Published : 19 Jan 2014 12:00 AM
Last Updated : 19 Jan 2014 12:00 AM

தொழில் செய்ய விரும்பு

இந்த தேசத்தில் முதல் தலைமுறை தொழில் முனைவராக உருவெடுப்பதை தலைப்பிரசவத்துடன் தாராள மாக ஒப்பிடலாம்.

குறிப்பாக தமிழ் நாட்டில் வேலையில் உள்ளோர்க்கு உள்ள மரியாதை தொழில் தொடங்கியவர்க்கு கிடையாது. வீடு கொடுப்பதிலிருந்து, கடன் கொடுப்பதிலிருந்து, பெண் கொடுப்பது வரை சிக்கல் தான். ‘என்னமோ பிஸினஸ் என்கிறான்; என்ன பிஸினஸோ?’ என்பார்கள்.

குஜராத்தில் எவ்வளவு பெரிய வேலை என்றாலும் ‘வேலைக்காரன் தானே. தனக்கென்று ஒரு சின்ன தொழில் கூட இல்லையே!’ என்பார்கள். அதனால் தான் அவர்கள் படிக்கும் போதே தொழில் செய்ய கற்றுக் கொள்கிறார்கள். நம்மவர்கள் நன்கு படித்து அவர்களிடம் வேலை செய்கிறார்கள்!

கடந்த பத்து ஆண்டுகளில் இங்கும் சில மத்திமர்கள் ஐ.டி தொழில் ஆரம்பித்து சக்கை போடு போட்டாலும் பெரிதாக அது சமூக மதிப்பீட்டை மாற்றவில்லை.

சென்ற ஆண்டு நடந்த ஓர் ஆய்வில் எம்.பி.ஏ மாணவர்களில் 2% மட்டுமே தொழில் தொடங்க ஆசைபடுவதாக தெரிவித்தது எனக்கு சற்றும் அதிர்ச்சியாக இல்லை.

ஒரு புறம் பிஸினஸ் பற்றி அதீத கவர்ச்சி இருந்தாலும், தொழில் தொடங்குவது பற்றி தவறான எதிர்பார்ப்புகள் இங்கு உள்ளன. நம் சினிமாக்கள் வேறு மூன்று நிமிடப் பாடலில் நாயகர்களை தொழில் அதிபர்கள் ஆக்குகிறதல்லவா? சீக்கிரம் பணம் சம்பாதிக்கணும் என்பதற்காக தொழில் துவங்கும் அறியாமையை நான் பலரிடம் பார்க்கிறேன்.

‘எதுவும் கிடைக்காவிட்டால் பிஸினஸ் ட்ரை பண்ணு!’ என்பதையும் சிலர் சொல்ல பல முறை கேட்டிருக்கிறேன். சிலர் வேலை போனால் அடுத்த வேலை கிடைக்கும் வரை ‘பிஸினஸ்’ என்று சொல்லி சுற்றி வருவார்கள். பிறகு ‘அதெல்லாம் நமக்கு செட் ஆகாது’ என்பார்கள்.

பிஸினஸ் செய்து கையை சுட்டுக்கொண்டவர்கள் இங்கு தான். எனக்குத் தெரிந்து பல தொழில்களில் கை வைத்து எதுவும் உருப்படாமல் வாழ்க்கையை போக்கியவர்கள் அதிகம். ‘நேரம் சரியில்லை. மார்க்கெட் மோசம். நிதி பற்றாக்குறை. கடன் அதிகமாகி விட்டது. பார்ட்னர் ஏமாற்றி விட்டார்’ என்று நிறையக் காரணங்கள் சொல்வார்கள். உண்மை என்னவென்றால் தொழில் திறன்கள் இல்லாததுதான்.

இந்த தவறான தொழில் நிர்வாகத்தால், சொத்துகளை விற்று, நகைகள் அடகுக் கடையில் மூழ்கி, சொந்தங்களில் சச்சரவுகள் ஏற்பட்டு, வாழ்க்கையை தோல்வியில் முடித்துக் கொண்டு இவர்கள் பிள்ளைகளிடம் சொல்லும் பாடம்:

‘பிஸினஸ் எல்லாம் நமக்கு ஒத்து வராது. நல்ல வேலைக்கு போய் மாதம் நிரந்தர வருமானம் சம்பாதி. அது தான் நமக்கெல்லாம் நல்லது.’

தவறான தொழில் நிர்வாக முடிவுகளால் பாதிப்படைவது வியாபாரம் மட்டுமல்ல. அவர்கள் குடும்பமும் தான். Entrepreneurship எனப்படும் தொழில் முனைவோருக்கான படிப்பும் பயிற்சியும் இங்கு இருந்தாலும் இன்னமும் அது பிரபலம் இல்லை. தவிர அது பேராசிரியர்கள் கற்றுத் தர வேண்டிய பாடம் மட்டுமல்ல. தொழில் முனைவோர்கள் எடுத்துச் செல்ல வேண்டிய முயற்சி.

இந்த சூழ்நிலையில் சுப்ரதோ பக்சி எழுதியுள்ள The High Performance Entreprenuer எனும் புத்தகம் தொழில் தொடங்கும் ஆசையுள்ள அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

விப்ரோவில் வேலை செய்து விட்டு பின் அந்த செழுமையான அனுவத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் மைண்ட் ட்ரீ. அதன் நிறுவனர்களில் ஒருவரான சுப்ரதோ பக்சி எழுதியுள்ள சுய சரிதம் என்றும் ஒரு விதத்தில் சொல்லலாம்.

