Last Updated : 24 Sep, 2016 10:44 AM

 

Published : 24 Sep 2016 10:44 AM
Last Updated : 24 Sep 2016 10:44 AM

சஹாரா தலைவர் சுப்ரதா ராய் ஜாமீன் ரத்து: ஒரு வாரத்துக்குள் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு

கடந்த சில மாதங்களாக ஜாமீனில் இருந்த சஹாரா குழுமத்தின் தலை வர் சுப்ரதா ராய், மீண்டும் சிறைக்கு செல்ல இருக்கிறார். அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டிருக்கிறது. ஒரு வார காலத்துக்குள் சரணடையுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

சஹாரா குழுத்தின் சொத்துகள் ஏற்கெனவே வருமான வரித்துறை வசம் இருக்கிறது என்பதால் அந்த சொத்துகளை ஏலம் விட முடியவில்லை என பங்குசந்தை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தது. அதனை தொடர்ந்து அனைத்து விதமான இடைக்கால ஜாமீனையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

சுப்ரதா ராய் தவிர அசோக் ராய் சவுத்ரி மற்றும் ரவி சங்கர் துபே ஆகிய இரு இயக்குநர்களும் சிறை செல்ல இருக்கின்றனர். சுப்ரதா ராய் தாயார் மரணம் அடைந்ததை அடுத்து, அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்கு சுப்ரதா ராய்க்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக ஜாமீன் காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது.

முதலீட்டாளர்களிடம் முறை கேடாக திரட்டிய 24,029 கோடி ரூபாயை, கடந்த 2012-ம் ஆண்டு முதல் 15% வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தொகையை செலுத்த ராயும், அவரது குழுமமும் பல நடவடிக்கை எடுத்துவந்தது. ஆனால் தொகையை செலுத்த முடியவில்லை.

அதனை தொடர்ந்து சஹாரா குழுமத்தின் 67 சொத்துகளை பறிமுதல் செய்தது. இதில் 63 சொத்துகளை ஏற்கெனவே வருமான வரித்துறை பறிமுதல் செய்திருக்கிறது. இந்த 63 சொத்துகளில் சில சொத்துகள் விற்கப்பட்டிருக்கின்றன.

ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை எப்படி சஹாரா குழுமம் தாக்கல் செய்ய முடியும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ் தாகுர் கேள்வி எழுப்பினார். வழக்குக்கு சரியாக ஒத்துழைக்காததால் சிறைக்கு செல்வதே சரியானதாகும். மேலும் நீதிமன்றம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வழக் கறிஞர்கள் சொல்ல வேண்டாம் என்று குறிப்பிட்டார்.

சஹாரா குழுமத்தின் வழக்கறிஞர் தவான் கூறும்போது, சுப்ரதா ராயை மீண்டும் சிறைக்கு அனுப்புவது நியாயமானதாகத் தெரியவில்லை என்றார்.

காலையில் ஜாமீன் ரத்தானதை அடுத்து, மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் சுப்ரதா ராய்க்காக மதியம் நீதிமன்றத்துக்கு வந்தார். உடல் நிலை சரியில்லாத சூழலிலும், நீதிமன்றம் சென்று தவான் வாதாடிய முறைக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், இனி அவர் வாதாடமாட்டார் எனவும் கபில் சிபில் உறுதி அளித்தார்.

தலைமை நீதிபதி தாகுர் கூறும்போது நாங்கள் மரியாதை கோரவில்லை. ஆனால் நீதிமன்றத் தின் மாண்பை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த தீர்ப்பில் புதிய மாற்றம் செய்ய வேண்டும் என புதிய மனுவை சஹாரா சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு செப்-28 அன்று மாலை 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட இருக்கிறது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x