அடுக்கும் பொழுது அந்த பெட்டிகள் விலை குறைவாகவும் உபயோகித்தபின் தூக்கி எறியக்கூடியதாகவும் இருக்கும் வகையில் வடிவமைத்தார்கள்.

அந்த வடிவமைப்பு உபயோகித்த அட்டை பெட்டிகளை எளிதில் அகற்றுவதில் வெற்றியை தந்தது. பேனாவை தொடர்ந்து முகசவர கருவிகள், புகைப்பான்களை பற்றவைக்கும் ஒளிப்பான்கள் மற்றும் கைபேசிகள் என்று எண்ணிக்கை தொடர்ந்து கொண்டே இருந்தது. மேலே சொன்ன நிறுவனம் அந்த ஐந்து வகை வெற்றிகாரணிகளை பின்பற்றியதனால் வட்டத்திற்கு வெளியே வர முடிந்தது. வானைத் தொடும் வரவுகளைக் குவிக்க முடிந்தது.

புதிய வரையறைகள்

புத்தாக்கத்திற்கு முதல் எதிரி. அமைப்பு, கடின அலசல்கள், வித்தியாசமான எண்ண வெளிப்பாடுகள் ஆகியவை இருந்தால் மட்டுமே வரையறைகளைத் தகர்த்துக் கொண்டு புதிய வரையறைகளை நிர்ணயிக்க முடியும். BOSTON CONSULTING GROUP (BCG) என்ற நிறுவனத்தை சார்ந்த ஆலோசகர்கள் அளித்த மிகப்புதிய எண்ண வெளிப்பாடு புதிய பெட்டிகளை உருவாக்குங்கள் என்பதாகும். பழைய பெட்டிகள் இற்றுப்போகலாம், உடைந்து இருக்கலாம், வடிவத்தில் ஈர்ப்பு இல்லாமல் இருக்கலாம், எளிதில் ஈர்க்க இயலாமல் இருக்கலாம் எனவே கையிலிருக்கும் பெட்டியை விட புதிய பெட்டியை வாங்கும் பொழுது நாம் எந்த அளவிற்கு வட்டத்திலிருந்து வெளியே வருகிறோம். வரையறைகளைத் தகர்க்கின்றோம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

எனவே, ஒரு நிறுவனமோ, வணிகமோ எந்த அளவிற்கு வெளிவந்து தகர்ப்புகளை படிக்கற்களாக மாற்றி வெற்றியடைய முயற்சிக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இது போன்ற பெட்டிகளோ வரைமுறைகளோ எளிதாக ஏற்படுத்தி அவைகளை மாற்றத்திற்கு உட்படுத்தாவிட்டால் புத்தாக்கம் புதைந்து போய்விடும். அவைகளை எவ்வாறு ஏற்படுத்துவது என்று கீழ் வரும் ஐந்து காரணிகள் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன.

1. எதிலும் ஐயம் கொள்

2. முடிந்த வரை சோதனை செய்

3. வேறுபட்டு சிந்தனை செய்

4. வேறுபட்ட சிந்தனைகளை ஒன்று கூட்டு

5. அயராது மறு மதிப்பீடு செய்

எதிலும் ஐயம் கொள்

ஒவ்வொருவரும் சந்தேக பிராணி களாக வலம் வர வேண்டும் என்ற எண்ணம் அல்ல. மாறாக, எதிலும் நிறைவு காணாமல் இன்னும் நிறைவை மேம்படுத்தலாம் என்ற எண்ணம் அவசியம். தற்போதைய நிகழ்வுகளை சவால்விட்டு புதியன காணும் பொழுது அவைகளை வட்டத்திற்கு வெளியே அழைத்து செல்ல நிறைவை மேம்படுத்தும் நிகழ்வுகள் தேவை.

முடிந்த வரை சோதனை செய்

சுற்றியுள்ள சாத்தியக் கூறுகளைக் கண்டறிந்து விடுபட்டவைகளையோ புதி தாக ஒன்றையோ ஏற்படுத்திக் கொள்ளு தல் அவசியம் இல்லை என்றால் எழுது பொருட்களில் இருந்து முக சவர கருவிகளுக்கு நிறுவனங்கள் பயணித்து இருக்க வாய்ப்புகளே இல்லை.

வேறுபட்டு சிந்தனை செய்

வேறுபட்ட சிந்தனைகள் மாறுபட்ட பொருட்களை உற்பத்தி செய்யவும் உருவாக்கவும் உதவி செய்யும். எழுது பொருட்களை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் அந்த நிறுவனம் கைபேசி வரை வளர்ந்து குறுகிய வட்டத்திற்குள் இருந்து வெளியே வந்து இருக்க வாய்ப்புகள் கிடையாது. எனவே எல்லோரும் விவசாயத்தில் ஒரே பயிரை விளைவிப்பதால் ஏற்படும் விலை வீழ்ச்சியை போல நிறுவனங்கள் செயல்பட முடியாது. அதற்கு வேறுபட்ட சிந்தனைகள் மாறுபட்ட கோணத்தில் புத்தாக்கத்திற்கு வழிவகுத்தால் விற்று முதல் கூடும், லாபம் அதிகரிக்கும் புதிய வரையறைகளை ஏற்படுத்தலாம்.

வேறுபட்ட சிந்தனைகளை ஒன்று கூட்டு

வெவ்வேறு சிந்தனைகளை வெவ் வேறு பொருட்களாக வடிவமைத்து அவைகளை ஒரே நிறுவனத்தின் கீழ் உற்பத்தி செய்து வணிகத்தில் முதலிடம் பெறுவது வேறுபட்ட சிந்தனைகளை ஒன்று கூட்டுவதனால் மட்டுமே நிகழும். அடுத்ததாக வெவ்வேறு வகையான வணிக வாய்ப்புகளை மறு ஆய்வு செய்து குறுகிய வட்டத்திற்குள் குறைந்த செலவும் அதிக உற்பத்தியும் உள்ள வழியை தேர்ந்தெடுப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.

அயராது மறு மதிப்பீடு செய்

ஒரு முறை வெற்றியடைந்த செயல்பாடுகளோ, பொருட்களோ, சந்தைபடுத்தப்பட்ட எண்ணங்களோ வாழ்நாள் முழுவதும் வெற்றிக்கு உத்திரவாதம் அளிக்காது. எனவே அயராது மறு மதிப்பீடு செய்து கொண்டே இருத்தல் அவசியம். அவ்வாறு மேற்கொள்ளும் போது செலவினங்களைக் குறைத்து, வரையறைகளைக் கூட்டி வருமானத்தை அதிகரிக்க வழிகள் தோன்றும். எந்த ஒரு நல்ல எண்ணமோ செயலோ நிலையானது அல்ல. எனவே மறு ஆய்வு என்பது ஒரு முறை அல்ல அயராது மேற்கொள்ளும் நிறுவனங்கள் வெற்றியை மட்டுமே தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன என்பதை இந்த நூலின் கருத்துகள் மூலம் அறி கின்றோம். புதிய வரையறைகளை வகுத்துக் கொள்ளுங்கள். தடைகளை தாண்டி வெளியே வாருங்கள்.

தொடர்புக்கு: rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x