Published : 18 Feb 2014 10:03 AM
Last Updated : 18 Feb 2014 10:03 AM

நடுநிலையோடு தயாரிக்கப்பட்டுள்ளது: தொழில் துறையினர் கருத்து

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் நடுநிலையோடு தயாரிக்கப்பட்டுள்ளது என்று தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். தொழில்துறையினரின் எதிர் பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஃபிக்கி தலைவர் சித்தார்த் பிர்லா கருத்து தெரிவித்துள்ளார்.

இது இடைக்கால பட்ஜெட், செலவு அனுமதி கோரிக்கைக்காக தாக்கல் செய்யப்படுவது. இதில் எந்த அளவுக்கு சலுகைகள் தர முடியுமோ அந்த அளவுக்கு அதிகபட்ச சலுகைகளை நிதி அமைச்சர் தந்துள்ளார் என்று பட்ஜெட் குறித்து வெளியிட்ட கருத்து கேட்பில் அவர் தெரிவித்துள்ளார்.

செலவு அனுமதி கோரிக்கையை மையமாக வைத்து தயாரிக்கப் பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்டில் இதைவிட வேறெதையும் அதிகமாக எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் அவர் ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின்படி ஆட்டோமொபைல் துறை தேக்க நிலையைப் போக்க உரிய சலுகையை அளித்துள்ளார். இது உற்பத்தித்துறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று சித்தார்த் பிர்லா தெரிவித்துள்ளார்.

இந்த பட்ஜெட் அறிவிப்புகளால் சாதாரண மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பது மற்றொரு மகிழ்ச்சிகரமான செய்தி யாகும். இப்போது அளிக்கப்பட்ட சலுகைகள் எவ்வளவு காலம் தொடரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட் மிகுந்த நடு நிலையோடு தயாரிக்கப்பட்டுள்ளது என்று ஹெச்எஸ்பிசி வங்கியின் தலைமை அதிகாரி சுநீல் சங்காய் தெரிவித்துள்ளார்.

பொதுவாக தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட் பெரும் பாலும் ஜனரஞ்சகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவ துண்டு. ஆனால் இது மிகுந்த நடுநிலையோடு அனைத்துத் தரப்பினரையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என் அவர் மேலும் கூறினார்.

உற்பத்தித் துறைக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகை மற்றும் ஆட்டோமொபைல் துறைக்கு அளிக்கப்பட்டுள்ள உற்பத்தி வரிச் சலுகை நிச்சயம் இத்துறை வளர்ச்சிக்கு வித்திடும் என்பதில் சந்தேகமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (சிஏடி) குறைந்துள்ளது நல்ல அறிகுறியாகும். அடுத்த ஆண்டு அது மேலும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நல்ல அறிகுறியாகும் என்று ஜேகே பேப்பர் நிறுவன நிர்வாக இயக்குநர் ஹர்ஷ் பதி சிங்கானியா தெரிவித்தார். வேளாண்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.

பொதுத்தேர்தலை எதிர்கொள்ள உள்ள சூழ்நிலையில், நிதி அமைச்சர் மிகவும் நடுநிலையோடு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதில் பெரிய செலவின அறிவிப்புகள் எதையும் வெளியிடாமல், பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்க முயற்சித்திருப்பது வரவேற்கத்தகுந்தது என்று சிங்கானியா குறிப்பிட்டார்.

பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு எதையும் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் உற்பத்தித் துறையை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள மிகவும் ஆச்சர்யமளிக்கும் விஷயமாகும். முதன்மை பொருள் மற்றும் ஆட்டோமொபைல் துறையில் உற்பத்தி வரி குறைப்பு நடவடிக்கைகள் சிறந்த பலனை அளிக்கும் என்று அசோசேம் தலைவர் ராணா கபூர் தெரிவித்துள்ளார்.

அடுத்து அமையவுள்ள புதிய அரசு உற்பத்தித்துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நிரந்தமான ஊக்குவிப்பு சலுகைகளை அளிக்கும் என நம்புவதாகக் குறிப்பிட்ட கபூர், ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும் முழுமை யான பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

இப்போதைய சூழலில் இத்தகைய உற்பத்தி வரி குறைப்பு நடவடிக்கைகள் ஆட்டோமொபைல் துறைக்கு மிகவும் அவசியம். இதன் மூலம் லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அசோசேம் செயல் டி.எஸ். ரவாத் குறிப்பிட்டார். சாதாரண மக்களின் எதிர்பார்ப்பு மட்டுமின்றி தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் வகையில் நிதியமைச்சரின் இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

வாக்கு வங்கியைப் பற்றிக் கவலைப்படாமல் நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிட் டுள்ளார் சிதம்பரம். இதன் வெளிப்பாடே உற்பத்தித்துறைக்கு அவர் அளித்துள்ள சலுகைகள் என்று ரவாத் மேலும் கூறினார். உற்பத்தி வரிக்குறைப்பு நடவடிக்கை மூலம் உள்நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளார். மேலும் கிராமப் புறத்தில் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் அவரது பட்ஜெட் வழிவகுத்துள்ளது என்று ரவாத் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x