Published : 11 Apr 2014 10:23 AM
Last Updated : 11 Apr 2014 10:23 AM

வோடபோன் பங்குகளை ரூ.8,900 கோடிக்கு விற்றது பிரமள்

பிரமள் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ. 8,900 கோடிக்கு வோட போன் பங்குகளை விற்பனை செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் பிரமள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வோடபோன் நிறுவனத்தின் 11 சதவீத பங்குகளை அதாவது 4.5 கோடி பங்குகளை பிரமள் நிறுனம் விற்பனை செய்துள்ளது. வோடபோன் இந்தியா நிறுவன பங்குகளை பிரைம் மெட்டல்ஸ் நிறுவனத்துக்கு பிரமள் நிறுவனம் விற்றுள்ளது.

வோடபோன் குழும பிஎல்சி நிறுவனத்தின் அங்கம்தான் பிரைம் மெட்டல்ஸ் நிறுவனமாகும். ஒவ்வொரு பங்கும் ரூ. 1,960 விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2012-ம் ஆண்டு ஒரு பங்கு ரூ. 1,290 என்ற விலைக்கு பிரமள் நிறுவனம் வாங்கியிருந்தது. இரண்டு தவணைகளில் ரூ. 5,864 கோடி மதிப்புக்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டிருந்தன.

நீண்ட கால முதலீடு என்ற அடிப்படையில் வாங்கப்பட்டிருந்த இந்த பங்குகளுக்கு உரிய விலை கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சியோடு பங்குகளை விற்பனை செய்துள்ளதாக பிரமள் குழுமத்தின் தலைவர் அஜய் பிரமள் தெரிவித்துள்ளார்.

இந்த முதலீடு செய்ததன் மூலம் ஆண்டுக்கு 19 சதவீத வட்டியை வருமானமாக பிரமள் நிறுவனம் பெற்று வந்தது.

2011-ம் ஆண்டு பிரமள் நிறுவனம் 5.47 சதவீத வோடபோன் இந்தியா பங்குகளை ரூ. 2,893 கோடி விலையில் வாங்கியது. 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ. 3,007 கோடி முதலீட்டில் 5.5 சதவீத பங்குகளை வாங்கியிருந்தது.

முன்னதாக தொலைத் தொடர்புத் துறைக்கு வோடபோன் நிறுவனம் அனுப்பிய தகவலில், ரூ. 8,900 கோடிக்கு பிரமள் நிறுவனத்திடமிருந்து 10.97 சதவீத பங்குகளை வாங்கப் போவதாக தெரிவித்திருந்தது.

வோடபோன் நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளையும் வாங்கி முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் போவதாக கடந்த ஆண்டு அக்டோபரில் வோடபோன் நிறுவனம் தெரிவித்திருந்தது. வெளிநாட்டு நிறுவனம் இந்திய தொலைத் தொடர்புத் துறையில் 100 சதவீத முதலீடு செய்யலாம் என்ற அனுமதி அளிக்கப்பட்டதற்குப் பிறகு இத்தகைய அறிவிப்பை அந்நிறுவனம் செய்திருந்தது.

வோடபோன் நிறுவனம் 2007-ம் ஆண்டு ஹட்சிசன் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் இந்தியாவுக்குள் தடம் பதித்தது. 1,100 கோடி டாலருக்கு இந்நிறுவனத்தை வாங்கியது. அதன் வசம் 84.5 சதவீத பங்குகள் உள்ளன.

இந்தியாவில் வோடபோன் நிறுவன பங்குகளை வைத்துள்ள குறைந்தபட்ச பங்குதாரர்களிட மிருந்து பங்குகளை வாங்குவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த பிப்ரவரி மாதம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x