Last Updated : 20 Jun, 2015 10:02 AM

 

Published : 20 Jun 2015 10:02 AM
Last Updated : 20 Jun 2015 10:02 AM

வளர்ச்சிப் பாதையில் இந்தியப் பொருளாதாரம்: அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு ஜேட்லி அழைப்பு

பிரதமர்­ நரேந்திர மோடி தலைமையிலான அரசில் இந்தியப் பொருளதாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

9 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா வந்துள்ள அவர், நேற்று நியூயார்க் நகரில் முதலீட்டாளர்கள் மத்தியில் பேசினார். இந்தக் கூட்டத்தில் அமெரிக்க முன்னாள் நிதி அமைச்சரும் வார்பர்க் பின்கஸ் முதலீட்டு நிறுவனத்தலைவருமான டிமோத்தி கெய்த்னரும் கலந்து கொண்டார். வெளியுறவுக்கான கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஜேட்லி பேசியதாவது:

வாரந்தோறும் அரசின் கொள்கைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படுகிறது. இப்போது இந்தியப் பொருளாதரம் வேகமான வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் வரி விதிப்பு முறையை எளிமையாக்க நாடாளுமன்றத்தில் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக நிலம் கையகப்படுத்துவதை எளிமையாக்கும் சட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

குறைந்தபட்ச மாற்றத்தகுந்த வரி (எம்ஏடி) அந்நிய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டதற்கு விளக்கமளித்த ஜேட்லி, இது 2012-ம் ஆண்டு இருந்த வரி தாவா தொடர்பானவை. இதை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்து வருகிறது. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடும் என்று உறுதியளித்தார்.

2015 ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு எம்ஏடி விதிக்கப்படாது என்று மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மத்திய அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் பயனாக இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதம் முதல் 7.5 சதவீத அளவுக்கு உயரும் என்றார். பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எந்தெந்த பகுதிகளில் பிரச்சினை உள்ளது என்பது கண்டறியப்பட்டு அவற்றை நீக்கும் பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது என்றார். இவ்விதம் ஒவ்வொன்றாக சரி செய்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நிச்சயம் எட்டுவோம் என்று ஜேட்லி உறுதிபடக் கூறினார்.

தொழில் ரீதியான தாவாவில் அதிகபட்ச நீதிமன்ற குறுக்கீடுகள் முதலீடுகளை வெகுவாக பாதிக்கும் என்று அவர் மற்றொரு கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.

இதுபோன்ற நீதிமன்ற குறுக்கீடுகளால் வெளியிடப்பட்ட தீர்ப்புகளை இந்திய சட்டக்குழு ஆராய்ந்து வருகிறது. தேவைப்படின் இதில் உரிய திருத்தங்களைச் செய்யவும் அரசு தயாராக உள்ளதாக ஜேட்லி சுட்டிக் காட்டினார்.

நிதிச் சீர்திருத்தங்களை அடுத் தடுத்து செயல்படுத்தும்போது அதிவேகமான வளர்ச்சி அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நிச்சயம் இருக்கும் என்று ஜேட்லி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x