புத்தகம் ஆரம்பித்தவுடனேயே ஒன்று தெளிவாகத் தெரிகிறது. தொழில் தொடங்குமுன் அந்த துறை சார்ந்த நல்ல நிறுவனத்தில் வேலை செய்வது முக்கியம். ‘இந்த வியாபாரத்தில் நல்ல காசு. நுழைஞ்சா அள்ளலாம்!’ என்று வெளியிலிருந்து பேசாமல், சம்பந்தப்பட்ட வியாபாரத்தை உள்ளிருந்து பிறர் காசில் செய்து, கஷ்ட நஷ்டம் அறிந்து பின் ஒரு பிஸினஸ் பிளான் எழுதுகையில் தெளிவு கிடைக்கும். ஜெயிப்பதற்கான வாய்ப்புகளை கூட்டும். ஒரு தொழில் தொடங்கும்போது உள்ள அனைத்து சவால்களையும் எதிர்கொள்வது எப்படி என நம்பிக்கையுடன் சொல்லும் இந்த புத்தகத்தை கல்வித் திட்டத்தில் தாராளமாக சேர்க்கலாம்.

யாருடன் சேர்ந்து தொழில் செய்ய வேண்டும்? தொழில் முனைவோரின் ஆதார குணங்கள் என்ன என சொல்லும் ஒரு அத்தியாய சுருக்கம் மட்டும் இங்கு தருகிறேன். நூலின் வீச்சு புரியும்.

‘முதலில் சில கேள்விகளை உங்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்:

உங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான முடிவுகள் நீங்கள் எடுத்தவையா? பிறர் எடுத்தவையா?

செய்முறைகளை (Processes) விரும்புவீர்களா? முடிவுகள் எதுவாக இருந்தாலும் செய்முறைகளை விரும்புவீர்களா?

மிகுந்த இக்கட்டான காலத்தில் எப்படி உணர்ந்துள்ளீர்கள்? உதவியற்று நிற்பது போலா? அல்லது தன்னம்பிக்கையுடனா?

உங்களால் எளிதில் நண்பர்களை சம்பாதிக்க முடியுமா?

உடலளவில், மனதளவில் உங்களிடமும் உள்ள நிறை குறைகள் தெரியுமா?

பிறரிடம் கூச்சப்படாமல் உதவி கேட்க முடியுமா?

வாங்குவதும் விற்பதும் உங்களை உற்சாகப்படுத்துமா?

மக்களை சந்திப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சி கிட்டுமா?

எடுத்த செயலை முடிக்கும் குணமுள்ளவரா நீங்கள்?’

இந்த கேள்விக்கான பதில்கள் உங்கள் வியாபார வெற்றியை நிர்ணயிக்கும் என்றால் நம்புவீர்களா?

தொழில் முனைவோருக்கான ஆதார குணங்களாய் இவர் சொல்வது இவற்றைத்தான்: சுதந்தர உணர்வு கொண்ட போதும் மிகுந்த கட்டுப்பாடு கொண்டவர்கள். கடின உழைப்பிற்கும் குவிக்கப்பட்ட குறிக்கோளுக்கும் வேலை செய்பவர்கள். வாய்ப்புகளுக்கு ஏற்ப வளைந்து செயல்படுபவர்கள்.

‘தான்’ என்கிற அகந்தையை வேலை/ தொழிலில் காட்டாதவர்கள். மிக முக்கியமாக- பணம் சம்பாதிப்பதை விரும்புபவர்கள். எதை அதிகம் நினைக்கிறாயோ, எதற்கு மரியாதை செய்கிறாயோ, எதைப் பற்றி அதிகம் பேசுகிறாயோ அது நிச்சயம் உனக்கு வாய்க்கும் என்பது உளவியல் உண்மை. பணம் எனக்கு முக்கியமில்லை சார் என்று யாராவது பேசினால் வியாபாரத்தில் அவரை பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்.

அதே போல தெரிந்தவர், சொந்தக்காரர், கொஞ்சம் பணம் போட்டவர், ரிட்டயர் ஆகி வீட்டில் இருக்கிறார் என்று யாரையும் கூட்டாளி ஆக்காதீர்கள் என்கிறார். நிரூபிக்கப்பட்ட திறமை, நம்மிடம் இல்லாத (ஆனால் வியாபாரத்திற்கு தேவையான) திறமை, ஒளிவு மறைவு அற்ற செயல் பாடு, பல வேலைகள் செய்யும் திறமை, அப்பழுக்கில்லாத நேர்மை, சகிப்புத் தன்மை, கருத்து வேறுபாடுகளை பேசி முடிக்கவல்ல ஆற்றல் மற்றும் நகைச்சுவை தன்மை என்று பட்டியல் போடுகிறார்.

இப்படி ஒரு புத்தகம் நான் தனியாக தொழில் தொடங்கும் போது ஏன் அகப்படவில்லை என்று ஆதங்கமாக உள்ளது. பணம் மட்டும் இருந்தா நாளைக்கே பூஜை போட்டு தொடங்கிடலாம் என்று நினைப்பவர்கள் ஒரு முறை இந்த புத்தகத்தை படித்து விட்டு முடிவு செய்தல் நல்லது!

gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x