Published : 16 Feb 2014 00:00 am

Updated : 06 Jun 2017 19:36 pm

 

Published : 16 Feb 2014 12:00 AM
Last Updated : 06 Jun 2017 07:36 PM

உங்கள் பலம் எது?

“நம் பலவீனம் எவை என்று அறிந்து அவைகளைக் குறைக்கவோ அகற்றவோ தொடர்ந்து முயலுங்கள். அது தான் வெற்றிக்கு வழி.”

சரிதானே? பெரும்பான்மையான பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மேலாளர்கள் தீவிரமாக சொல்லி வரும் கருத்து இதுதான்.


இது தவறு என்கிறார் மார்கஸ் பங்கிங்ஹாம்.

கேலப் எனும் நிறுவன ஆய்வு மையத்தில் பல ஆண்டுகள் உலகின் முன்னணி நிறுவனங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மேலாளர்களை பேட்டி கண்ட அனுபவத்தில் அவர் இதைச் சொல்கிறார்.

வெற்றியின் உச்சத்தைத் தொட்ட அனைவரும் தங்கள் பலம் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, அதை தங்கள் பணிகளில் இணைத்துக் கொண்டவர்கள். தங்கள் பலவீனத்தைக் குறைக்கப் பயிற்சி எடுப்பதை விட பலத்தைப் பெருக்க பயிற்சி எடுத்தவர்கள். தங்கள் வேலைகளில் தங்கள் பலம் முழுவதும் பயன்படுமாறு பார்த்துக் கொள்பவர்கள். இதனால் வெற்றியை எளிதாகவும் இயல்பாகவும் பெறுகிறார்கள். இதுதான் Go put your strengths to work புத்தகத்தின் ஆதாரச் செய்தி.

இது தெரிந்த விஷயம் தானே என்று தோன்றும். ஆனால் உலகில் வெறும் 17% மக்களே வேலையில் தங்கள் பலம் பயன்படுவதாக சொல்லும் ஆய்வறிக்கையை படிக்கையில் மனம் திடுக்கிடுகிறது. வாய்ப்புகள் உள்ள வளர்ந்த நாட்டு மேலாளர்களே இப்படி உணர்ந்தால், பின்தங்கிய, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட வளரும் நாடுகளில் இருக்கும் பணியாளர்களின் கதி?

ஏன் இந்த நிலை?

கல்வி அமைப்பில்தான் கோளாறு என்கிறார். ஆசிரியர்கள் மதிப்பெண்கள் குறைந்த பாடத்தில் கவனம் செலுத்தச் சொல்வார்கள். பெற்றோரும் அதைப்பற்றியே பேசுவார்கள். இதற்கு கஷ்டப்படணும் என்று திரும்பத் திரும்பச் சொல்வார்கள். எது தனக்கு வராது என்பதில்தான் மாணவர்களின் முழு கவனம் செலவிடப்படும். பல சமயங்களில் இது அவர்களின் சுய மதிப்பையும் கூட பாதிக்கும்.

பலவீனத்தை தொடந்தது கண்காணித்தால் அது பலமாக மாறும் என்ற தவறான கருத்து தான் இந்த பாதிப்புகளுக்கு காரணம்.

அதனால் பலத்தின் இயக்கம் (Strengths Movement) ஒன்று தேவைப்படுகிறது என்று உணர்ந்து அதை தொடங்கி வைக்கிறார் மார்கஸ் பங்கிங்ஹாம்.

உலகின் தலைசிறந்த நிறுவனங்களுக்கு ஒரு பொது அம்சம் உண்டு: வேலைகளில் உள்ள குழுக்களில் அவர்கள் பொத்தாம் பொதுவான ஒற்றுமையை எதிர்பார்ப்பதில்லை. அதை விட ஒவ்வொரு நபரும் தம் தனித்திறமை கொண்டு குழுவிற்கு செய்யும் பங்களிப்பை உறுதி செய்கின்றன.

நூறு ஆண்டுகளாக மன நோய்கள் பற்றியே பெரிதும் பணியாற்றி வந்த உளவியல் துறையை, நேர்மறை உளவியல் (Positive Psychology) என்று புது திசைக்கு திருப்பியவர் மார்ட்டின் செலிக்மேன். துக்க நோயை போக்குவதால் மட்டுமே மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியுமா என்று ஒரு முக்கியக் கேள்வி கேட்கிறார்.

போரை நிறுத்துவது என்பது வேறு. அமைதியை ஏற்படுத்துவது என்பது வேறு. நோயை குணப்படுத்துவது என்பது வேறு. ஆரோக்கியத்தை உருவாக்குவது என்பது வேறு. பலவீனத்தைப் போக்குவது வேறு. பலத்தைப் பெருக்குவது வேறு.

இரண்டிற்கும் வெவ்வேறு மன நிலைகள், வெவ்வேறு முயற்சிகள், வெவ்வேறு உத்திகள் தேவைப்படுகின்றன.

மிக எளிய வழிமுறைகளுடன் Workbook வடிவமைப்பில் எல்லோருக்கும் புரியும் மொழியில் எழுதியிருக்கிறார். உங்கள் பலத்தை அறிய உளவியல் ஆய்வு உள்ளது. எப்படி பலத்தை வேலையில் பயன்படுத்துவது என blueprint திட்டம் உள்ளது. அவரின் வலை தளத்தில் இதுபற்றி குறும்படங்கள் உள்ளன. வழவழப்பான வண்ணப்படங்களில் கடைசிப்பக்கங்கள் வாசகனின் கற்றலை சுலபப்படுத்துகிறது.

