Published : 17 Jun 2017 09:49 AM
Last Updated : 17 Jun 2017 09:49 AM

தொழில் ரகசியம் - `எளிதில் கிடைக்கும் தகவல்கள் பெரும்பாலும் தவறாக இருக்கக்கூடும்’

உங்கள் ஆங்கில அறிவை சோதிக்கலாம் என்றிருக்கிறேன். ரெடியா?

அதற்காக படக்கென்று பேப்பரை போட்டு ஓடினால் எப்படி. சிம்பிளான கேள்விதான். பயப்படாதீர்கள். ஆங்கில வார்த்தைகளில் ‘K’ என்கிற எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகள் அதிகமா அல்லது மூன்றாவது எழுத்து ‘K’ என்றிருக்கும் ஆங்கில வார்த்தைகள் அதிகமா?

படித்துக்கொண்டே போனால் எப்படி. பதில் சொல்லுங்கள்!

‘K’ எழுத்தில் துவங்கும் ஆங்கில வார்த்தை கள்தான் அதிகம் என்று நினைக்கிறீர்கள், அல்லவா?

வெரி குட். கையை கொடுங்கள். தப்பான விடையை கரெக்ட்டாக கூறியிருக்கிறீர்கள். ‘K’ என்று துவங்கும் வார்த்தைகளை விட இரண்டு மடங்கு அதிக வார்த்தைகளில் ‘K’ மூன்றாவது எழுத்தாக அமைந்திருக்கிறது. நம்பிக்கை இல்லையெனில் ஆங்கில அகராதியை பாருங்கள்.

நீங்கள் மட்டுமல்ல பெரும்பாலானோர் இக்கேள்விக்கு தவறான விடையைத்தான் தருகிறார்கள். ஏன்? எதற்கு? எப்படி?

‘K’ வில் துவங்கும் வார்த்தைகள்தான் மனதில் பட்டென்று தோன்றுகிறது. சட்டென்று ஞாபகத்திற்கு வருகிறது. Key, Kite, Kiss, King, Knife…. அதனால் ‘K’வில் துவங்கும் வார்த்தை களே அதிகம் என்று தோன்றுகிறது. இதை ‘எளிதில் கிடைக்கும் சார்புநிலை’ (Availability Bias) என்கிறார்கள் உளவியலாளர்கள். வாழ்க்கையிலும் சரி, வியாபாரத்திலும் சரி, முடிவெடுக்கும் போதும், விடையளிக்கும் போதும் அருகில் நடக்கும் விஷயத்திற்கு, டக்கென்று தோன்றும் எண்ணத்திற்கு, சமீபத்தில் கிடைத்த செய்திக்கு, சட்டென்று நினைவில் வரும் நிகழ்ச்சிக்கு முன்னுரிமை தருகிறோம். அதைக் கொண்டே முடிவுகள் எடுக்கிறோம்.

இக்கோட்பாட்டை 1973-ல் முதலில் படைத் தவர்கள் ‘அமாஸ் வர்ஸ்கி’ மற்றும் ‘டேனியல் கான்மென்’ என்னும் உளவியலாளர்கள். மனதில் சட்டென்று தோன்றுவதால் அந்த எண்ணங்கள், செய்திகள் முக்கியமானதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறோம். சட்டென்று தோன்றும் விஷயம் உண்மையாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.

நம் மனதில் அந்த பொழுது என்ன தோன்று கிறதோ, அந்த நேரத்தில் எந்த செய்தியை கேட்கிறோமோ, சமீபத்தில் என்ன நிகழ்வு நடந்ததோ அதைக் கொண்டே உலகைப் பார்க் கிறோம். அதுவே உண்மை என்று நினைக்கிறோம். அதன்படி உலகை அளக்கிறோம். பல நேரங்களில் இதுவே பொய்யாகிப் போய், தவறுகளுக்கு காரணமாகிவிடுறது. ஆனால் மனம்தான் இதை உணர மறுக்கிறது.

