Published : 17 Feb 2014 11:39 AM
Last Updated : 17 Feb 2014 11:39 AM

பரஸ்பர நிதி நிறுவனங்களில் மாற்றம் வருவது தவிர்க்க முடியாதது

பரஸ்பர நிதி நிறுவனங்களில் மாற்றம் வருவது காலத்தின் கட்டாயம், அது தவிர்க்க முடியாததாகும். பங்கு பரிவர்த்தனை வாரியமான (செபி) மேற்கொண்டுள்ள கட்டுப்பாடுகளால் இத்தகைய மாற்றம் நிகழ்ந்தே தீரும் என்று இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் பரஸ்பர நிதி நிறுவனங்களில் ஒருங்கிணைப்பு கட்டாயம் நிகழும் என்று எல்ஐசி நொமூரா பரஸ்பர நிதித் திட்டத்தின் தலைமைச் செயல் அதிகாரி நிலேஷ் சேத் கூறினார். சிறிய நிறுவனங்களை பெரிய நிறுவனங்கள் கையகப்படுத்துவது கட்டாயம் நடக்கும் என்று அவ கூறினார்.

இதற்கு ஏதேனும் கால அவகாசம் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, சந்தையில் ஒவ்வொரு நிறுவனமும் நிலைத்து நிற்கும் காலத்தைப் பொறுத்தது என்று அவர் பதிலளித்தார்.

கடந்த வாரம் பரஸ்பர நிதி நிறுவனங்களின் மூலதன வரம்பை ரூ. 10 கோடியிலிருந்து ரூ. 50 கோடியாக செபி உயர்த்தியது. நிறுவனங்கள் சொத்துகளை நிர்வகிப்பதற்கான வரம்பு உயர்த்தப்பட்ட நிலையில் இத்தகைய கருத்தை நிலேஷ் சேத் தெரிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

செபி-யின் கணிப்புப்படி பரஸ்பர நிதி நிறுவனங்களில் 19 நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ. 50 கோடிக்கு கீழாக உள்ளது. இந்த நிறுவனங்கள் தங்களுடைய முதலீட்டு வரம்பை 3 ஆண்டு காலத்திற்குள் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பது செபியின் சமீபத்திய பரிந்துரையாகும்.

பரஸ்பர நிதி நிறுவனங்களான குவான்டம் எம்எப், ஐடிபிஐ எம்எப், பிஓஐ எம்எப், ஐஎன்ஜி எம்எப், மோதிலால் ஆஸ்வால் எம்எப் ஆகிய நிறுவனங்கள் தங்களது மூலதன வரம்பை அதிகரித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

பரஸ்பர நிதி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு அவற்றின் முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று யுடிஐ எம்எப் இயக்குநர் லியோ புரி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

பரஸ்பர நிதி நிறுவனங்களில் மிக அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் அதிக முதலீட்டை வைத்திருக்கவில்லை. இதனால் இதில் அதிக நிறுவனங்கள் உள்ளன. ஸ்திரமற்ற சூழலில் நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட வேண்டும். இதற்கு மூலதன வரம்பை அதிகரிப்பதும் ஒரு வழி என்று அவர் கூறியிருந்தார்.

சந்தையில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காக சில நிறுவனங்கள் சாத்தியமில்லாத சில திட்டங்களை அறிவித்து விடுகின்றன. அது உண்மையில் சாத்திய மில்லாததால் அது நியாயமாக நடத்தும் நிறுவனங்களின் செயல் பாட்டை பாதித்து விடுவகிறது. இது நேர்மையான நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக திகழ்வதாக புரி குறிப்பிட்டார்.

பரஸ்பர நிதி துறையில் தற்போது 44 நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதனிடையே உள்நாட்டு நிறுவனங்களிடையே ஒருங்கிணைப்பு ஏற்பட வாய்ப் பில்லை என்று சிறிய பரஸ்பர நிதி நிறுவன நிர்வாகிகள் தெரிவித் துள்ளனர்.

அதிக முதலீடு தேவைப்படும் எனக் கருதி இத்துறையிலிருந்து எந்த ஒரு நிறுவனமும் வெளியேறும் வாய்ப்பில்லை என்று குவான்டம் பரஸ்பர நிதி நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜிம்மி படேல் தெரிவித்தார். இருப்பினும் எதிர்காலத்தில் இது நடக்க வாய்ப்பிருக்கிறது என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x