Last Updated : 03 Nov, 2014 05:33 PM

 

Published : 03 Nov 2014 05:33 PM
Last Updated : 03 Nov 2014 05:33 PM

நிச்சயமற்ற தன்மையை எப்படி எதிர்கொள்வது?

நிச்சயமற்ற தன்மையை எப்படி எதிர் கொள்வது என்பதை பல்வேறு ஆராய்ச்சிகளும் பல கருதுகோள்களும் விளக்குகின்றன. நிலையற்ற தன்மையை எதிர்கொள்வது என்பது நாட்டையும், தனிமனிதனையும் பொறுத்தவரை மிக முக்கியமான ஒன்றாகும். பொதுவாக நிலையற்ற தன்மை நாடுகளை பொறுத்தவரை பொருளாதார அடிப்படையில் அமைந்திருக்கும், தனி மனிதனை பொறுத்தவரை பொருளாதாரத்தையும் கடந்து, தனி மனித பண்புகள் மற்றும் புத்தாக்க பயிற்சிகள் இவற்றோடு இணைந்த எதிர்த்து எழும் ஆற்றல் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

நிலையற்ற தன்மை குறித்து இதுவரை எழுதப்பட்ட கருத்துக்களை புரட்டிப்போடும் வண்ணம் நூலாசிரியர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டு அந்த ஆய்வின் முடிவுகளை தொகுத்துக் கொடுத்துள்ளனர்.

ஆனால் அந்த ஆய்வு குறித்து ஒரு சில சந்தேகங்களை பிற ஆய்வாளர்கள் எழுப்பி உள்ளனர். உதாரணமாக சரிவிகித அடிப்படையில் அல்லாமல், வெவ்வேறு நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களின் முதன்மை அதிகாரிகள் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளனர். ஆயினும் புரிதலுக்கும், அறிதலுக்கும், தெளிதலுக்கும் உதவும் வண்ணம் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2008-ம் ஆண்டில் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணிகளை தேடும்பொழுது சில வித்தியாசமான கருத்துக்களை நிறுவன தலைவர்கள் பகிர்ந்து கொண்டனர். 2008ல் தொடங்கிய வீழ்ச்சி அதற்கு முன்னதாகவே பல முனைகளில் மையம் கொண்டு, அனைத்து காரணிகளும் ஒருங்கிணைந்து வீழ்ச்சியை வேகப்படுத்தின. நடந்தது என்னவென்பதை அறிந்து கொண்டால் நாளை நடக்க உள்ள நிகழ்வுகளை முன்னெச்சரிக்கையாக எதிர்கொள்ள ஏதுவாகும். நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் முக்கிய நபராக கருதப்படுகிறார்கள்.

புயல் வீசும் நேரங்களில் கப்பலின் தலைவனை இழந்த மாலுமிகளை போல, நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் நிலையற்ற நேரங்களில் தலைமைப்பண்பு இல்லாத தலைவர்களால் தள்ளாடுகிறார்கள். சுறுசுறுப்பும் எதிர்த்து எழுந்து செயலாற்றும் திறமையும் இல்லாத நிறுவனங்கள் புயல் நேரங்களில் கடலில் அலைக்கழியும் கப்பலை போல திசை தடுமாறி வீழ்ச்சியை நோக்கி விரையும்.

பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழல் ஏற்படும்பொழுது உற்பத்தி வணிக நிறுவனங்களுக்கும் பொது மக்களுக்கும் கீழ் காணும் ஆறு குறிப்புகள் மிக மிக அவசியம்.