மனதில் ஒன்று அதிகம் தோன்றுவதால் மட்டுமே அது உண்மையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நாம் நினைப்பது போல்தான் நடக்கவேண்டும் என்ற அவசரமும் இல்லை. சில நிகழ்வுகள் மற்றவைகளை விட நம் மனதில் நீங்காமல் நிலைத்துவிடுகின்றன. இதுவே முதலில் தோன்றுவதால் இதுவே சரியானது என்று நாம் நினைப்பது தான் காரணம்.

‘என் பக்கத்து வீட்டு தாத்தாவிற்கு எழுபது வயது. இன்னமும் தினம் மூன்று பாக்கெட் சிகரெட் பிடிக்கிறார். அவர் இருமி நான் பார்த்தில்லை.’

‘எனக்கு நினைவு தெரிந்து முதல் என் பெரியப்பா டெய்லி ‘க்வாட்டர்’ அடிக்காமல் படுத்த தில்லை. என்பது வயதிலும் தனியாக டாஸ்மாக் நடந்து போய் தானே சரக்கு வாங்கி வருகிறார்.’

இப்படி பலர் கூற கேட்டிருப்பீர்கள். இதை கூறுவதால் என்ன சொல்ல வருகிறார்கள்? சிகரெட் பிடித்தால் ஆரோக்கியம் என்றா? தண்ணியடித்தால் தீர்க்காயுசாக இருக்கலாம் என்பதையா? அவர்கள் அருகில் நடந்த நிகழ்வு என்பதற்காக இது உண்மையாகிவிடுமா? வேண்டுமானால் தினம் மூன்று பாக்கெட் சிகரெட் ஊதி, டெய்லி க்வாட்டர் குடித்துப் பாருங்கள். சங்கு சத்தம் சீக்கிரம் உங்களுக்கே கேட்கும்!

அமெரிக்காவில் 9/11ல் விமானங்கள் கடத்தப்பட்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின் பலருக்கு அங்கு விமானம் ஏறவே பயம். போகவேண்டிய ஊருக்கு எத்தனை நாளானாலும் காரிலேயே போய் தொலைப்போம் என்று மக்கள் காரில்தான் சென்றார்கள். ‘வானில் பறக்கவேண்டிய விமானங்கள் கட்டிடங்களை உரசிக்கொண்டு போனால் பயம் இருக்கத்தானே செய்யும்’ என்று தோன்றுகிறதல்லவா? அமெரிக்கர்கள் செய்தது சரியென்று உங்களுக்கு படுகிறதல்லவா? இதுதான் சாட்சாத் எளிதில் கிடைக்கும் சார்புநிலை.

அத்தனை பயங்கர தீவிரவாத தாக்குதலுக்குப் பின் அமெரிக்க அரசாங்கம் விமான சேவையில் ஏகத்துக்கு கெடுபிடிகளை புகுத்தியது. ஏர்போர்ட் டுகளில் திரும்பிய பக்கமெல்லாம் செக்யூரிடி. பாத்ரூமில் கூட பாதுகாப்புக்கு ஆட்கள் நிறுத் தப்பட்டனர். அந்த நேரத்தில் இருந்தது போல் என்றைக்குமே பலமான பாதுகாப்பு இருந் திருக்காது என்பதே உண்மை. அந்த நேரத்தில் விமானத்தில் போவதுதான் இருப்பதிலேயே பாதுகாப்பானது. ஆனால் அதுதான் பலரும் எளிதில் கிடைக்கும் சார்புநிலையில் தொபுக்கடீர் என்று விழுந்து கிடந்தார்களே!

