

தொடர் மின்வெட்டு காரணமாக, தொழில் நெருக்கடியை சந்தித்து வந்த விசைத்தறியாளர்கள், தற்போது அதிலிருந்து சற்று விடுபட்டுள்ளனர். இந்த மகிழ்ச்சியை குலைக்கும் வகையில், உற்பத்திக்கு அடிப்படையான நூல் விலை, அபரிமிதமாக உயர்ந்துள்ளதால், விசைத்தறியாளர்களின் சோகம் தொடர்கிறது.
கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம், தேனி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. நாடு முழுவதும், 25 லட்சம் விசைத்தறிகளும், தமிழகத்தில் 7 லட்சம் விசைத்தறிகளும் உள்ளன. இவற்றில் பாப்ளின், வாயில், காடா, கான்வாஸ், லுங்கி, சர்டிங், சேலை காடா வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
விசைத்தறிகள் மூலம் உற்பத்தியாகும் காடாக்களைக் கொண்டே, பல்வேறு விதமான ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. காடா உற்பத்திக்கு மூலப்பொருளான நூலின் விலை, தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஜவுளித்தொழில், கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையின்போது, அதிக அளவிலான ஜவுளி ரகங்கள் விற்பனையாகும். வழக்கமாக, தீபாவளிக்கு முந்தைய மாதங்களில், ஜவுளி ரகங்களின் உற்பத்தி, முழுவீச்சில் நடக்கும். நூல் தயாரிக்க அடிப்படையான பருத்தியின் விலை உயர்வால், நூலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், காடா விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு ஏற்ப, ஜவுளி ரகங்களின் விலையை உயர்த்த முடியுமா என்ற கவலையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதன் காரணமாக, வழக்கமான உற்பத்தி கூட நடக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 50 லட்சம் மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றில், 30 சதவீத ஏற்றுமதி போக, மீதம் உள்ள காடா, உள்நாட்டு ஜவுளி உற்பத்திக்கு பயன்பட்டு வருகிறது. விலை உயர்வு காரணமாக, ஜவுளி உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்வதில் தயக்கம் காட்டுவதால், காடா துணிகள் தேக்கம் அடைந்துள்ளன.
நூல்விலை ஏற்றம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, அகில இந்திய விசைத்தறி சம்மேளனத்தின் தலைவர் எம்.எஸ். மதிவாணன் கூறியதாவது:
"பருத்தி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததுதான் இந்த பிரச்சினைக்கு அடிப்படை காரணம், குறைந்தபட்ச விலையைக் கொடுத்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், ஏற்றுமதி மூலம் அதிக லாபம் பார்க்கின்றனர். பருத்தி ஏற்றுமதியால் பெரும்பான்மை விவசாயிகளுக்கு பலன் இல்லை என்ற நிலையில், அதனை அரசு எதற்காக ஊக்குவிக்க வேண்டும்.
மாறாக, இந்த ஏற்றுமதி காரணமாக, உள்நாட்டு தேவைக்கான பருத்தி பற்றாக்குறை ஏற்பட்டு, அதன் காரணமாக, சாதாரண பொதுமக்கள் பயன்படுத்தும் சேலை, வேட்டி, தூண்டு, லுங்கி போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தீபாவளிப் பண்டிகையின்போது துணிகளை வாங்க வரும் பொதுமக்கள், கடும் விலை உயர்வை எதிர்கொள்ள வேண்டி வரும். 30 சதவீதம் வரை துணிகளின் விலை உயர்வு இருக்கும்.
மின்வெட்டு பிரச்சினையில் இருந்து தற்போதுதான், விசைத்தறியாளர்கள் மெல்ல விடுபட்டு வருகின்றனர். நூல் விலை உயர்வால், அந்த மகிழ்ச்சியும் நிலைக்கவில்லை. தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் உள்ள விசைத்தறியாளர்களையும், ஜவுளித்தொழிலை நம்பியுள்ளவர்களையும் காப்பாற்ற வேண்டுமானால், கச்சாப் பொருளான பருத்தியை அத்தியவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வந்து ஏற்றுமதிக்கு அரசு தடை விதிக்க வேண்டும்" என்றார்..
விசைத்தறி வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்கழக தென்மண்டல துணைத் தலைவர் வி.டி. கருணாநிதி கூறுகையில், “கடந்த 4 மாதங்களில், நூல் விலை கிலோவுக்கு 60 ரூபாய் உயர்ந்துள்ளது. 376 கிலோ கொண்ட ஒரு கேண்டி கச்சா பருத்தியின் விலை 46 ஆயிரத்திலிருந்து, 56 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால், காடா துணிகள் பெருமளவில் தேங்கியுள்ளன" என்றார்.