Published : 09 Mar 2017 10:17 AM
Last Updated : 09 Mar 2017 10:17 AM

பசியைப் போக்க உதவாத பல லட்சம் கோடிகள்!

அமெரிக்காவின் பாதுகாப்பு பட்ஜெட் தொகை, 10 சதவீதம் கூட்டப்படும் என்று அதிபர் ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்தார். இதேபோன்று சீனாவும் பாதுகாப்புச் செலவை 7 சதவீதம் அதிகரிக்கப் போவதாக அறிவித்துவிட்டது. ஜப்பான், வட கொரியா ஏற்கெனவே இச்செயலில் இறங்கிவிட்டன. இந்தியாவும்தான்.

தனது மொத்த உள்நாட்டு ‘உற்பத்தி'யில் ஒரு சதவீதம் முதல் மூன்று சதவீதம் வரை நாடுகள் தம்முடைய பாதுகாப்பு காரணங்களுக்காக செலவிடுகின் றன. (கவனிக்கவும் - வருமானத்தில் அல்ல; உற்பத்தியில்) உலக நாடு கள் அனைத்தும் சேர்ந்து சுமார் 1676 பில்லியன் டாலர்களை, பாதுகாப்புக்காக செலவிடுகின்றன. இந்திய மதிப்பில் ஒரு கோடியே ஒரு லட்சம் கோடி ரூபாய்! இது, ஒவ்வோர் ஆண்டும் செலவிடப் படுகிற தொகை.

அமெரிக்க பட்ஜெட் - சுமார் 600 பில்லியன் டாலர்; சீனா - சுமார் 200 பில்லியன் டாலர். உலக பாதுகாப்பு பட்ஜெட்டில், ஏறத்தாழ பாதித் தொகையை, இவ்விரு நாடுகளும் செலவழிக்கின்றன. இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், ஜப்பான், இந்தியா, சவுதி அரேபியா ஆகியன இவ்வரிசையில் ‘முன்னணியில்' உள்ள பிற நாடுகளாகும்.

ஒரு நாட்டின் ராணுவத்துக்காக இவ்வளவு தொகை செலவிட வேண்டுமா என்று யாரேனும் கேட்டால் அவர் தேச விரோதி யாகப் பார்க்கப்படுகிற அபாயம் இருக்கிறது. உலகம் எங்கும் எல்லா நாடுகளிலும் இதே நிலை.

உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடிப் பேசி, பாதுகாப்பு செலவைக் குறைக்க ஏதேனும் முயற்சிகள் எடுத்து வருகின் றனரா...? ஐக்கிய நாடுகள் சபை என்று ஒன்று இருக்கின்றதே.. அது வாவது ஏதேனும் செய்கின்றதா...?

பிப்ரவரி 24 அன்று, ஐ.நா. அகதிகள் முகமை, ஒரு வேண்டு கோள் விடுத்து இருக்கிறது. தெற்கு சூடானில் கலவரம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் பாதிக் கப்பட்டுள்ளனர். வறுமையின் பிடியில் சிக்கி, பஞ்சம் பட்டினியில் மாண்டு கொண்டு இருக்கும் இவர்களுக்கு உதவ வேண்டி, உலக மக்களுக்கு ஒரு விண்ணப்பம் வெளியிட்டு இருக்கிறது. இதன்படி, ‘நீங்கள் 50 டாலர் அளித்தால், அதனைக் கொண்டு, 10 நபர்கள் ஒரு வாரத்துக்கு உயிர் பிழைக்க முடியும்'.

தெற்கு சூடான் நாட்டில், ஒரு லட்சம் பேர் பட்டினியால் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். 55 லட்சம் பேர் கடும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள். பல மில்லியன் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் - குறிப்பாக ஒரு மில்லியன் குழந்தைகள்.

