Last Updated : 06 Jan, 2017 10:09 AM

 

Published : 06 Jan 2017 10:09 AM
Last Updated : 06 Jan 2017 10:09 AM

வணிக நூலகம்: மனித தேர்வுகளின் மதிப்பு!

என்னுடைய சாய்ஸ்தான் எப்பவுமே பெஸ்ட், நான் ஒருமுறை தேர்ந் தெடுத்துவிட்டால் அப்புறம் அதிலிருந்து பின்வாங்கமாட்டேன், எனது தேர்வு மற்றவர்களைவிட கொஞ்சம் தனித்துவமானது. இவையெல்லாம் தேர்வுகளின் முக்கியத்துவத்தை உணர்த் துவதாக அறியப்படும் கூற்றுகள். ஆம், தேர்வுகள் என்பதையே மையக்கருவாக தேர்வுசெய்து, “சூஸிங் நாட் டு சூஸ்” (choosing not to choose) என்னும் இந்த புத்தகத்தை நமக்கு கொடுத்துள்ளார் இதன் ஆசிரியர் “காஸ் ஆர் சன்ஸ்டீன்”.

அன்றாட மனித வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் தேர்வுகளின் பங்கு அதிகம். செல்போன், புத்தகங்கள், கார், உடை கள் என நாம் தேர்வுகளை அனுதின மும் மேற்கொள்வதற்கான சூழ்நிலை களுக்கு பஞ்சமேயில்லை. மேலும், நமக்காக நம்மால் மேற்கொள்ளப்படும் தேர்வுகள், நமக்காக மற்றவர்களால் மேற்கொள்ளப்படும் தேர்வுகள் மற்றும் மற்றவர்களுக்காக நம்மால் மேற்கொள்ளப்படும் தேர்வுகள் என இதன் பல்வேறு பரிணாமங்களுக்கும் குறைவில்லை. அதேசமயம், நமது தேர்வுகள் சந்தோஷத்தையோ அல்லது சாபத்தையோ எளிதாக நமக்கு ஏற்படுத்திவிடும் ஆற்றலுடையது என்பதையும் சேர்த்தே கவனத்தின் கொள்ளவேண்டியதும் அவசியம்.

எழுதப்பட்ட விதி!

என்னதான் நமக்கு தேவையான வற்றை நாம் தேர்வு செய்துகொண் டாலும், ஒரு சில சூழ்நிலைகளில் நமது தேர்வுகள் ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்ட காரணிகளால் கட்டுப்படுத்தப் பட்டுவிடுகின்றன என்கிறார் ஆசிரியர்.

உங்கள் அலுவலக நண்பர்கள் உடனான சந்திப்பு மற்றும் விருந்தில் கலந்துகொள்கிறீர்கள், அங்கு சபை நாகரிகம் கருதி மெனு கார்டை மற்றவர் வசம் கொடுத்துவிடும் சூழ்நிலை. அதே போல, உங்களுக்காக ஒரு புதிய மொபைல் போனை தேர்வு செய்யமுடி கின்ற உங்களால், அதே போனின் செயல் பாட்டு முறைகளில் எவ்வித தேர்வையும் மேற்கொள்ள முடிவதில்லை. அவை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. தனக்கு பிடித்த கல்லூரியில், தனது விருப்பமான கோர்ஸை தேர்வு செய்ய முடிந்த மாணவன், அதை அக் கல்லூரியில் ஏற்கனவே நிர்ணயிக் கப்பட்ட விதிகளுக்கு உட்பட்டே படித்து முடிக்க முடிகின்றதல்லவா!.

கட்டுப்பாட்டு தேர்வு!

குறிப்பிட்ட, கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் நாம் மேற்கொள்ளும் அல்லது மேற்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்படும் தேர்வுகள் இவ்வகையைச் சேர்ந்தவை. அதாவது, விரல்களை நீட்டி அதில் ஒன்றைத் தொடச்சொல்வோமே அதேதான்.

