Last Updated : 15 Jun, 2017 08:12 AM

 

Published : 15 Jun 2017 08:12 AM
Last Updated : 15 Jun 2017 08:12 AM

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வாராக்கடனால் வங்கிகள் அச்சம்

தொலைத் தொடர்பு நிறுவனங் களின் வாராக்கடன் குறித்து வங்கிகள் அச்சம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக நான்கு முக்கிய வங்கிகள் அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை சந்தித்து தங்களது அச்சத்தை தெரிவித்துளன.

தொலைத் தொடர்பு துறை மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் வங்கிக் கடனை நிறுவனங்களால் திருப்பி செலுத்த முடியுமா என அச்சம் அடைந்துள்ளன.

அமைச்சகங்களுக்கு இடையி லான குழுவை எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட நான்கு வங்கிகளின் அதிகாரிகளும் சந்தித்துள்ளனர். முக்கியமாக தொலைத் தொடர்பு துறை கடுமையான நிதிச் சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த நிறுவனங்களால் ரூ.4.6 லட்சம் கோடி வரை கடன் சுமை ஏற்பட்டுள்ளது என்று வங்கிகள் குறிப்பிட்டுள்ளன.

இந்த கடன் நிலுவையை தொலைத் தொடர்பு நிறுவனங்களிட மிருந்து வசூலிப்பது குறித்து 2 மணி நேரத்துக்கு மேல் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கடன் நிலுவையில் பொதுத் துறை நிறுவனமான எஸ்பிஐ அளித் துள்ள கடன் மட்டும் ரூ.80,000 கோடி அளவுக்கு இருக்கும் என்று தகவலறிந்தவர்கள் கூறினர்.

அமைச்சகங்களுக்கு இடையி லான குழு மீண்டும் ஒருமுறை வங்கிகளை சந்திக்கும் என தெரி கிறது. ஆனால் இது தொடர்பாக தேதி உறுதி செய்யப்படவில்லை.

அமைச்சகங்களுக்கு இடையி லான இந்த குழுவில் தொலைத் தொடர்பு மற்றும் நிதித்துறை அதிகாரிகள் இருந்தனர். வங்கிகள் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் நிதிச் சிக்கல் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினர்.

பட்டாச்சார்யா கடிதம்

கடந்த மாதத்தில் தொலைத் தொடர்பு துறை செயலருக்கு இது தொடர்பாக எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கடன் ’திருப்பி செலுத்த முடியாத அளவுக்கு’ உயர்ந்துள்ளதாக அச்சம் தெரிவித்திருந்தார்.

புதிய நிறுவனங்கள் இலவச சேவையை அறிமுகப்படுத்துவ தால் தொலைத் தொடர்பு நிறுவனங் களின் வரிக்கு முந்தைய வரு மானம் மிகப் பெரிய அளவில் சரிவைக் கண்டு வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த துறையின் வரிக்கு முந்தைய ஆண்டு வருமானம் ரூ.65,000 கோடியாக உள்ளது. ஆனால் நிறுவனங்களின் கடன் ரூ.4 லட்சம் கோடியாக உள்ளது. இதனால் உடனடியாக தலையிட வேண்டும் என்று குறிப்பிட்டிந்தார்.

வங்கிப் பங்குகள் உயர்வு

இதற்கிடையே வராக்கடனை திரும்ப பெறுவதற்காக ரிசர்வ் வங்கியின் முயற்சிகளால் நேற்றையை வர்த்தகத்தில் வங்கிப் பங்குகள் 7.7 சதவீதம் வரை உயர்ந்தன. குறிப்பாக திவால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க 5,000 கோடிக்கு மேல் கடன் வைத்துள்ள 12 வாராக்கடன் கணக்குகளை ரிசர்வ் வங்கி அடையாளம் கண்டுள்ளது. இதன் காரணமாக வங்கிப் பங்குகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் அலகாபாத் வங்கி பங்குகள் 7.68 சதவீதம் உயர்ந்தது. ஆந்திரா வங்கி 4.38 சதவீதம், சிண்டிகேட் வங்கி 4 சதவீதம், யூனியன் பேங்க் 2.35 சதவீதம், பஞ்சாப் நேஷனல் வங்கி 2.15 சதவீதம் உயர்ந்தன.

கனரா வங்கி 2.01 சதவீதம், பேங்க் ஆப் பரோடா 1.91 சதவீதம், பேங்க் ஆப் இந்தியா 1.53 சதவீதம் ஐசிஐசிஐ 1.38 சதவீதம், பெடரல் பேங்க் 1.09 சதவீதம், எஸ்பிஐ 0.19 சதவீதம் வரை உயர்ந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x