Last Updated : 18 Aug, 2016 08:09 AM

 

Published : 18 Aug 2016 08:09 AM
Last Updated : 18 Aug 2016 08:09 AM

தகவல் தொழில்நுட்பத் துறை ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை

தகவல் தொழில்நுட்பத் துறை ஏற்றுமதியில் சர்வதேச அளவில் இந்தியா முன்னேறி உள்ளதாக சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. உயிரியல் மற்றும் பொருள் அறிவியல் ஆகிய துறைகளில் வளர்ந்து வருவதன் காரணமாக இந்தியா முதல்தர வரிசையில் இடம் பிடித்துள்ளது.

சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு (ஜிஐஐ) பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சர்வதேச அறிவுசார் சொத்துரிமை அமைப்பு (விப்போ) மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை இணைந்து வெளியிட்ட இந்தப் பட்டியலில் இந்தியா 61-வது இடத்தில் உள்ளது. கடந்த வருடம் இந்தியா இந்தப் பட்டியலில் 85-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் மற்றும் இன்ஜினீயரிங் பட்டதாரிகளை உருவாக்குவதில் சர்வதேச அளவில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. மேலும் மனிதவளம் மற்றும் ஆராய்ச்சி துறைகளில் 63-வது இடத்தில் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அமைப்பு விப்போ. இந்திய தொழில் கூட்டமைப்பு மட்டுமல்லாமல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகம், இன்சியாட் (INSEAD) மற்றும் சர்வதேச பிஸினஸ் பள்ளி ஆகியவற்றுடன் இணைந்து 9-வது பட்டியலை தயாரித்துள்ளது.

இந்த பட்டியலில் முன்னேறியுள்ளதன் மூலம் கண்டுபிடிப்பு துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகிறது. நிலையான மற்றும் சிக்கனமான நடவடிக்கை சார்ந்து நடைமுறைகள் இருப்பது சர்வதேச சந்தையை பிடிப்பதற்கு உதவும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்திய நிறுவனங்கள் முன்னணியில் வருவதற்கு மிகுந்த துடிப்பாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. அதற்கு கொள்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் திறமையானவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விப்போ கூறியுள்ளது பற்றி சிஐஐ இயக்குநர் ஜெனால் சந்திரஜித் பானர்ஜி கூறுகையில், இந்தியாவில் கண்டுபிடிப்பு அளவீடு அதிகரித்துள்ளது மேலும் வலுவாகவும் இருக்கிறது. இது கண்டுபிடிப்பு சார்ந்த சூழ்நிலைக்கு ஏதுவாக இருக்கிறது. இந்த சூழல் கண்டுபிடிப்பு பொருளாதாரத்தில் இந்தியாவை மேலும் முன்னேற்றி முதல் தர வரிசைக்கு கொண்டு செல்லும். தொழில் சூழ்நிலை பொறுத்தவரை இந்தியா 117-வது இடத்தில் உள்ளது. மேலும் தொழிற்கல்வி பொறுத்தவரை 118-வது இடத்தில் இருக்கிறது.

தற்போது உயிரியல் மற்றும் பொருள் அறிவியல் (மெட்டீரியல் அறிவியல்) துறையில் இந்தியா வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அரசு உதவிகளை அளித்திட வேண்டும். மேலும் இந்த துறைகளில் இயங்கும் நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்யும் தொகையை இருமடங்காக உயர்த்த வேண்டும்.

ஆராய்ச்சி மற்றும் கண்டு பிடிப்புகளுக்கு முதலீடு செய்யும் பொழுது நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை கொடுக்கும் என்று விப்போ இயக்குநர் ஜெனரல் பிரான்சிஸ் குரி தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையை மேம்படுத்த வேண்டும். நிறுவனங்கள் மற்றும் அரசு குழுக்களை அமைத்து பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி படிப்புகளை அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில் சர்வதேச கல்வி மாதிரிகளை இணைத்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்த அறிக்கை பரிந்துரை செய்துள்ளது. மேலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் முதலீடு செய்வதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உத்திகள் ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் முயற்சிகளை எடுக்க வேண்டும்

கடந்த 5 வருடங்களில் இந்தியாவில் இருந்து காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் நிறுவனங்கள் வரிசையில் இன்போசிஸ் முன்னிலையில் உள்ளது. இன்போசிஸ் 281 காப்புரிமைகள் பெற்றுள்ளது. அதையெடுத்து டிசிஎஸ் நிறுவனம் 244 காப்புரிமைகளையும், ரான்பாக்ஸி நிறுவனம் 196 காப்புரிமைகளையும், வொக்கார்ட் 160 காப்புரிமைகளையும் சன்பார்மா 84 காப்புரிமைகளையும் பெற்றுள்ளது. சிறந்த கண்டுபிடிப்பு சார்ந்த பொருளாதார குறியீட்டில் சர்வதேச அளவில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக சுவீடன், பிரிட்டன், அமெரிக்கா, பின்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன. முதன் முறையாக சீனா முதல் 25 இடங்களுக்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x