அந்த நேரத்தில் விமானத்தில் போக பயந்து ஏகப்பட்டவர்கள் தங்கள் கார்களில் செல்லத் துவங்கியதால் சாலைகளில் அளவுக்கு அதிகமான நெரிசல். கட்டுக்கடங்காத ட்ராஃபிக். எப்பொழுதும் இல்லாத அளவிற்கு விபத்துகள், அப்பொழுதுதான் அதிக அளவு நடந்தன. எந்த உயிருக்கு பயந்து விமானத்தில் பறக்காமல் காரில் சென்றார்களோ அதே உயிரை பலர் ரோட்டில் இழந்தார்கள்!

உங்கள் நண்பர்கள் பலர் கார் வைத்திருப்பதைப் பார்க்கிறீர்கள். ஊரிலுள்ள பாதி பேருக்குமேல் கார் இருக்கிறது என்று உங்கள் மனம் கூறுகிறது. இது மெகா சைஸ் மகா தவறான எண்ணம். இந்தியாவில் கார் வைத்திருப்பவர் எண்ணிக்கை நூற்றுக்கு இரண்டு சதவீதம் மட்டுமே!

வாழ்க்கையை விடுங்கள். வியாபாரத்திலும் இந்த சார்புநிலை பலரை சடாரென்று சரிவதைப் பார்க்கலாம்.

டீவியில் பிராண்டை விளம்பரம் செய்யத் திட்டமிடும் மார்க்கெட்டர் எந்த சேனல் எந்த நிகழ்ச்சியில் விளம்பரம் செய்யலாம் என்கிற மீடியா பிளானை முடிவெடுக்கும் போது அவர் வீட்டில் ‘ஒரு குறிப்பிட்ட’ சேனலில் நடக்கும் ‘ஒரு குறிப்பிட்ட பாட்டு’ போட்டியை விரும்பிப் பார்க்கிறார்கள், அதே நிகழ்ச்சியை தன் அண் ணன் வீட்டிலும் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள் என்று அதே சேனலில், அதே நிகழ்ச்சியில் விளம்பரம் செய்ய நினைப்பது தப்பாட்டம்.

சரி, இதில் விழாமல் தப்பிக்க வழி இருக்கிறதா? இருக்கிறது. முதல் காரியமாக, முடிவெடுக்கும் போது சமீபத்தில், அருகில், ஈசியாக கிடைக்கிறது என்பதற்காக ஒரு செய்தியை அப்படியே நம்பாதீர்கள். சற்றே மறந்த, அதிகம் ஞாபகத்திற்கு வராத, டக்கென்று தோன்றாத விஷயங்கள், நிகழ்வுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை நினைத்துப் பாருங்கள். அப்படிப்பட்டதை தேடிப் பிடியுங்கள்.

மனதில் தோன்றும் விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள், தப்பில்லை. அதோடு மட்டும் நிறுத்தாமல் அதற்கான ஆதாரங்களை தேடுங்கள். சரியான தகவல் உதவியை நாடுங்கள். உங்கள் எண்ணங்களை மட்டுமே நம்பாமல் மற்றவர்களின் உதவியை நாடுங்கள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அனைத்தை யும் கூட்டி கழித்து அதன் பின் முடிவெடுங்கள்.

கையில் தயாராய் இருக்கிறது என்பதற்காக மட்டுமே ஒரு செய்தியை அப்படியே நம்பி முடிவெடுக்காதீர்கள். வேறு செய்தி கைவசம் இல்லை என்பதால் இதை நம்பி முடிவெடுக் கிறேன் என்று சால்ஜாப்பு கூறாதீர்கள்.

செய்தியே இல்லாமல் இருப்பதற்கு ஏதோ ஒரு செய்தி கிடைக்கிறதே என்பதற்காக தப்பான செய்தியை பயன்படுத்தி முடிவெடுப்பது அநியாயத்திற்கு பாவம். இந்த அபத்தத்தை விளக்கும் பழைய ‘ஃப்ரான்க் சினாட்ரா’வின் ஆங்கில பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது.

‘என்னருமை காதலியே நீ என்னருகில் இல்லை ஆகவே காதலிக்கிறேன் அருகிலிருக் கும் இவளை!’

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x