Published : 13 Nov 2013 12:00 AM
Last Updated : 13 Nov 2013 12:00 AM

சாலையோரச் சிறுவனும் சி. எஸ். ஆரும்

மகள் பள்ளி பாடத்தை உரக்கப் படித்துக் கொண்டிருந்தாள். வறுமை பற்றிய பொருளாதாரப் பாடம். காது கொடுத்ததில் மனம் கலைந்தது. தெரிந்த சேதி தான், இத்தனைக்கும். பாகிஸ்தான், இலங்கை, சீனாவைக் காட்டிலும் இந்தியாவில் வறுமை மிக அதிகம். நம் தேசத்தில் 1.25 டாலருக்குள் வாழும் மக்கட்தொகை 42%. பாகிஸ்தானில் 23%, சீனாவில் 16%, இலங்கையில் வெறும் 7%. வறுமை அதிகம் உள்ள மாநிலங்கள் ஒடிசா, பிகார், சத்தீஸ்கர். வறுமையில் கீழ் வரிசையில் கேரளம்.

என் பார்வையை உணர்ந்து ஒரு கேள்வி கேட்டாள்: “வறுமையான மாநிலங்களில் தான் தீவிரவாதம் அதிகமாக உள்ளது. இத்தனைக்கும் அங்கு தொழிற்சாலைகளும் அதிகமாக உள்ளன. கேரளத்தில் இரண்டும் கம்மி. எப்படிப்பா?”

வெறும் பத்து நிமிடங்கள் தான் விளக்கினேன். “இப்படியெல்லாம் எங்களுக்கு சொல்லித்தரப்படவில்லை!” என்றாள். காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். நன்கு ஆராய்ந்து எழுதப்பட்ட சி.பி.எஸ்.இ. பாடத்தை வெறும் தேர்வுக்கான விஷயமாக மட்டும் பார்க்க வைத்து வளரும் சமுதாயத்தையே சமூக பிரக்ஞையற்று வளர்த்து வருகிறோம்.

அமெரிக்காவை விட பிரேசில் நாட்டில் வறுமை மிகக்குறைவு என்று பேச ஆரம்பித்தான் மகன். பின் மனைவியுடன் காலை காபியுடன் நடந்த டாக் ஷோவில் மகளுக்கு பள்ளிக்கு கிளம்ப தாமதமாகிக்கொண்டிருந்தது.

“அப்பா, ஒவ்வொரு பெரிய கம்பெனியும் ஒவ்வொரு மாவட்டத்தை தத்து எடுத்துக் கொண்டாலே வறுமை ஒழிஞ்சிடுமே?” என்று கேட்டு விட்டு என் பதிலுக்கு நிற்காமல் கிளம்பி விட்டாள். அவள் சென்ற பின் விவாதம் நின்றது. வெளியே நின்று உள்ளே தொடர்ந்தது என்று சொல்வது தான் சரி!

தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்புகள் மற்றும் பங்களிப்பு இன்று சி.எஸ்.ஆர் (Corporate Social Responsibility) என்ற வார்த்தையால் பெரிதாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஒரு தனியார் நிறுவனம் ஏன் சமூகத்திற்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற கேள்வியை முதலில் கேட்க வேண்டும். “இது அரசாங்கத்தின் வேலை. லாபமாக தொழில் நடத்தி நாட்டின் ஜி.டி.பி.க்கு பங்களித்தாலே போதும்” என்ற நிலை ப்பாடுதான் வெகு காலம் இருந்தது.

டாடா நிறுவனம் தொழிலாளர் சட்டங்கள் இயற்றுவதற்கு முன்னரே தொழிலாளர் நலன், அவர்கள் சார்ந்த குடும்பம் மற்றும் சமூக நலன் என பல்வேறு திட்டங்களை தங்கள் எல்லா நிறுவனங்கள் மூலமும் செய்து வருகின்றது. பிறகு இதே வழியில் தொழிலாளர் வாழும் கிராமங்களுக்கும், தொழிற்சாலை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் சில அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ஆரம்பித்தது.

இது தொண்டு என்பதை விட தன் சுற்றத்தை தன் வசம் வைத்திருக்கும் வியாபார சூட்சமம். மாசு, தொழிற்சாலை கழிவு, தொழிற்சாலையினால் ஏற்படும் நேரடி/மறைமுக நஷ்டங்கள் இவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதை ஒரு நஷ்ட ஈடாக, தொழில் அமைதிக்கான தற்காப்பு அரசியல் நடவடிக்கையாகவும் உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் செய்வதுண்டு.

ஒவ்வொரு கம்பெனியின் சி.எஸ்.ஆர் நடவடிக்கையையும் ஆழ்ந்து நோக்கினால் அதன் நோக்கங்கள் புரியும்.

ஒரு வெளிநாட்டு கம்பெனி ஒரு கிராமத்தில் தொழில் தொடங்கினால், அதன் பெருவாரியான பலன்கள்

(லாபம், வேலை வாய்ப்பு, தொழில் வாய்ப்பு) மண்ணின் மக்களுக்கு போய்ச் சேருவதில்லை. சிலருக்கு வேலை கிடைக்கும்; அதுவும் பலர் ஒப்பந்த தொழிலாளிகளாகத் தான் சேர முடிகிறது. அயல் நாட்டுகாரர்களின் சொகுசு வாழ்க்கையையும், வெளி மாநிலத்து மேலாளர்களின் அதிகாரத்தையும் பார்க்கும் பொழுது உள்ளூர் மக்களிடம் தோன்றும் மன உளைச்சலை சமாளிக்கத் தான் சி.எஸ்.ஆரை பயன்படுத்துகின்றன.