இரு காரணங்களுக்கான இந்த புத்தகம் முக்கியம் என்று படுகிறது.

ஒன்று, இந்தியா போன்ற நாட்டில் கல்வி அமைப்பு ஆங்கிலத்தையும் கணிதத்தையும் பிரதானப்படுத்துகிறது. பொதுத் தேர்வு முடிவுகளிலும் அதிக தோல்விகள் ஏற்படுத்துபவையும் இவையே. இவைகளைத் தாண்ட முடியாமல் படிப்பை பாதியில் விட்டவர்கள் பலர். இவற்றை தள்ளி வைத்துவிட்டு தங்கள் தாய் மொழியில் வேறு துறைகளில் இவர்கள் பிரகாசித்திருக்கலாமே? பிளஸ் டூவில் பாடங்களை மாற்றிப் படிக்கும் வசதிகள் கொடுத்தால் எத்தனை மாணவர்கள் தங்கள் பலத்திற்கேற்ப வாழ்க்கையை அமைத்திருப்பார்கள்? பொருளாதாரமும், உளவியலும், உயிரியலும், இசையையும் சேர்த்து படிக்கக்கூடாது என ஏன் பிடிவாதம் பிடிக்கிறோம்?

மாணவர்கள் தங்கள் பலத்தைக் கண்டுகொள்ளவும் பயன்படுத்தவும் தக்க கல்வித்திட்டம் தேவை என்பதை இந்த புத்தகம் வலியுறுத்துகிறது.

இரண்டு, நம் நாட்டில் அனைத்தும் தலைவன் செயல் என்பது போன்ற கற்பிதங்கள் அதிகம். நம் அரசியலும் சினிமாவும் அதை முன்னிலைப்படுத்துகின்றன. ஒரே ஆள் சரியாக இருந்தால் போதும்; அவர் பலம் மட்டும் குழுவை/அமைப்பைக் காப்பாற்றும் என்ற தவறான எண்ணம் இங்கு வேரூன்றி உள்ளது. ஆனால் சிறப்பான நிர்வாகம் தனிநபரின் பலம் கொண்டு வருவதல்ல. அது கொண்டுள்ள மக்களின் பலமும் அவை முறையாக அந்த அமைப்பிற்கு பங்களிக்கும் விதங்களிலும் தான் ஏற்படுகிறது.

பணியிடங்களில் மக்கள் சிறப்பாக செயல்பட, பலத்தின் அடிப்படையில் தனிநபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும். சிறந்த குழுக்கள் உருவாக்குதலே தலைவனின் கடமை. பலத்தின் அடிப்படையில் எல்லா நிறுவன முயற்சிகளும் மேற்கொள்ளுதல் வேண்டும்.

இந்தியாவிற்கு தேவையான இந்த நிறுவன உண்மையை இந்த புத்தகம் எடுத்துரைக்கிறது.

பல பலசாலிகள் இணைந்து ஒரு பலவீன குழுவை அமைக்கும் பரிதாபங்கள் இங்கு அதிகம் நிகழ்கின்றன. எப்படி? சொல்கிறேன்... சரி, ஒரு சினிமா உதாரணம் சொல்லி நாளாயிற்றே!

பாரதிராஜா மண் சார்ந்த படைப்பாளிகளில் மேதை. மணிரத்னம் அழகியலுடன் வர்த்தக வெற்றிப் படங்கள் கொடுப்பவர். செல்வராஜ் தமிழில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களுக்கு வலுவான கதைகள் தந்தவர். ஏ.ஆர். ரஹ்மான் உலகளவில் இந்திய இசையை எடுத்துச் சென்றவர். தவிர முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தும் (நாயகன், நாயகி நீங்கலாக) தேர்ந்த நடிகர்கள் ஏற்றுச் செய்தவை. ஆயினும் தாஜ்மகால் தோல்விப்படம் ஆனது.

தனிநபர்களின் பலத்தைக் குழுவின் பலமாக மாற்றும் ரசவாதம் நிகழும்போது தான் நாயகன் போன்ற படங்கள் பிறக்கின்றன. காரணம் நாயகன் படம் இயக்குநர் மணி ரத்னத்தின் நிர்வாகத்திறமைக்கான சான்று. கமல்ஹாசன், பி.சி. ராம், பாலகுமாரன், இளையராஜா, தோட்டாதரணி போன்றோரின் பலத்தை மிகச் சிறப்பாக இசைவுத்தன்மையோடு பயன்படுத்தியதுதான் நாயகனின் வெற்றி.

“பணம் வருகிறது; இந்த வாழ்க்கையை மாற்ற முடியாது” என்ற எண்ணத்துடன் வாழ்வதா? அல்லது “இந்த வேலையில், இந்த வாழ்க்கையில் என் ஆதார பலத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளவையா?” என்று யோசிப்பதா?

இந்த புத்தகம் இந்த கேள்வியை ஏற்படுத்துகிறது.

கோயில் யானையின் தினசரி வாழ்க்கை, கும்பிட்டு விட்டு சில்லறை வாங்கிக் கொள்வது. அதுதான் அந்த யானையின் நிஜ பலமா?

டாக்டர். ஆர்.கார்த்திகேயன்- gemba.karthikeyan@gmail.com


Go put your strengths to workபுத்தகம்பலம்பலவீனம்வேலை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x