Published : 29 Nov 2013 12:00 AM
Last Updated : 29 Nov 2013 12:00 AM

இந்தியச் சந்தையில் நுழைகிறது டிராம்ப்

இரண்டு ஆண்டு தாமதத்துக்குப் பிறகு இங்கிலாந்தின் பிரபல மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டிராம்ப் இந்தியச் சந்தையில் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிளின் குறைந்தபட்ச விலை ரூ. 5.7 லட்சமாகும். அதிகபட்ச விலை ரூ. 20 லட்சம்.

இந்நிறுவனம் இந்தியாவில் துணை நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் விற்பனையைத் தொடங்க உள்ளது என்றும் முதல் ஆறு மாதத்தில் 500 மோட்டார் சைக்கிளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் சர்வதேச இயக்குநர் பால் ஸ்டிரௌட் தெரிவித்தார்.

நிறுவனம் இந்தியச் சந்தையில் இரண்டு ஆண்டு கால தாமதமாக நுழைவதற்குக் காரணம் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்திய சாலைகளுக்கு ஏற்ற மாதிரியான மாடல்களை வடிவமைப்பது மற்றும் இந்திய மோட்டார் பிரியர்களின் மன ஓட்டத்திற்கேற்ப உத்திகளை வகுப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறினார்.

இந்திய சாலைகளுக்கு ஏற்ற உரிய மாடல்களை உரிய தருணத்தில் அறிமுகம் செய்வோம் என்று குறிப்பிட்ட அவர், தங்கள் நிறுவனத்துக்கு ஏற்ற கூட்டாளி நிறுவனத்தைத் தேடி வருவதாகக் கூறினார்.

இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருகின்றன. விற்பனைக்குப் பிந்தைய சேவை அளிப்பது குறித்து இப்போது பரிசீலிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். இருப்பினும் இந்தியாவில் டிராம்ப் நிறுவனம் செய்ய உள்ள முதலீடு குறித்த தகவலை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.

2012-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்தியச் சந்தையில் நுழைவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு எந்த நடவடிக்கையையும் இந்நிறுவனம் மேற்கொள்ளவில்லை.

முதல் கட்டமாக மானேசரில் உள்ள வாகன ஒருங்கிணைப்பு ஆலையில் பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகிறது. முதல் கட்டமாக 4 மாடல்கள் இங்கு அசெம்பிள் செய்யப்படுகின்றன. மற்ற மாடல்கள் பிரிட்டன் மற்றும் தாய்லாந்தில் உள்ள ஆலையிலிருந்து அப்படியே இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளன என்றார்.

இந்தியர்கள் அதிகம் விரும்பும் போனேவிலே டி 100, டேடோனா 675ஆர்,

ஸ்டிரீட் டிரிபிள், ஸ்பீட் டிரிபிள், திராக்ஸ்டன் ஆகிய மாடல் மோட்டார் சைக்கிள்கள் மானேசர் ஆலையில் அசெம்பிள் செய்யப்படும். ராக்கெட் 3, டைகர் எக்ஸ்புளோரர், டைகர் 800 எக்ஸ்சி, தண்டர்பேர்ட் ஸ்டார்ம் ஆகியன இறக்குமதி செய்யப்படும் மாடல்களாகும்.

போனேவிலே மாடல் மோட்டார் சைக்கிள்தான் குறைந்த விலை (ரூ. 5.75 லட்சம்) மோட்டார் சைக்கிளாகும். ராக்கெட் 3, ரோட்ஸ்டார் ஆகியன அதிகபட்ச (ரூ. 20 லட்சம்) விலை கொண்ட மோட்டார் சைக்கிளாகும்.

நிறுவனம் விரைவிலேயே டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாதில் விற்பனையகங்களைத் தொடங்க உள்ளாக அவர் கூறினார்.

ஹைதராபாத், பெங்களூரில் தலா 2 விற்பனையகங்கள் தொடங்கப்பட உள்ளன. இதற்கு அடுத்தபடியாக டெல்லி, மும்பையில் விற்பனையகங்கள் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.

மோட்டார் சைக்கிளுக்கான முன்பதிவு டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று குறிப்பிட்ட அவர் விற்பனை ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் பிரீமியம் மோட்டார் சைக்கிளுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டே இந்தியாவிலும் தடம் பதித்துள்ளதாக ஸ்டிரெளட் கூறினார். முதல் கட்டமாக இந்தியாவிலும் டிராம்ப் மோட்டார் சைக்கிள் கிடைக்கும் என்ற மன நிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். முதல் ஆண்டில் இதை தீவிரமாக மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறினார்.

தங்கள் வாகனங்களுக்கு கடன் வழங்க ஹெச்டிஎப்சி வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அவர் கூறினார்.

ஹார்லி டேவிட்சன், பிஎம்ட பிள்யூ மோட்டார், டுகாட்டி உள்ளிட்ட பிரீமியம் மாடல் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்ய இந்தியாவில் அந்நிறுவனங்கள் விற்பனை யகங்களை அமைத்துள்ளன. அந்த வரிசையில் தாங்களும் இந்தியாவில் நுழைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

2,000 பணியாளர்களைக் கொண்டுள்ள டிராம்ப் நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் 750 விற்பனையகங்கள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x