சாலை அமைத்தல், குடி நீர் வசதி செய்தல், பள்ளிகூடங்களுக்கு இலவச புத்தகங்கள், கோயில் திருப்பணி இப்படித் தான் பல காலம் போய் கொண்டிருந்தது.

இன்று கம்பெனி சட்ட சீர்திருத்தம் சி.எஸ்.ஆரை கட்டாயமாக்குகிறது. வரி ஏய்ப்பும் பல சட்ட மீறல்களும் செய்ய இயலும் போது இதை சமாளிக்க முடியாதா என்ற கேள்விகள் எழுந்தாலும் இது வரவேற்கத்தக்கதே!

சில ஐ.டி. கம்பெனிகள் எந்த நிர்பந்தமும் இல்லாமல் பெரிய அளவில் சமூகத் தொண்டு செய்வதையும் பார்க்கிறோம். சில நிறுவனங்கள் இதை பணியாளர் ஒற்றுமை மற்றும் அவர்களின் நிறுவன விசுவாசத்திற்கான காரணிகளாகப் பார்த்தும் ஊக்குவிக்கிறார்கள். வாரம் முழுவதும் மானிட்டரை மட்டும் பார்த்து வேலை செய்யும் பலர் இது போன்ற கம்பெனி நடவடிக்கைகளில் பெரிதும் உற்சாகமாக பணியாற்றுவதைப் பார்க்கிறோம். இது ஹெச். ஆர். வேலையாக இல்லாமல் ஒரு தனித்துறையாக செயல்பட்டால் இன்னும் சிறப்பாக செய்ய முடியும். சட்டம், விளம்பரம், வியாபார வியூகம், தற்காப்பு அரசியல், பணியாளர் நல்லுறவு, வாடிக்கையாளரிடம் நன்மதிப்பு என பல காரணங்கள் சி.எஸ்.ஆர் செய்ய இருக்கலாம், தவறில்லை. ஆனால் அதை திறம்பட செய்தல் அவசியம். வியாபரத்திற்கு செய்யும் திட்டமும் செயல்பாட்டு வீரியமும் இதற்குத் தேவை.

சி.எஸ்.ஆர் சிறப்பாகச் செய்ய என் ஆலோசனைகள்:

1.எதற்காக சி.எஸ்.ஆர் என்பதை தெளிவு செய்து கொள்ளுங்கள். அதற்கான நிதி ஒதுக்கீடும் செயல்பாட்டுத் திட்டமும் குழுவும் அவசியம்.

2.உங்கள் பணியாளர்களை இதில் ஈடுபடுத்துங்கள். அவர்கள் எண்ணங்களை கேளுங்கள். சமூகத் தேவைகள் உங்களை விட அவர்களுக்குத் தெரியும்.

3.அதிகத் தேவைகள் இருந்தும் யாரும் அதிகம் செய்யாத துறைகளை தேர்ந்தெடுங்கள்.

4.வியாபார சுழற்சிக்கு ஏற்ப திட்டங்களை துவங்கியும் முடக்கியும் வைக்காதீர்கள். தொடர்ந்து செய்யுங்கள்.

5.உங்கள் பணி பற்றி வெளி ஆட்கள் கொண்டு திறன் ஆய்வு செய்யுங்கள். உங்கள் முதலீட்டின் பலன்களை தொடர்ந்து கணக்கில் இடுங்கள்.

6.மற்ற தொழில் நிறுவனங்கள், சேவை மையங்கள், அரசாங்கம், கல்வி அமைப்புகள் என தொடர்ந்து இது பற்றி பேசுங்கள். உங்கள் பார்வைகள் விரியும்.

பொதுவாக என்ன என்னவெல்லாம் செய்யலாம் என்று என்னிடம் பட்டியல் கேட்டார் ஒரு பெரிய நிறுவன அதிகாரி.

நான் சொன்னேன்: “ஆபீசுக்கு சிலராவது மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு வையுங்கள். பெண்கள் செய்யும் வேலைகளை திருநங்கைகளுக்கும் அளிக்கலாம். குறிப்பிட்ட வேலைகளிலாவது சில பழங்குடி வகுப்பினருக்கு முன்னுரிமை கொடுங்கள். சுனாமி, வெள்ளம் போன்ற பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை அல்லது தொழில் வாய்ப்பு கொடுங்கள். சுற்றியுள்ள கிராமத்தில் ஒரு நூலகம் அமையுங்கள். 60 யை தாண்டிய பெரியவர்களுக்கு வீட்டிலிருந்தே செய்யும் வேலகளை ஒப்பந்த அடிப்படையில் கொடுங்கள். உங்கள் தொழிலாளிகள் தங்கள் பெண் குழந்தைகளை கல்லூரிகளில் சேர்த்தால் அதற்கு ஊக்கத் தொகை கொடுங்கள். மாவட்டம் தோறும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி அளிக்க உதவுங்கள். உங்கள் தொழிலாளிகளின் குடும்ப நபர்கள் கொண்டு சுய உதவி குழுக்கள் அமைத்து செயல்பட வையுங்கள்...நான் சொன்ன அனைத்துமே உங்கள் கம்பெனிக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியவை!”

அதற்குப் பிறகு நான் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் அவர் “தொடர்பு எல்லைக்கு வெளியே” இருக்கிறார்! சி.எஸ்.ஆர் மிகப் பெரிய வாய்ப்பு. சிக்னலில் நம் கண்ணாடிக் கதவை தட்டி பிச்சை கேட்கும் சிறுவன், நாளை துப்பாக்கி காட்டி பணம் பறிக்காமல் இருக்க.. இன்று நமக்குக் கிடைத்த வாய்ப்பு!

டாக்டர். ஆர். கார்த்திகேயன் - gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x