Last Updated : 27 Sep, 2016 11:12 AM

 

Published : 27 Sep 2016 11:12 AM
Last Updated : 27 Sep 2016 11:12 AM

ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்ய: வரைவு விதிமுறை அறிக்கை வெளியீடு

நிறுவனங்கள் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பின் கீழ் பதிவு செய்வதற்கான வரைவு விதிமுறை அறிக்கையை வரித்துறையினர் நேற்று வெளியிட்டனர். ஜிஎஸ்டி கவுன்சிலின் முதலாவது கூட்டம் நடந்து முடிந்த ஒரு வார காலத்திற்குள்ளாகவே வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதிவு செய்வது, இன்வாய்ஸ் மற்றும் வரி செலுத்துவதற்கான வரைவு விதிமுறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய உற்பத்தி வரி மற்றும் சுங்கவரி வாரியம் (சிபிஇசி) இதை வெளியிட்டு இது தொடர்பான கருத்துகளை புதன்கிழமைக்குள் தெரிவிக்கும்படி குறிப்பிட்டுள்ளது.

இந்த வரைவு விதிமுறை அறிக்கையின்படி ஆன்லைனில் மூன்று நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். இந்தியர்கள் அல்லாத நிறுவனங்கள் 5 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் செலுத்த வேண்டிய வரித் தொகை முழுவதையும் முன்னதாகவே (அட்வான்ஸ்) செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஜிஎஸ்டியை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் இம்மாதம் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி-க்கான விதிமுறைகள் இறுதி செய்யப்படும்.

குறித்த காலத்திற்குள் விண்ணப்பங்களை வரி அதிகாரி பதிவு செய்யாவிடில் அத்தகைய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருத வேண்டும் என்றும் வரைவு விதிமுறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பதிவு செய்வோர் தங்களது பான் (நிரந்தர கணக்கு எண்), செல் நம்பர், இணையதள முகவரி உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

வரித்துறை அதிகாரிகள் பான் எண், ஒரு முறை பயன்படுத்தும் சங்கேத குறியீடு, ஆதார் எண் உள்ளிட்ட மனுதாரரின் விவரங்களை பரிசீலிப்பர்.

மனுதாரர் அளித்த அனைத்து விவரங்களும் சரியாக இருப்பின் மூன்று வேலை நாள்களுக்குள் விண்ணப்பம் ஏற்கப்படும்.

விண்ணப்பத்தில் போதிய விவரங்கள் இல்லாமல் போனால் அது குறித்து விண்ணப்பதாரர் களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். உரிய விளக்கங்களைப் பெற்ற பிறகே 7 வேலை நாள்களுக்குள் அது பதிவு செய்யப்படும்.

மொத்தம் 17 விதிகள் கொண்ட 26 விண்ணப்பங்களை பதிவுக்காக சிபிஇசி உருவாக்கியுள்ளது. 5 விதி முறைகள் அடங்கிய இன்வாய்ஸ், 4 விதிகள் மற்றும் 7 விண்ணப் பப் படிவங்கள் பணம் செலுத் துவதற்காக உருவாக்கப்பட் டுள்ளது. இன்வாய்ஸ் படிவத்தில் சரக்குகளின் விவரம், ஹெச்எஸ்என் குறியீடு, சரக்கின் அளவு, ஒவ்வொன்றின் விலை, அளிக்கப்பட்ட சலுகை, சரக்குக் கட்டணம், செலுத்த வேண்டிய வரி, மின்னணு குறியீடு உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும்.

எலெக்ட்ரானிக் குறியீடு இருப்பதால் சரக்குகள் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லும் போது அளிக்கலாம். இது சரக்குகள் எளிதாக கொண்டு செல்ல வழிவகுக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x