1. எதிர் கால திட்டங்களும், எதிர்பார்ப்புகளும்

2. வழிகாட்டும் தலைமை பண்பு

3. சுறுசுறுப்பு மற்றும் வேகம்

4. எதிர்த்து எழுதல்

5. மனம் திறந்த ஒத்துழைப்பு

6. முன்னதாகவே பகுத்தறியும் கற்றல் திறன்

எதிர்காலத் திட்டங்களும் எதிர்பார்ப்புகளும் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால் டாடா குழுமத்தை கவனிக்கலாம். டாடா மோட்டார்ஸ் 3 சக்கர வாகனங்களுக்கு மாற்றாக சிறிய லாரிகளை உற்பத்தி செய்ய முடிவு எடுத்துள்ளது. டாடா கெமிக்கல்ஸ். ஸ்வாஸ் (swach) என்ற தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை மிக குறைந்த விலையில் தயாரித்து வருகிறது. டாடா ஸ்டீல் 500 அமெரிக்க டாலரில் ஒரு வீட்டை தயாரித்து விற்கிறது.

தாஜ் ஓட்டல்கள் 20 அமெரிக்க டாலருக்கு வியாபாரங்களுக்காக பயணம் செய்பவர்களுக்கு ஒரு நாள் இரவு தங்க இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் விடுதிகளை கட்டி வருகிறார்கள். புதுமை காண்பதிலும, எதிர் கால திட்டங்கள் மற்றும் எதிர்பார்ப்பு களுக்கும் மேற்கூறியவை சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.

வழிகாட்டும் தலைமை பண்புகளுக்கு விப்ரோ இன்போ கிராஸிங் மற்றும் சன் கார்ட் இந்தியா நிறுவனங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன. மேலிருந்து கீழ் என்ற உத்தி அல்லாமல் கீழிருந்து மேல் என்ற உத்தி படி நிறுவனத் தலைவர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் மேலாளர்களுக்கு வேண்டிய சுதந்திரமும், அளவு கடந்த நம்பகத்தன்மையையும் அளித்தனர்.

வெளிப்படையான முடிவு எடுத்தலும் நேர்மையான கண்ணியமான நடைமுறையும் பெரும்பான்மையான பிரச்சினைகளை எளிதாக தீர்ப்பதற்கு உதவி செய்ததாக நிறுவன தலைவர்களின் கூற்றுக்களை மேற்கோள் காட்டுகின்றனர். சன் கார்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி இடைநிலை மேலாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் சுதந்திரமான முடிவு எடுக்க அனுமதி அளித்ததால் அவர்கள் நன்மை தரும், திறமையான முடிவுகளை எடுத்தார்கள். இது போன்று வழிகாட்டுதலுடன் கூடிய தலைமை பண்புகள் நிறுவன வளர்ச்சிக்கும் நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் மனப்பாங்கு நல்ல முறையில் செயல்படவும் பெரிதும் உதவும்.

சுறுசுறுப்பும் வேகமாக பணியாற்றும் திறமையும் கிளஸ் கோ ஸ்மித் கிளைன் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் பணியாற்றும் பாங்கிற்கும் நல்ல உதாரணம். தெளிவில்லாத, நிச்சயமில்லாத சூழ்நிலையில் வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் எடுக்கக்கூடிய முடிவுகள் நிறுவனத்தின் போக்கை மாற்றும். R&D பணிகளுக்காக 12 நபர்கள் மட்டுமே பணியாற்றிய இடத்தில் 100 நபர்களுக்கு மேல் முடிவுகள் எடுக்க வாய்ப்பளித்ததால் பணியாளர்களும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் பணியாற்ற முடிந்தது.

எதிர்த்து எழுதல் குணாதிசயம் போர்டு மோட்டார் கம்பெனியில் எவ்வாறு பயன்பாட்டில் இருந்தது என்பதை (பக்கம் 118) நூலாசிரியர்கள் தெளிவாக விவரிக்கின்றார்கள். 20-30 ஆண்டுகளாக பணியாற்றியவர்கள் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் சோர்ந்து போகாமல் எதிர்த்து எழுந்து நிறுவனத்திலேயே தொடர்ந்து பணியாற்ற முடிவு எடுத்தார்கள். போர்டு மோட்டார் கம்பெனி எத்தனை காலம் தங்களை ஆதரித்தது என்பதை எண்ணி தொடர்ந்து பணியாற்றினர்.

