Last Updated : 16 Jan, 2017 08:27 PM

 

Published : 16 Jan 2017 08:27 PM
Last Updated : 16 Jan 2017 08:27 PM

இந்தியாவில் 58% மக்களின் சொத்து 1% பணக்காரர்களிடம் குவிந்துள்ளது: ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை தகவல்

இந்தியாவில் வருமான ஏற்றத் தாழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஒரு சதவீத பணக்காரர்களிடம் 58 சதவீத மக்களின் சொத்து குவிந்துள்ளது. சர்வதேச அளவுடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம் அதிகம் என்று ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

உலக பொருளாதார மைய மாநாடு தொடங்கும் முன்பாக தன்னார்வ உரிமைகள் குழுவான ஆக்ஸ்பாம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கிடையிலான இடைவெளி இதில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் உள்ள 7 பெரும் பணக்காரர்களிடம் 21,600 கோடி டாலர் குவிந்துள்ளது. இது இந்தியாவின் 70 சதவீத மக்கள் வசம் உள்ள சொத்துகளின் மதிப்புக்கு இணையானது என்றும் குறிப்பிட்டுள்ளது.

உலக அளவில் 8 பெரும் கோடீஸ்வரர்களிடம் குவிந்துள்ள தொகையானது உலக மக்கள் தொகையில் 50 சதவீதம் பேரிடம் குவிந்துள்ள தொகைக்கு இணையாக உள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது..

இந்தியாவில் உள்ள 84 கோடீஸ்வரர்களிடம் ஒட்டுமொத்தமாக 24,800 கோடி டாலர் மதிப்பிலான சொத்து உள்ளது. இதில் முகேஷ் அம்பானி (1,930 கோடி டாலர்), திலிப் சாங்வி (1,670 கோடி டாலர்), அஸிம் பிரேம்ஜி (1,500 கோடி டாலர்), ஷிவ் நாடார் (1,110 கோடி டாலர்), சைரஸ் பூனாவாலா (850 கோடி டாலர்), லஷ்மி மிட்டல் 840 கோடி டாலர்), உதய் கோடக் (630 கோடி டாலர்), குமார் மங்களம் பிர்லா (610 கோடி டாலர்) ஆகியோரிடம் மிக அதிக அளவு சொத்துகள் உள்ளன.

உலகம் முழுவதும் உள்ள சொத்துகளின் மதிப்பு 25,570 லட்சம் கோடி டாலராகும். இதில் 650 லட்சம் கோடி டாலர் சொத்து கோடீஸ்வரர்கள் வசம் உள்ளது. பில்கேட்ஸ் (7,500 கோடி டாலர்), அமான்சியோ ஒர்டேகா (6,700 கோடி டாலர்), வாரன் பஃபெட் 6,080 கோடி டாலர்) சொத்துகள் உள்ளன.

இந்த ஆய்வறிக்கைக்கு 99 சதவீத மக்களுக்கான பொருளாதாரம் என்று பெயரிட்டுள்ள ஆக்ஸ்ஃபாம், அனைத்து மக்களுக்கும் சென்றடையக்கூடிய மனித பொருளாதாரத்தை உருவாக்குங்கள், ஒரு சிலர் மட்டும் பயனடையும் பொருளாதாரத்தால் பயனில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

2015-ம் ஆண்டிலிருந்து பணக்காரர்களாக உள்ள ஒரு சதவீத மக்கள்தான் தொடர்ந்து பணம் ஈட்டியுள்ளனர். மற்றவர்களின் நிலை அப்படியே உள்ளது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

அடுத்த 20 ஆண்டுகளில் 500 கோடீஸ்வரர்களிடம் 210 லட்சம் கோடி டாலர் இருக்கும். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) விட அதிகம் என்று சுட்டிக் காட்டியுள்ளது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் ஜிடிபி-யை விட அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளது.