உதாரணமாக, நீங்கள் பணிபுரியும் நிறுவனம் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஒன்றை அறிவிக்கின்றது. அனைவரும் அதில் இணைந்தே ஆகவேண்டும் என்ற நிபந்தனையுடன், மூன்று வகையான தேர்வுகளையும் அளிக்கின்றது. ஒன்று, அறிவிக்கப்பட்ட திட்டத்தை அப்படியே ஏற்றுக்கொள்வது. இரண்டு, உங்களின் விருப்பத்திற்கேற்ப அத்திட்டத்தில் சில மாற்றங்களை செய்து பின் அதில் இணைந்துக்கொள்வது. மூன்று, உங்க ளிடம் ஏற்கனவே உள்ள காப்பீட்டுத் திட்டத்தை நிறுவன திட்டத்துடன் இணைத்துக்கொள்வது. இதில் உங்கள் தேர்விற்கான வாய்ப்பு உங்களுக்கு கொடுக்கப்பட்டாலும், அது ஒரு கட்டுப் படுத்தப்பட்ட வரைமுறைக்குள்ளேயே அமைந்துவிடுகின்றது.

சுதந்திர தேர்வு!

நமது தேர்வுகளில் நமக்கு கொடுக் கப்படும் சுதந்திரமே, அத்தேர்வின் மூலம் நமக்கு கிடைக்கும் சந்தோஷத் தின் அளவினை நிர்ணயம் செய்கின் றது என்கிறார் ஆசிரியர். உங்கள் நண் பரிடமிருந்து உங்களுக்கான ஒரு சேமிப் புத்திட்டம் பரிந்துரைக்கப்படுகின்றது. நீங்கள் வேண்டுமானால் ஏற்றுக்கொள்ள லாம் அல்லது அதில் உங்களுக்கான மாற்றங்களை கோரலாம் அல்லது வெறுமனே மறுத்தும் விடலாம். இதில் எதை நீங்கள் தேர்வு செய்திருந்தாலும் அத்தேர்வின் முழு பலனும் உங்களை வந்தடையும் அல்லவா! கட்டுப்படுத்தப்படாத ஒரு சூழ்நிலையில் நாம் மேற்கொள்ளும் சுதந்திரமான தேர்வுகளில் மட்டுமே இம்மாதிரியான சவுகரியத்தை நம்மால் பெறமுடிகின்றது.

பயனுள்ள தேர்வு!

நம் விருப்பப்படி ஒரு செயலை செய்யலாம் என்பதில் நமக்கு பல சவுகரியங்கள் இருந்தாலும், அவை யெல்லாம் பெரும்பாலும் தற்காலிக சந்தோசத்தையோ அல்லது நன்மை யையோ மட்டுமே நமக்கு கொடுக் கின்றன என்கிறார் ஆசிரியர். இதுவே, நிர்ணயிக்கப்பட்ட சில விதிகளுக்கு உட்பட்டு அச்செயலை செய்யும்போது, அதில் பல அசவுகரியங்கள் இருந்தா லும் அவையெல்லாம் நீடித்த சந்தோசத் தையோ அல்லது நன்மைகளையோ நமக்கு கொடுக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ரட்கர்ஸ் பல்கலைக்கழகம் இம்மாதிரியான ஒரு நிர்ணயிக்கப்பட்ட வழிமுறையை அமல்படுத்தியது. அதாவது, அங்கு அலு வலக பிரிண்டர்களில் உபயோகப்படுத் தப்படும் பேப்பர்களில், ஒரு பக்க பிரிண் டிங் முறையை இரண்டு பக்க பிரிண்டிங் முறையாக மாற்றம் செய்தது. இதன் விளைவாக, முதல் மூன்று ஆண்டுகளில் பேப்பர் உபயோகம் ஐம்பத்தைந்து மில்லியன் தாள்களுக்கும் மேலாக குறைந்திருந்தது. முந்தைய உபயோ கத்தில் சுமார் நாற்பத்து நான்கு சதவீத அளவிற்கான குறைப்பு நிகழ்ந்துள்ளது. மேலும், இந்த அளவானது சுமார் நான்காயிரத்து அறுநூற்று ஐம்பது மரங்களுக்கு இணையானதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் இரண்டு பக்க பிரிண்டிங் முறையானது அதன் செயல்பாட்டு முறை களிலோ அல்லது பயன்பாட்டு விதத் திலோ சில நேரங்களில் அசவுகரியமான தாக கூட இருந்திருக்கலாம். ஆனால் அதன் நீண்டகால பலனை ஒப்பிடும் போது, அது நிரந்தரமான மற்றும் வலி மையான பலனாகவே இருக்கின்றது.