மனம் திறந்த ஒத்துழைப்பு மூலம் DIAGEO and Ford Motor Company தங்கள் நிறுவனத்தின் பணியாளர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தனர். பொருளாதார நிச்சயமற்ற தன்மையின்போது முகநூல் மற்றும் சமூக வலை தளங்களில் மதுபான கலவைகளுக்கும் அவற்றை எவ்வாறு உபயோகிப்பது என்பது குறித்தும் பகிர்ந்துகொண்ட விபரங்களால் DIAGEO விற்பனையில் முன்னேறியது.

முன்னதாகவே பகுத்தறியும் கற்றல் திறன் என்றால் மறைந்திருக்க கூடிய நடைமுறைகளையும், சில உத்திகளையும் உரிய முறையில் கற்று ஆய்ந்து எதிர்காலத்தில் நிகழக்கூடிய வியக்கத்தகு மாற்றங்களை எதிர்கொள்ளுதல் ஆகும். Analytics, Data Minning, Big Data, Double loop learning போன்ற கணினி சார் தகவல் உறுபுகள் நிலையற்ற தன்மையை எதிர்நோக்கவும் நிலையான தன்மையை நோக்கியும் செல்வதற்கான காரணிகள் என்றால் மிகையாகாது. இதை படிக்கும்பொழுது ஏதோ இல்லாத செயல்களை பற்றி கூறுவதை போன்ற தோற்றம் ஏற்படும்.

உதாரணமாக வால்மார்ட் என்ற சில்லறை வணிக நிறுவனம் 6 நாடுகளில் 2900 பல்பொருள் அங்காடிகளில் 7.5 டெரா பைட் (7.5 x 1024 GB) தரவுகளை கொண்டு வியாபாரத்தை மேற்கொள்கிறது.

பொருட்களை வழங்குபவர் இந்த தரவுகளை பயன்படுத்தி நுகர்வோர் வாங்குவதை ஆராய்ந்து ஒவ்வொரு தனி பல்பொருள் அங்காடிக்கும் தேவையான பொருட்களை வழங்கி புதிய வியாபார வாய்ப்புகளையும் ஆய்வு செய்து பகுத்து விற்பனையை ஊக்குவிக்கிறார்கள்.

சில சமயங்களில் இதுபோன்ற தரவுகளை உபயோகித்து வணிக வாய்ப்புகள் இருக்கும் இடத்தில் அதற்கேற்ப பொருட்களை அனுப்புவதற்கும், வணிக வாய்ப்பு குறைவான இடத்தில் அதற்கேற்ப பொருட்களை அனுப்புவதற்கும் முன்னதாகவே பகுத்தறியும் கற்றல் திறன் பெரிதும் உதவுகின்றது. நிச்சயமற்ற நிகழ்வுகள் பொருளாதாரம் சார்ந்ததாக இருப்பின் இது போன்ற ஆய்வுகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

பொருளாதார நிச்சயமற்ற தன்மை குறித்து பல நூலாசிரியர்கள் பல்வேறு காலகட்டங்களில் ஏராளமான கருத்து செறிவுகளை அளித்துள்ளனர். ஆனால் “இந்த பலாப்பழம்” ஒரு வித்தியாசமான அணுகுமுறை. உலகளாவிய நிகழ்ச்சிகளை தொழில் மற்றும் வியாபார உத்திகளோடு இணைத்து நிச்சயமற்ற பொருளாதார இடர்பாடுகளை சந்திக்க இந்த நூல் உதவும் என்பதில் ஐயமில்லை.

நிச்சயமற்ற பொருளாதார தன்மைகளை குறித்தும், மேலாண்மை ஆய்வுகள் குறித்தும் அதிக கருத்து செறிவுகள் கொண்டவர்களுக்கு இந்த பலாப்பழம் தேன் சொட்டும் சுவை தரும்.

தொடர்புக்கு rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x