உலகில் உள்ள ஏழை மக்களில் பாதிக்கும் குறைவானவர்களின் சொத்து மதிப்பானது கடந்த இருபது ஆண்டுகளில் உள்ளதை விட தற்போது குறைந்துள்ளது. கோடீஸ்வரர்களில் 10 சதவீதம் பேர் சீனா, இந்தோனேசியா, லாவோஸ், இந்தியா, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ளனர். இவர்களின் வருமானம் கடந்த 20 ஆண்டுகளில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேசமயம் ஏழைகளின் வருமானம் கடந்த 20 ஆண்டுகளில் 15 சதவீதம் சரிந்துள்ளது.

பணியிடங்களில் ஊதியம் வழங்கலில் பாரபட்சம், பெண்களுக்கு குறைவான ஊதியம் ஆகியன ஏற்றத் தாழ்வுக்கான முக்கியக் காரணமாகும். பெண்களை விட ஆண்களுக்கு 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை வித்தியாசம் உள்ளதாக ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) வெளியிட்டுள்ள ஊதிய விகிதம் தொடர்பான அறிக்கையை சுட்டிக் காட்டியுள்ள ஆக்ஸ்ஃபாம், இந்தியாவில் பாலின ஊதிய விகித ஏற்றத் தாழ்வு மிக அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. ஒரே பணியை நிறைவேற்றும் பெண்களுக்கு ஆண்களைவிட 30 சதவீதம் குறைவாக ஊதியம் அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 60 சதவீத பெண்கள் குறைவான ஊதியம் பெறுகின்றனர். 15 சதவீதம்பேர்தான் அதிக ஊதியம் பெறுகின்றனர். இதனால் ஊதிய விகிதத்தில் பாலின இடைவெளி இந்தியாவில் அதிகமாக உள்ளது.

இந்தியாவில் உள்ள 40 கோடி பெண்களில் 40 சதவீதம் பேர் விவசாயம் சார்ந்த பணிகளை கிராமப்பகுதிகளில் மேற்கொள்கின்றனர். ஆனால் இவர்களுக்கு விவசாயிகளுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. இவர்களுக்கென்று சொந்த விவசாய நிலம் கிடையாது. அரசு அளிக்கும் உதவிகள் மிகவும் அரிதாகவே பெண்களைச் சென்றடைகிறது.

இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அந்நிறுவனத்தில் பணி புரியும் சாதாரண ஊழியரைக் காட்டிலும் 416 மடங்கு கூடுதலாக ஊதியம் பெறுகிறார்.

அமெரிக்காவில் பெரும் கோடீஸ்வரர்கள் தொடர்ந்து பணம் சேர்ப்பதைத் தவிர்க்கின்றனர். இதனால் இவர்களிடம் நீண்ட காலமாக பணம் தங்கியிருப்பதில்லை.

ஆசிய பிராந்தியத்தில் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் பன்முக தலைமுறை கோடீஸ்வரர்கள் உள்ளனர். இவர்களிடம் உள்ள சொத்துகள் அடுத்த 20 ஆண்டுகளில் வாரிசுகளுக்கு கைமாறும். எனவே சொத்து கைமாறும்போது அதற்குரிய முறைப்படியான வரி விதிப்பு இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான பருத்தி ஆலைகள் பெரும்பாலும் சிறுமிகளை பணியில் அமர்த்துகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பருத்தி ஆலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவதாக ஐஎல்ஓ குறிப்பிட்டுள்ளதோடு 58 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

உலகின் பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது லாப நோக்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தங்களது முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக செயல்படுகின்றன.

1970களில் லண்டனில் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட லாபத் தொகை 10 சதவீதமாக இருந்தது. அது தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இது சற்று குறைவாக இருந்தபோதிலும் இதே போக்கு இங்கும் உருவாகி வருகிறது. தற்போது 50 சதவீத அளவுக்கு லாபத்தில் பங்கு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x