Published : 26 Nov 2013 08:42 PM
Last Updated : 26 Nov 2013 08:42 PM

முறையாக வரி செலுத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 158-வது இடம்!

முறையாக வரி செலுத்தும் நாடுகள் பட்டியலில், உலக அளவில் இந்தியா 158-வது இடத்தில் உள்ளது.

உலக வங்கியும் பி.டபிள்யூ.சி.யும் இணைந்து, கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2012 வரையிலான காலத்தில் 189 நாடுகளில் நிலவிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி விகிதம் மற்றும் அதுதொடர்பான தகவல்களை திரட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளன.

அதன்படி, இந்தியாவில் கார்ப்பரேட் மொத்த வரி விகிதம் 62.8 சதவீதமாக உள்ளது. லாப வரி, தொழிலாளர் வரி உட்பட மொத்தம் 33 வகைகளின் கீழ் வரி செலுத்தப்படுகிறது. வரியை செலுத்துவதற்கு ஒவ்வொரு நிறுவனமும் சராசரியாக 243 மணி நேரங்களை எடுத்துக் கொள்கின்றன.

வரி செலுத்துவதற்கான கால அளவைப் பொருத்தவரை, சீனா (318 மணி), ஜப்பான் (330 மணி) ஆகிய நாடுகளைவிட இந்தியாவில் குறைவான நேரமே எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

சர்வதேச அளவில் சராசரியாக ஒவ்வொரு நிறுவனமும் வரி செலுத்துவதற்கு 268 மணி நேரங்களை எடுத்துக் கொள்கின்றன. இதுபோல, சராசரியாக மொத்தம் 26.7 வகைகளின் கீழ் வரி செலுத்தப்படுவதுடன், மொத்த வரி விகிதம் 43.1 சதவீதமாக உள்ளது.

முறையாக வரி செலுத்தும் நாடுகள் பட்டியலில் (பேயிங் டேக்சஸ் 2014) ஐக்கிய அரபு அமீரகம் முதல் இடத்திலும், கத்தார் மற்றும் சவூதி அரேபியா ஆகியவை 2 மற்றும் 3-ம் இடத்திலும் உள்ளன.

இந்தியா 158-வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா பிரேசிலைவிட (159) முன்னேறியும், ரஷியா (56) மற்றும் சீனாவைவிட (120) பின்தங்கியும் உள்ளது.

தெற்கு ஆசிய நாடுகளில் இந்தியாவில் மட்டுமே முற்றிலும் இணையதளம் வழியாக வரிப் படிவம் தாக்கல் மற்றும் வரி செலுத்தும் வசதி உள்ளது என்பது அந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x