Published : 22 Nov 2013 12:00 AM
Last Updated : 22 Nov 2013 12:00 AM

பாதுகாப்பான முதலீட்டுக்கு ஏற்ற நாடு இந்தியா: ப.சிதம்பரம்

பாதுகாப்பான முதலீட்டுக்கு ஏற்ற நாடாக இந்தியா விளங்குகிறது. எனவே இந்தியாவிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியேறியவர்கள் இந்தியாவில் மீண்டும் முதலீடு செய்ய வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த தெற்காசிய மாநாட்டு கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது: உலகிலேயே அனைத்துத் துறைகளிலும் முதலீடு செய்யக் கூடிய வாய்ப்புள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. கட்டமைப்புத் துறையில் 12-வது ஐந்தாண்டு திட்ட ஆவணத்தின் அடிப்படையில் ஒரு லட்சம் கோடி டாலர் முதலீடு தேவைப்படுகிறது. இதில் தனியார் துறையினர் பாதியளவுக்கு முதலீடு செய்வர் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

இந்தியாவில் பல்வேறு வகையான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அரசாங்க பத்திரங்கள் மற்றும் நிறுவன கடன் பத்திரங்களிலும் முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. இது தவிர பரஸ்பர நிதி, கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஆகியவற்றிலும் முதலீடு செய்யலாம். பொதுத்துறை நிறுவனங்களில் கடன் பத்திர முதலீட்டு வாய்ப்பும் உள்ளது. மேலும் எண்ணெய், எரிவாயுத் துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு வாய்ப்பு உள்ளது.

விரைவிலேயே பொதுத்துறை பரிமாற்ற வர்த்தக நிதியம் ஏற்படுத்த உள்ளதாகவும், இதில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்து பத்திரங்களை வாங்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு இப்போது ஸ்திரமடைந்து வருகிறது. ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது. இதனால் ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்ற, இறக்க நிலை மாறி ஸ்திரமான நிலை உருவாகியுள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு அதன் உண்மை நிலையை எட்டியுள்ளது. எனவே இந்தியாவில் முதலீடு செய்வோருக்கு மிகச் சிறந்த பலன் கிடைக்கும். ஏற்ற, இறக்க நிலை மாறி ஸ்திரமான நிலையை எட்டியுள்ளதால் முதலீட்டுக்கு ஏற்ற பலன் கிடைக்கும் என்றார்.

இந்த கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்து வருவதை தடுத்து நிறுத்த ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கையின் பலனாக மதிப்பு ஸ்திரமடைந்துள்ளது. அத்துடன் மாற்று மதிப்பும் சரிவிலிருந்து மீண்டு பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்பு இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், வெளிநாடுகளில் வெளியிட்ட கடன் பத்திரத்தில் அதிகம் பேர் முதலீடு செய்ததிலிருந்தே இந்திய ரூபாயின் மதிப்பு மீது வெளிநாட்டவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது. இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்து முடிவெடுங்கள் என்று கூறுவதற்குத் தயக்கமாக உள்ளது. இது ஆரம்ப நிலைதான். இருப்பினும் அன்னிய முதலீடுகள் அதிகரித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

2003-ம் ஆண்டிலிருந்து இந்தியாவுக்கு அன்னிய முதலீடுகள் அதிகம் வருகின்றன. 1991-ம் ஆண்டில் வெறும் 200 கோடி டாலராக இருந்த அன்னிய முதலீடு 2013-ம் ஆண்டில் 7,000 கோடி டாலராக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் முதலீடுகளைத் திரட்டுவதற்கான சிறப்பு ஏற்பாட்டை இரண்டு மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி மேற்கொண்டது. இந்த சிறப்பு முதலீட்டில் வெளிநாட்டினர் அதிக முதலீடுகளை செய்து வருகின்றனர். இந்தத் திட்டம் நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதுவரையில் 1,600 கோடி டாலர் திரட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எப்சிஎன்ஆர் பி கணக்கில் முதலீடு செய்யும் வெளிநாட்டினர், அந்த நாட்டு கரன்சியில் தங்களது முதலீடுகளை மேற்கொள்ள முடியும். அதற்கு அதிகபட்ச வட்டி அளிக்கப்படும்.

சமீபகாலமாக வெற்றிகரமான தொழில்முனைவோர் மற்றும் அதிக முதலீடு செய்யும் தனிநபர்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருவதாக சிதம்பரம் கூறினார்.

இந்தியா இதுவரை 72 பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தங்களை செய்துள்ளது. இது தவிர ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தமும் (சிசிஇஏ) சில நாடுகளுடன் செய்து கொண்டுள்ளது. இத்தகைய ஒப்பந்தத்தை ஆசியான் நாடுகளுடன் செய்து கொள்வதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் அடிப்படை பொருளாதாரம் மிகவும் வலுவாக இருப்பதால் இந்தியா முதலீடுகளுக்கு பாதுகாப்பான நாடாக விளங்குகிறது என்று சிதம்பரம் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் வசிக்கும் 2 கோடி இந்தியர்களின் வருவாய் 1 லட்சம் கோடி டாலராகும். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதமாகும். நாட்டு மக்கள் தொகையில் 2 சதவீதம் உள்ள வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பு அதிகமாகும்போது இந்தியாவும் வளம் பெறும் என்று அவர் கூறினார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஆண்டு வருமானம் 40,000 கோடி டாலராக உள்ளது. எனவேதான் இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x