தவறான தேர்வு!

எல்லா நேரங்களிலும் நமக்கான தேர்வுகள் நம்வசமே இருப்பதில்லை. மாறாக, குறிப்பிட்ட ஒரு சில சூழ்நிலை களில் நமது முடிவுகள் நமக்கு தவறான தாக அமைந்துவிடுகின்றது. உதாரண மாக, உணவகத்தில் உங்களுக்கான உணவின் தேர்வை சப்ளையரின் வசமே ஒப்படைத்துவிடுவது அல்லது வெறுமனே அன்றைய சிறப்பு உணவை ஆர்டர் செய்துவிடுவது. இந்த இரண் டிலுமே உங்களின் முழுமையான விருப்ப மும், அதற்கான தேர்வும் மறைந்துவிடு வதைக் காணலாம். ஒருவேளை அந்த உணவு உங்களுக்குப் பிடிக்காத நிலையில், இவ்வித தேர்வுகள் தவறானதாகவே அமையும் அல்லவா!.

மாற்றங்கள் தேவை!

“மாற்றம் ஒன்றே மாறாதது” என்ற கூற்று வாழ்வின் அனைத்து நிலை களுக்கும் போலவே, நமது தேர்வு களிலும் பிரதிபலிக்கவே செய்கின்றது. ஆம் காலத்திற்கேற்ற மாற்றங்களை நமது தேர்வுகளில் அவ்வப்போது செய் யும்போது மட்டுமே தேர்வின் முழுமை யான பலனை அடையமுடிகின்றது என்கிறார் ஆசிரியர். உதாரணமாக, இருபது வயதிற்கான ஒரு காப்பீட்டுத் திட்டம், ஒருவரது ஐம்பது வயதில் அவருக்கு ஏற்புடையதாக இருக்க முடியாது. ஐம்பது வயதிற்குடைய மாற்றங்களை தனது தேர்விலும் அவர் மேற்கொள்ளவேண்டியது அவசியம்.

கண்காணிப்பு வேண்டும்!

ஒரு முறை மேற்கொள்ளப்பட்ட தேர்வு களின் பயணம் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்துக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக, புகழ் பெற்ற ஆன்லைன் வணிக நிறுவன மான அமேசான், தனது வாடிக்கை யாளர்களின் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில், தொடர்ந்து அவர்களுக் கான பரிந்துரைகளை மின்னஞ்சலின் வாயிலாக அனுப்பத் தவறுவதில்லை. குறிப்பிட்ட ஒரு புத்தகத்தை வாங்கும் போது, அதே ஆசிரியரால் எழுதப்பட்ட மற்ற புத்தகங்களின் விபரங்களையும் தொடர்ந்து பரிந்துரைகளாக வாடிக்கை யாளருக்கு அனுப்பிவிடுகின்றது அமே சான். இதற்கு வாடிக்கையாளர்களின் தேர்வுகளின் மீதான கவனமும், தொடர்ச் சியான கண்காணிப்பும் அவசியம்.

என்ன, எப்படி, எங்கு, எப்பொழுது, ஏன் போன்ற அடிப்படை கேள்விகளை நமது ஒவ்வொரு தேர்வின்போதும் கவனத்தில் கொண்டு, தொடர்ச்சியான கண்காணிப்பையும், தேவையான மாற்றங்களையும் செய்யும்போது நமது தேர்வு தேர்ச்சிபெற்றுவிடுகின்றது. தனது தேர்வுகளின் மீது அதீத அக்கறை கொண்ட அனைவருமே இந்தப் புத்தகத் தையும் தேர்வு செய்து படிக்கலாம்.

தொடர்புக்கு: p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x