“உணவுக்கான உரிமை, ஒவ் வொருவரின் அடிப்படை மனித உரிமை. எந்த ஒருவரும் பசியுடன் உறங்கச் செல்ல மாட்டார் என்பதை உறுதி செய்வோம்” என்று ஐ.நா. அகதிகள் முகமை தலைவர் பிலிப்போ க்ராந்தி கூறுகிறார். இந்தக் ‘கொள்கை' நிறைவேற உலக மக்களிடம் யாசகம் கேட்கிறார்.

வடகிழக்கு நைஜீரியாவில் மிக மோசமான நிலையை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்து இருக்கிறார் உலக உணவுத் திட்ட முதன்மைப் பொருளாதார நிபுணர், உணவுப் பாதுகாப்பு ஆய்வின் தலைவர் ஆரிஃப் ஹுசைன்.

“30 லட்சம் பேருக்கு உடனடியாக உணவு தேவைப்படுகிறது; ஒரு முகாமில் 50,000 பேருக்கு ஒரே ஒரு குழாய் மூலம் தண்ணீர் ‘சப்ளை' செய்யப்படுகிறது; இவர்கள் அனைவரும் தகடு வேய்ந்த கூரையின் கீழ் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.”

ஏமன், சோமாலியா நாடுகளிலும் இதே நிலைமைதான். ஏமனில் 90% க்கும் மேலான உணவுப் பொருட் கள் இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. அதற்கான பொருளாதார வசதி அறவே இல்லை. .

`சோமாலியாவின் தென்மேற்குப் பகுதியில் மட்டும் கடந்த 48 மணி நேரத்தில்,110 பேர் பசியால் உயிர் இழந்து விட்டனர்'. கடுமையான பஞ்சம் நிலவுவதால், அதனை தேசிய பேரிடராக அறிவித்து இருக்கிறார் சோமாலிய அதிபர் முகமத் அப்துல்லாஹி முகமது.

3,63,000 குழந்தைகளைக் காப்பதற்கு, உடனடியாக 864 மில்லியன் டாலர் உதவி தேவைப் படுகிறது. இது, உலக நாடுகளின் பாதுகாப்பு பட்ஜெட்டில், வெறும் அரை சதவீதம்தான். எந்த நாடும் ராணுவ செலவைக் குறைத்துக் கொள்ளப் போவது இல்லை. சில ஆயிரம் மெட்ரிக் டன், உணவுப் பொருட்களை ஏமன், சூடான், சோமாலியா, நைஜீரியாவுக்கு அனுப்பிவைத்து, ‘மனிதாபிமான உதவி' செய்து விட்டதாய்த் தம்பட்டம் அடித்துக் கொள்ளும்.

எவ்வெந்த நாடுகள் தம்முடைய பாதுகாப்பு செலவை அதிகரிப்பதாக அறிவித்து இருக்கின்றனவோ, அவையேதாம் நேரடியாக அல்லது மறைமுகமாக ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோரை வறுமைக்குள் தள்ளி விட்டுக் கொண்டு இருக்கின்றன. இவர் களைக் கண்டிக்கக்கூட ஐ.நா. வலிமை அற்றதாக இருக்கிறது.

அமெரிக்காவும் சீனாவும் ராணுவச் செலவுகளை அதிகரிக்கப் போவதாக அறிவித்துள்ள நிலை யில் “நைஜீரியா, சோமாலியா, சூடான், ஏமனில் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.

‘உயிர்களைக் காப்பாற்ற உதவி செய்யுங்கள்’ என்று பொது மக்களிடம் ஐ.நா. சபை கையேந்துகிறது. என்ன செய்யப் போகிறோம் நாம்..?

ஆயுதக் குறைப்பு நடவடிக்கை களில் ஈடுபடுமாறு, வறுமை, பசிக்கு எதிராகத் தங்களது வளங்களைத் திருப்பிவிடுமாறு அரசுகளை நிர்ப்பந்திக்கிற மக்கள் இயக்கங்கள் உடனடியாக எழுந்தாக வேண்டும். சில நாடுகளின் அதிகாரப் பசிக்காக, பல்லாயிரக்கணக்கான சாமானியர்கள் பசியால் சாவதை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு சகித்துக் கொண்டு இருக்கப்போகிறோம்...?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x