Published : 17 Oct 2013 12:16 PM
Last Updated : 17 Oct 2013 12:16 PM

புதுப் பொலிவில் வெளிவருகிறது ஹீரோ

இரண்டு சக்கர வாகன விற்பனையில் முதலிடம் வகித்து வரும் ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷன், தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அனைத்து மாடல்களிலும் பல புதிய அம்சங்களைச் சேர்த்து மேம்பட்ட மாடல்களாக அறிமுகப்படுத்த உள்ளது.

ஜப்பானின் ஹோண்டா மோட்டார் கார்ப்பரேஷனுடன் உறவு முறிந்து இரண்டாண்டுகளாகியும் தொடர்ந்து விற்பனையில் முதலிடத்தில் உள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன தயாரிப்புகள். தனது முன்னிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரெட்களில் புதுப்புது தொழில்நுட்பங்களைப் புகுத்தி அறிமுகப்படுத்த உள்ளது.

அவற்றில் நான்கு புதிய ரகங்களில் உள்ள சிறப்பம்சங்கள் வருமாறு:

நியூ ஸ்பிளெண்டர் ஐ-ஸ்மார்ட்: 100 சி.சி. திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, தனது பிரபல பிராண்டான ஸ்பிளெண்டரில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஐ3எஸ் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற சமயத்தில் வாகனம் தானாக நின்றுவிடுதல், தேவைப்படும்போது உடனடியாக ஸ்டார்ட் ஆவது என்ற இப்புதிய தொழில்நுட்பம் சுற்றுச் சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானதாகும். சி்க்னலில் நிற்கும்போது வாகனம் தானாக ஆஃப் ஆகிவிடும். மீண்டும் புறப்படத் தயாராக வேண்டுமெனில் ஆக்ஸிலரேட்டரை முடுக்கினாலே ஆன் ஆகிவிடும். இதன் மூலம் எரிபொருள் சிக்கனமாகும். அதிக மைலேஜ் கிடைக்கும். நெரிசல் மிக்க நகரங்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் மிகவும் ஏற்றதாகும்.

பிளஷரில் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம்(சி.பி.எஸ்): இந்நிறுவனத்தின் ஸ்கூட்டரெட்டான பிளஷெரில் ஒருங்கணைந்த பிரேக்கிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஓட்டுனரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பிரேக்கைப் பிடித்தாலே இரண்டு சக்கரமும் ஒருங்கிணைந்த வகையில் நிற்கும். இந்தத் தொழில்நுட்பத்தை ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு வடிவமைத்து காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளது.

இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் ஹீரோ மோட்டோ கார்ப்பி அனைத்து ஸ்கூட்டரெட்களிலும் அறிமுகப்படுத்தப்படலாம். இது தவிர ஆல் நியூ பிளஷரில் செல்போன் சார்ஜர் சாக்கெட், பூட்டும் வசதியுடன் கூடிய பெட்டி, ஒருங்கிணைந்த இக்னீஷியன் பூட்டு வசதி, இருக்கை பூட்டும் வசதி, சைட் ஸ்டாண்ட் இன்டிகேட்டர் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இடம்பெறுகின்றன. பெண்களைக் கவரும் வகையில் அழகிய வடிவமைப்புடன் இது வெளிவந்துள்ளது.

இம்மொபிலைஸருடன் எக்ஸ்டிரீம்: எலெக்ட்ரானிக் இம்மொபிலைஸர் எனும் தொழில்நுட்பம் 150 சிசி எக்ஸ்டிரீம் மோட்டார் சைக்கிளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உரிய சாவி போடப்படவில்லையெனில் இதன் என்ஜின் ஸ்டார்ட் ஆகாது. அத்துடன் சைடு ஸ்டாண்ட் ஸ்விட்ச். இது இக்னீஷியனுடன் தொடர்புள்ளது. எனவே சைடு ஸ்டாண்ட் போட்டிருந்தால் வண்டி ஸ்டார்ட் ஆகாது.

நியூ கரிஸ்மா மற்றும் இஸட்எம்ஆர்: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கரிஸ்மா மற்றும் இஸ்எம்ஆரை புதிய வடிவில் வெளியிட உள்ளது. இதில் ட்வின் ஹெட்லைட், ஸ்போர்டி ஹாண்டில் பார், ஸ்போர்டி பெல்லி பான், மஸ்குலர் பிரண்ட் பென்டர், புதிய மஃப்ளர் கவர், பல்ப் விங்கர், ஸ்போர்டி சீட்டிங், அகலமான டயர் உள்ளிட்ட சிறப்பம்சங்களோடு இவை வெளி வர உள்ளன.

உயர் ரக மோட்டார் சைக்கிளில் நியூ கரிஸ்மா முன்னிலை இடத்தைப் பிடிக்கும் என ஹீரோ மோட்டோ கார்ப் நம்புகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x